கர்னல் ஆர் ஹரிஹரன் | அந்திமழை | பிப்ரவரி 01, 2023 | http://andhimazhai.com/magazine/current.html
ரஷ்யா உக்ரைன் மீது கடந்த ஆண்டு
பெப்ரவரி 24ந்
தேதி தொடர்ந்த போர் புத்தாண்டில் தொடர்ந்து நீடிப்பது உலக அளவில் கவலை தரும்
விஷயம். ஏற்கனவே, போரின் விளைவாக உக்ரைன் மற்றும் ரஷ்யாவில்
இருந்து மற்ற நாடுகளுக்கு கோதுமை,சோளம் மற்றும் பெட்ரோலியம்
சார்ந்த எரி பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதிகள் தடைப்பட்டுள்ளன. அதன் விளைவாக ஆசிய
ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளும்
பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க பாதுகாப்பு துறை
அனுமானப்படி இந்தப் போரில் ஈடுபட்டுள்ள இரு நாடுகளும் ஒட்டு மொத்தமாக இரண்டு
லட்சம் வீரர்களை இழந்துள்ளன. ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் கணிப்பின்படி ஜனவரி 15ந் தேதிவரை
அப்போரில் குழந்தைகள் உட்பட 7000 அப்பாவி மக்கள்
உயிரிழந்துள்ளார்கள். அமெரிக்காவின் கூற்றுப்படி 20,000 போரில்
ஈடுபடாத சாதாரண மக்கள் இந்தப் போரில் உயிர் இழந்துள்ளார்கள்.
உக்ரைனில் போரின் விளைவாக பல
முக்கிய நகரங்கள் தரை மட்டமாகியுள்ளன. ஏறத்தாழ ஒரு கோடியே 74 லட்சம் மக்கள்
அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா மனித உரிமை ஆணையம் கூறுகிறது.
ரஷ்ய அதிபர் புடின் இந்தப்
போரில் ரஷ்யா அணு ஆயுதங்களை உபயோகிக்காது என்று மற்ற நாடுகள் எண்ணக்கூடாது என பல
முறை எச்சரித்துள்ளார். அத்தகைய ஆபத்தான சூழ்நிலை இருந்த போதிலும், ஐக்கிய நாடுகள்
சபையும் அதற்கு செயலாக்கம் அளிக்கும் பாதுகாப்பு கவுன்சிலும் போரை முடிவுக்கு
கொண்டு வர உருப்படியான முயற்சிகள் எதையும் இதுவரை எடுக்கவில்லை.
இதற்கு முக்கிய காரணம், 15 அங்கத்தினர்
கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சலின் ‘வீட்டோ’ உரிமை பெற்ற நிரந்திர அங்கத்தினர்களான
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ்,
ரஷ்யா மற்றும் சைனா ஆகிய நாடுகளின் செயல்பாடே காரணம். ஆகவே அவர்கள் இணக்கம் இருந்தால்தான் உக்ரைன் போரை முடிவுக் கொண்டு வரமுடியும். அதற்கான முயற்சிகள் எதுவும் பாதுகாப்பு சபையில் இதுவரை
வெற்றி பெறவில்லை.
இந்தியாவும் பாகிஸ்தானும்
கார்க்கில் போரில் பத்து நாட்கள் மோதிக்கொண்ட போதே, அது அணு
ஆயுதப்போராக மாறும் ஆபத்து ஏற்படலாம் என்று ஐரோப்பிய, அமெரிக்க
அரசுகள் கூக்குரலிட்டன. ஆனால் அதைவிட பயங்கரமான அணு ஆயுதப் போர் மூளும் சூழ்நிலை உக்ரைனில் நிலவினாலும் அதை இந்த நாடுகள் ஏன் கண்டு கொள்ளவில்லை?
அதற்கு முக்கிய காரணம் தற்போது
உலகில் நிலவும் பிரெட்டன்வுட் ஒழுங்கு முறையாகும். இரண்டாம் உலகப்போரின் இறுதி
கட்டத்தில், அமெரிக்காவின்
தலைமையில் மேற்கத்திய நாடுகள் சர்வதேச பொருளாதாரத்தை வழி நடத்த பிரெட்டன்வுட்
ஒப்பந்தத்தை உருவாக்கினர். அந்த ஒப்பந்தத்தின் வாயிலாக உலக நாடுகள் போரைத்
தவிர்த்து வாழ பல்வேறு ஒழுங்குமுறைகள் அமைக்கப்பட்டன. அவற்றின் விளைவாகவே அமெரிக்க
டாலர் உலக பொருளாதரத்தின் அடிப்படை செலவாணியாக தற்போது கருதப்படுகிறது.
இந்த பிரெட்டன்வுட் ஒழுங்கு
முறைதான் இன்றுவரை அமெரிக்கா உலகின் ஒரே வல்லரசாக ஆளுமை செய்ய உதவுகிறது.
பிரெட்டன்வுட் ஒப்பந்தத்தில் பங்கு பெற அப்போதைய வல்லரசுகளில் ஒன்றான சோவியத்
யூனியன் மறுத்து விட்டது. சோவியத் அரசுக்கும் அமெரிக்காவுக்கும் நடந்த
பனிப்போருக்கு அதுவும் ஒரு காரணமாகும்.
அந்த பனிப்போர் காலத்தில், ஐரோப்பாவில்
சோவியத் யூனியினின் அச்சுறுத்தலை தவிர்க்க, அமெரிக்கா
மற்றும் 30 ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் ‘நேட்டோ பாதுகாப்பு கட்டமைப்பு உருவாக்கப் பட்டது. நேட்டோ படைகள் அமெரிக்காவுடன் இணைந்து ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்களில் பங்கு பெற்றன. நேட்டோ அமைப்பு 1991ல் சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு,
ஐரோப்பாவில் ஏற்பட்ட பூகோள மற்றும் அரசியல் மாற்றங்களை தனக்கு
சாதகமாக உபயோகிக்க ஆரம்பித்தது. ரஷ்யாவால் மீண்டும் ஐரோப்பிய நாடுகளுக்கு அச்சுறுதல் ஏற்படலாம் என்று
காரணம் காட்டி, அமெரிக்காவுடன் சேர்ந்து ரஷ்யாவின் எல்லை
நாடுகளில் நேட்டோ தன்னை பலப்படுத்தி வருகிறது. இந்த முயற்சியின் முன்னணியில்
ரஷ்யாவின் பங்காளி நாடான உக்ரைனும் ஒன்று. அதைக் கண்டு கலக்கம் கொண்ட ரஷ்யா
நேட்டோவின் முயற்சிகளை உக்ரைனில் தவிர்ப்பது தனது படையெடுப்புக்கு ஒரு காரணம்
என்று கூறிகிறது. இத்தகைய சந்தேக சூழ்நிலையை தவிர்க்க நேட்டோ அமைப்பு இதுவரை எந்தமுயற்சியும்
மேற்கொள்ளவில்லை.
அதற்கு மாறாக, நேட்டோ அமைப்பு
அமெரிக்காவின் உந்துதலுடன் ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் வெற்றி பெற பெருமளவில்
பொன்னும், பொருளும், ஆயுதங்களும்
அளித்து வருகின்றது. கீல் இன்ஸ்டிடுயூட் என்ற அரசு சாரா அமைப்பு கடந்த ஆண்டு ஜனவரி
24 முதல் நவம்பர் 22 வரை மேற்கொண்ட
கணிப்பின் படி, உக்ரைனுக்கு 46 நாடுகள்
ஒட்டு மொத்தமாக அளித்த உதவியின் மதிப்பு 109 பிலியன் யூரோ
(ஏறத்தாழ 9601 கோடி ரூபாய்). அந்த உதவியில் அமெரிக்காவின்
பங்கு 53 விழுக்காடு ஆகும். இந்த போர் தொடருவதற்கு, இந்த பொருளாதார மற்றும் ஆயுத உதிவிகள் உக்ரைனுக்கு தரும் உந்துதல் மற்றொரு
முக்கிய காரணமாகும்.
சீனாவுக்கும் ரஷ்யா இருந்த
நெருங்கிய உறவு 1961ல் இருந்து விரிசல் காண ஆரம்பித்த போது அதை அமெரிக்க அதிபர் நிக்சன்,
அமெரிக்காவுக்கு சாதகமாக உபயோகிக்க ஆரம்பித்தார். அவருக்கு பின்
வந்த அதிபர்களும் அமெரிக்க-சீன உறவை மேலும் வலுப்படுத்தினர். அமெரிக்கா மற்றும்
அதன் நேச நாடுகள் சீனாவில் பெருமளவில் முதலீடு செய்ய, சீனாவில்
தொழில் வளர்ச்சி உலக அளவில் பெறுகியது. அமெரிக்கா தனது சீன உறவை, தனது ஒரு முனை உலக ஆதிக்கத்துக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது.
அமெரிக்க சீன உறவில் ஏற்பட்ட
முன்னேற்றத்தை சீனாவும் தனது பொருளாதாரத்தையும் போர்படைகளின் திறனையும்
விரிவுபடுத்த உபயோகித்துக் கொண்டது. சீனா தற்போது உலக பொருளாதாரத்தில் வலிமையான
நாடுகள் பட்டியலில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. அதற்கு ஏற்றார் போல் சீன
ராணுவமும் உலகிலேயே வலிமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அமெரிக்காவின் தலைமையில்
மேற்கத்திய நாடுகளின் பிரெட்டன்வுட் ஒழுங்குமுறைக்கு எதிரான கருத்து, வளர்ச்சி
அதிகம் காணாத உலக நாடுகளில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பரவி வருகிறது. முக்கியமாக
பன்னாட்டு வணிகம் உலக மயமாக்கப் பட்ட பிறகு அதைப் பயன்படுத்தி வளர்ச்சி பெற்ற
ரஷ்யா, சீனா, இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் உலக ஒழுங்குமுறை பாரபட்சமின்றி
எல்லா நாடுகளும் பயன்படும் விதமாக மாற்றி அமைக்கப் படவேண்டும் என்று கருதத்
தொடங்கின. ரஷ்யா மீண்டும் வலிமை பெறத் தொடங்கி சீனாவுடனான தனது உறவை புதுப்பித்தது. இந்தியாவும் 1962 சீனப்
போருக்குப் பின் சிதறுண்ட சீன உறவை புதுப்பிக்க ஆரம்பித்தது. ஆகவே, இந்த நான்கு நாடுகளும் உலகின் பிரெட்டன்வுட் ஒழுங்கு முறையை மாற்றி அமைக்க
வேண்டும் என்ற எண்ணத்துடன் பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா,
இந்தியா, சீனா, மற்றும்
தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளின் ஆங்கில முதல் எழுத்து) என்ற அமைப்பை ஆரம்பித்து 2009
முதல் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கின. இந்த அமைப்பை
அமெரிக்காவும் அதன் மேற்கத்திய பங்காளி நாடுகளும் சந்தேக கண்ணுடன் பார்க்க
ஆரம்பித்தன.
2013-ம் ஆண்டுஷி ஜின்பிங் சீனஅதிபராக பதவி ஏற்ற பின்பு உலக ஆளுமை கனவுகள் சீனாவை ஆக்கிரமிக்க தொடங்கின. அதிபர் ஷி படிப்படியாக, சீன கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பிலும், சீன அரசமைப்பு மற்றும் கம்யூனிச அதிகாரத்தை நிலை நாட்ட உதவும் ராணுவத்தின் உள் அமைப்பிலும் தனது ஆதரவை பலப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு அவர் எடுத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் உலக வணிகத்தில் கையாண்ட முறைகளும் மேற்கத்திய நாடுகளிடையே சலசலப்பை ஏற்படுத்தின.
ஹாங்காங், பல ஆண்டுகளாக சீனாவின் ஒரு பகுதி ஆனாலும், ஓரளவு தன்னிச்சையுடன் இயங்கி வந்தது. ஆனால் ஷி தனது ஆளுமையின் கீழ் அதை கொண்டு வர எடுத்த தடலடி முயற்சிகள் மேற்கத்திய நாடுகளிடையே சலசலப்பை எற்படுத்தின. மேலும், தென் சீன கடலில் ஷி சீனாவின் கடல் எல்லையை விரிவாக்கி அதில் உள்ள பல குட்டித் தீவுகளின் மீது தீவிரமாக உரிமை கொண்டாட ஆரம்பித்தார். சிலவற்றை சீனா ஆக்கிரமித்தது. அதனால் சீனாவுடனான உறவை தென்கிழக்கு ஆசிய நாடுகள் சந்தேக கண்ணுடன் பார்க்க ஆரம்பித்தன. தென் சீன கடலில் கோலோச்சி வந்த அமெரிக்க கடற்படை அடிக்கடி சீன போர் விமானங்களையும் போர்கப்பல்களையும் எதிர் கொள்ள ஆரம்பித்தன. இது அமெரிக்காவின் சீன உறவில் விரிசல்களை ஏற்படுத்தின.இப்போது சீனா தைவான் தீவை ஆக்கிரமிப்பதாக பயமுறுத்தி வருகிறது.
மேலும் 2013ல் ஷி சீனாவை ஆசியா மற்றும் ஐரோப்பிய பகுதிகளுடன் இணைத்து, சீனாவின் செல்வாக்கை பெருக்க ‘பால மற்றும் சாலை இணைப்பு ( Belt and Road Initiative) திட்டத்தை பெரும் அளவில் மேற்கொண்டுள்ளார். இதன் விளைவாக சீனாவின் அரசியல் மற்றும் வணிக செல்வாக்கு தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் பெருமளவில் பரவி உள்ளது. அத்தகைய முயற்சிக்கு பாதுகாப்பு அளிக்க சீன போர்கப்பல்கள் இந்திய-பசிபிக் பெருங்கடலில் அதிக அளவில் பிரவேசிக்க தொடங்கி உள்ளன. இந்தியாவின் சீன எல்லையில், சீனப்படைகள் அத்துமீறி பிரவெசிப்பது வழக்கமாகி விட்டது.
சீனாவின் பெருகி வரும் ஆதிக்கத்தை
கட்டுக்குள் வைக்க இந்தியா, அமெரிக்கா, ஜப்பான்
மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் குவாட் என்னும் நாற்கர கட்டமைப்பை அமைத்துள்ளன.
இந்த முயற்சியை சீனா தனது ஆளுமைக்கு எதிரான சவாலாகப் பார்க்கிறது.
இத்தகைய சூழ்நிலையில், தொடர்ந்து வரும் உக்ரைன் போரில் உலகின் மூலோபாய பாதுகாப்பு அமைப்புகள் உருமாறி வருகின்றன. அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது திணித்துள்ள பொருளாதார மற்றும் வியாபாரத் தடைகளை பெரும்பான்மையான ஆசிய ஆப்ரிக்க நாடுகள் பின்பற்ற மறுக்கின்றன. இவற்றில் இந்தியா, சீனா, துருக்கி, ஈரான், தென் ஆப்ரிக்கா, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் அடங்கும். இந்த நாடுகள் தங்கள் நாட்டின் சுய நலனுக்காகவே மையம் அத்தகைய முடிவுகளை எடுக்கின்றன. ஆகவே இந்த நாடுகள் ஒருங்கிணைந்து போரை நிறுத்த முயற்சிப்பார்களா என்பது சந்தேகமே.
ஏனெனில், போரை முடிக்க பேச்சு வார்த்தைகள் துவக்கவே உக்ரைன் முன் வைத்துள்ள நிபந்தனை; ரஷ்யா வசம் உள்ள ரஷ்ய வம்சாவளியினிர் வாழும் கிழக்கு உக்ரைன் மற்றும் க்ரிமியா பகுதிகளை விட்டு முழுமையாக அகல வேண்டும் என்பதே. அதற்கு மாறாக, அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவின் நிபந்தனை - செப்டம்பர் 2022 வரை தான் ஆக்கிரமித்த உக்ரைன் பகுதிகளை தன் வசம் நிரந்தரமாக அளிக்க வேண்டும் என்பதே.
இத்தகைய இழுபறியான சூழ்நிலையில், அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் போரில் வெற்றி காணாவிட்டாலும் ரஷ்யாவின் போர்திறனை அழிக்க கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகின்றன. ஆகவே அவை நேரடியாக போரில் ஈடுபட தயக்கம் காட்டினாலும், பொன்னையும் பொருளையும் அளித்து உக்ரைனை உசுப்பி விட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த சமயத்தில் கோவிட் 19 தொற்று மகாமாரியின் விளைவாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் உலக பொருளாதாரத்தில் மிகப்பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தியா ஓரளவு இதன் தாக்கத்தில் இருந்து தன்னை மீட்டுக் கொண்டாலும், அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு இந்த ஆண்டும் தொடரும் என்பது வல்லுனர்கள் கணிப்பு. உலக பொருளாதார தட்டுப்பாடு உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நாவை ஊக்குவிக்குமா? அதுவும் சந்தேகமே. ஆகவே வரும் மாதங்களில் போரின் உக்கிரம் குறைந்து, இரு நாடுகளும் களைத்தாலும் சீற்றம் காட்டுவதில் குறைவு இருக்காது.
இந்த இழுபறி இன்னும் எவ்வளவு
காலும் நீடிக்கும்? தற்போது,
போரின் போக்கை அனுமானிக்க, ஜெலன்ஸ்கி மற்றும்
புடின் ஆகியோரின் ஜாதகத்தை டி.வி.ஜோசியர்தான் பார்க்க வேண்டும்.