Monday, 11 April 2016

Republication of my Tamil article: Nehruvukkupin 50 Aandukal

நேருவுக்குப் பின் 50 ஆண்டுகள் 

கர்னல் ஹரிஹரன்

திங்கட்கிழமை,   மார்ச்   31 , 2014  05:38:34 IST

காந்திஜியால் தனது வாரிசு என்று வர்ணிக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு, மகாத்மாவுக்கு அடுத்த படியாக நம் நாட்டு மக்களால் மிகப் பெரும் தலைவராக இன்றும் மதிக்கப் படுகிறார். இன்று சில அரசியல்வாதிகள் எவ்வளவுதான் சர்தார் படேலைப் புகழ்ந்தாலும், அவர்கள் இருவரும் வாழ்ந்த கால கட்டத்தில் அகில இந்திய அளவில் நேருவே தனிப்பெரும் தலைவராய் திகழ்ந்தார்.  அவர் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட பிறகு தொடர்ந்து 17 ஆண்டுகள் பிரதமராக சேவை செய்ததில் வியப்பேதுமில்லை. 


சுதந்திர இந்தியாவில் பிரதமராகப் பணிபுரிந்தவர்களில் நேரு ஒருவர் மட்டுமே ஆழ்ந்த தீர்க்கதரிசனத்துடன் செயல்பட்டார் என்று கூறவேண்டும். பிரதமர் நேருவின் தொலைநோக்குச் செயல்பாட்டின் விளைவாகத்தான், அவர் ஆட்சியின் போது தொடங்கப் பட்ட பல்வேறு திட்டங்களின் பயனை நாம் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். 


இன்று நாட்டில் தழைக்கும் கனரகத் தொழில் வளங்களுக்கும், கட்டப்பட்ட நீர் தேக்கங்களுக்கும், மின்சார உற்பத்தி நிலையங்களுக்கும்  அன்று நேரு செயல் படுத்திய ஐந்தாண்டு திட்டங்கள் முக்கியமான காரணமாகும். மேலும் இன்று இந்தியாவுக்கு புகழ் சேர்க்கும் அணு ஆராய்ச்சியில் முன்னேற்றம், ஏவு கணை வடிவமைக்கும் சாதனைகள், சந்திரனையே எட்டும் விண்வெளிக் கலங்கள் அமைக்கும் திறன் ஆகிய அனைத்துக்கும் அன்று நேரு தேசிய அளவில் துவக்கிய விஞ்ஞான மற்றும் விண்வெளித் துறைகளுக்கான உயர் கல்வி நிலையங்கள் மற்றும் ஆய்வுக்கூடங்களே காரணமாகும். 


அப்படி இருந்தும் கடந்த 50 ஆண்டுகளில் நேருவின் ஆட்சிக்காலத்தில் மேற்கொண்ட சில செயல்பாடுகளால் ஏற்பட்ட விளைவுகளாலும், அவருக்குப்  பின் பதவியில் தொடர்ந்த நேருவின் வாரிசுகளின் குடும்ப அரசியல் ஆதிக்கத்தாலும் நேருவின் புகழ் இன்று சற்று மங்கி இருக்கிறது.  

ஜவஹர்லால் நேருவை விமரிசிக்க நான் அரசியல்வாதியோ அல்லது அரசியல் ஆய்வாளரோ அல்ல. இருந்தாலும் நான் நேருவைப் பற்றி எழுத பல காரணங்கள் இருக்கின்றன. என் தந்தை சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்று சிறை சென்றவர். ஆகவே நான் தேசியப் பற்று மிகுந்த குடும்பச் சூழ்நிலையில் வளர்ந்தவன். என் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுத்திய இரண்டு இந்தியத் தலைவர்களில் நேருவும் ஒருவர் (இன்னொன்று மகாத்மா காந்தி). அவர் தலைமையில் வளர்ந்த இந்தியாவில்தான் நான் என் இளமைக் கனவுகளைக் கண்டேன். 


நேருவின் தலைமையில் இந்தியா உலக அளவில் ஒரு அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியதைக் கண்டு பெருமை அடைந்த பல்லாயிரக் கணக்கான  இளைஞர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். நேரு சீனாவுடன் கை கோத்து, இந்தி-சீனி பாய் பாய் என்ற கோஷம் நாடெங்கும் ஒலிக்க அமெரிக்க மற்றும் சோவியத் வல்லரசுகளை ஒதுக்கி அணி சேராத நாடுகளின் இயக்கத்தைத் துவக்கிய போது, அதை நான் வரவேற்றேன். நேரு ஆவடி காங்கிரஸ் மாநாட்டில் இந்தியாவின் சோஷலிசப் பாதையை வகுத்த போது அதை ஆமோதித்தவர்களில் நானும் ஒருவன். அந்தக்கால கட்டத்தில் சோவியத் தலைவர்கள் மற்றும் சீனப் பிரதமர் சூ என் லாய் இந்தியா வந்தபோது நேருவை அவர்களுடன் சென்னையில் பார்த்த நினைவுகள் இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கின்றன.

  
இன்று நான் ஜவஹர்லால் நேருவின் கடந்த காலச் செயல் பாட்டை பல கோணங்களில் இருந்து  பார்க்கமுடிகிறது. அவற்றில் அவருடைய மதிப்பிட முடியாத உலகளாவிய தொலை நோக்கு, ஜனநாயக ஆட்சி முறையில் இருந்த ஆழ்ந்த நம்பிக்கை, தெளிவான சிந்தனை ஆகிய நல்ல அம்சங்களே அதிகம். அதே நேரத்தில் சில குறைபாடுகளும் தெரிகின்றன. அப்படி இருந்தாலும் என்னுடைய தனி மதிப்பீட்டில் நேருவின் ஆட்சிக் காலத்தின் முதல் பத்தாண்டுகள் சுதந்திர இந்தியாவின் பொற்காலம் என்றே கூறுவேன். 


அரசு நிர்வாகத்தில் நேரு பொதுவாக பிரிட்டிஷ் செயல்பாடுகளை பெரும் மாற்றம் இல்லாமல் பின்பற்றியதால் காலனி ஆதிக்கத்தின் பாதுகாப்புக்காகவே செயல்பட்ட அரசின் ஆட்சிப்பணித் துறை, மற்றும் போலீஸ் ஆகிய அங்கங்கள் இன்றும் மேலாதிக்க மனப்பான்மையுடன்  செயல்படும் அவலம் தொடர்கிறது. நேரு தசாப்தங்களில் அவருடன் இருந்த அரசியல் தலைவர்களுக்கு சுதந்திரப் போராட்டத்தின் போது பொதுமக்களுடன் இருந்த நேரடித் தொடர்பு தொடர்ந்ததால் ஆட்சிக் குறைபாடுகள் அப்போது அதிகமாகத் தெரியவில்லை.


ஏனோ நேரு ஜனநாயகத்தில் வைத்திருந்த திடநம்பிக்கை காங்கிரஸ் கட்சியின் உள் அமைப்பில் பிரதிபலிக்கவில்லை. அதைச் சீராக்க நேரு அதிகம் ஈடுபாடு காட்டியதாகவும் தெரியவில்லை. நேருவுக்குப் பிறகு இளைய தலைமுறைத் தலைவர்களை வளர்க்காமல் காங்கிரஸ் கட்சி நேரு குடும்ப வாரிசுகளின் தலைமையை நம்பியே இன்றும் செயல் படுவதற்கு இது ஒரு காரணமாகும். அத்தகைய வாரிசுக் கலாச்சாரம் பெரும்பாலான அரசியல் கட்சிகளில் தற்போது பரவியுள்ளது. ஆகவேதான் அரசியல் கட்சிகள் ஜனநாயகச் செயல்பாடுகளை ஒதுக்கிவிட்டு மூத்த தலைவர்களின் வாரிசுகளை வைத்துக் கொண்டு அரசியல் வியாபாரம் நடத்தும் வெட்கக்கேட்டை நாம் பார்க்கிறோம்.    


மேலும் நேருவின் மறைவுக்குப் பின்பு ஏற்பட்ட அரசியல் கலாச்சார மற்றும் நாகரீக வக்கிரங்களால் அரசியல் தலைவர்கள் பொதுமக்களைத் தவிர்த்து சுய ஆதாயத்துக்காக இடைத் தரகர்களை உபயோகிப்பது வழக்கமாகிவிட்டது. இதற்கு ஆட்சிப்பணி அதிகாரிகள் துணை போவதால், அரசின் அங்கங்கள் பெரும்பாலும் அரசியல் தலைவர்களின் சுயநலத்துக்காகவே உபயோகிக்கப் படும் கருவிகளாக உருவாகியுள்ளன. இதனால் அரசின் நல்ல மக்கள் நலத் திட்டங்கள்கூட செயலாக்கத்தில் வெற்றி பெறுவதில்லை. 

நேரு வகுத்த வழிமுறைகளின் முக்கிய குறைபாடுகள் வெளி உறவையும் பாதுகாப்புத் துறையையும் சார்ந்தவை. வெளி உறவுத் துறையில் நேரு அதிக ஈடுபாடு காட்டினாலும், அவர் செயல்பாட்டில் ஒரு வெகுளித் தனம் இருந்தது. உதாரணமாக இந்தியா சுதந்திரம் அடைந்த புதிதில் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர எல்லையில் ஊடுருவி பல பகுதிகளை ஆக்கிரமித்தது. அவர்களைத் துரத்தியடித்த இந்திய ராணுவம் போரைத் தொடர்ந்து நடத்தி அவர்களை முறியடிக்க வேண்டும் என்றபோது அதை ஏற்க  மறுத்தார். அதற்கு மாறாக ஐ.நா. சபையில் அப்பிரச்சினையை முன் வைத்து போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டார். அதன் விளைவால் இன்று வரை காஷ்மீரப் பிரச்சினை தீராத தலை வலியாக நீடிக்கிறது. 


நேருவுக்கு வெளி உறவுத்துறையில் ஏற்பட்ட மிகப் பெருத்த தோல்விக்கு 1962-ல் சீனாவுடன் நடந்த போர் ஒரு உதாரணமாகும். நேரு சீனாவுடன் நல்லுறவை வளர்க்க எவ்வளவோ முயன்றாலும் 1959-லிருந்து இந்திய சீன உறவில் விரிசல்கள் ஏற்படத் தொடங்கின. சீனப் படைகள் திபெத் நாட்டை ஆக்கிரமித்ததின் விளைவால் அச்சுறுத்தலுக்கு ஆளான திபெத்தின் தனிப்பெரும் தலைவரான தலாய் லாமா தனது பல்லாயிரக் கணக்கான மக்களுடன் இந்தியாவில் அகதிகளாகச் சரண் புகுந்தார். 


சுதந்திர நாடான திபெத்தை சீனா ஆக்கிரமித்ததை நேரு கண்டிக்காதது மட்டுமல்லாமல் திபெத்தின் மீது சீனாவுக்கு ஓரளவு உரிமை (suzareinty)  என்று கூறியது பலருக்கும் வியப்பையும், எனக்கு பெரும் ஏமாற்றத்தையும் அளித்தது. நேரு சீனாவின் ஆதிக்கப் போக்கை கண்டிக்காமல் விட்டதே பிற்காலத்தில் இந்திய-திபெத் எல்லையில் பல பகுதிகளின் மீது  சீனா முன்னுரிமை கொண்டாடுவதற்கு வித்திட்டது என்று நான் நம்புகிறேன்.  


இந்திய-சீன உறவில் சரிவு தொடர்ந்த போது நான் பத்திரிகைத் துறைப் படிப்பை முடித்துவிட்டு மும்பையில் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது திபெத்தியத் தலைவர்கள் பலரை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சுதந்திரமாக தங்கள் நாட்டில் வாழ்ந்த அவர்கள் சீரழிந்து அகதிகளாய் வாழ்ந்த அவலம் என் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்பட்டது. 


அதைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் 1962-ம் ஆண்டு சீனாவுடன் நடந்த போரில் தோல்வி அடைந்தபோது தலை குனிந்த பல்லாயிரக்கணக்கான இந்தியர்களில் நானும் ஒருவன். எனக்கு ஏற்பட்ட மனக்கொதிப்பில் நான் பத்திரிகைத் தொழிலை விட்டு விட்டு ராணுவத்தில் சேர ஒரே நாளில் முடிவெடுத்தேன் என்பதை நினைத்துப் பார்த்தால் இன்று எனக்கே வியப்பாய் இருக்கிறது. நேருவின் சீன விவகாரம் ஏற்படுத்திய மனக்கசப்பு தான் அந்த உந்துதலுக்கு முக்கிய காரணமாகும்.  

அப்படித் துவங்கிய என் ராணுவ சேவை ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் நுண்ணறிவுத் துறையில் (Intelligence corps) தொடர்ந்த போது, இந்திய-சீன எல்லைப் பகுதிகளில் சேவை செய்யும் வாய்ப்புக்கள் கிடைத்தன. அப்போது இந்திய அரசின் பாதுகாப்பு மற்றும் அரசியல் கொள்கைகளைப் பற்றி எனக்கு ஓரளவு பரிச்சயம் ஏற்பட்டது. அந்தப் பின்னணியில் பார்க்கும் போது, இந்திய ராணுவத்தை நேரு 1962 போரில் மெத்தனமாக கையாண்ட விதத்தில் குறைபாடுகள் தென்படுகின்றன. 

ஜெர்மானிய போர்க்கலை நிபுணரான காரல் வான் க்ளாஸ்விட்ஜ் போர் என்பது அரசியலை மாற்று முறையில் தொடர்வதே ஆகும் என்று விளக்கம் கூறினார். இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் ராஜதந்திரம் தோல்வியுற்றபோது ஜெர்மனியின் மீது ராணுவத்தால் அழுத்தம் ஏற்படுத்தி கடைசியில் ஹிட்லரை படு தோல்வி அடையச் செய்தது க்ளாஸ்விட்ஜின் போர்த் தத்துவத்தின் செயல்பாட்டுக்கு ஒரு உதாரணமாகும். நேரு அவ்வாறு ராணுவத்தை உபயோகிக்காமல், ராணுவத்தின் யோசனைகளை விலக்கி, சீனாவின் பேச்சை நம்பி மெத்தனமாக இருந்ததே அவர் 1962-ல் அடைந்த பின்னடைவுக்குக் காரணமாகும். அதன் தாக்கத்திலிருந்து நேரு மீளவே இல்லை. அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் நோய் வாய்ப் பட்டவர் மே 1964-ல் மறைந்தார். அந்தப் போரின் தாக்கத்தை இன்றும் இந்திய-சீன உறவில் ஏற்படும் உரசல்களில் நாம் பார்க்கிறோம். 


காந்தீயவாதியான நேரு அஹிம்சா வழியில் பெரும் நம்பிக்கை வைத்திருந்தார். சுதந்திரப் போராட்டத்தின் போது பிரிட்டிஷ் அரசு ராணுவத்தை அடக்கு முறையின் கருவியாகப் பயன்படுத்தினார்கள். அதனால் அதே ராணுவம் சுதந்திர இந்தியாவின் ராணுவமாக மாறிய பிறகு காங்கிரஸ் தலைவர்கள் ராணுவத்தை ஓரளவு சந்தேகக் கண்ணோடு பார்த்தார்கள். நேருவுக்கும் ராணுவத்தை கலந்து ஆலோசித்து முடிவெடுப்பதில் தயக்கம் இருந்ததற்கு இது ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம். 


நேரு மறைந்த பின்பு, பாகிஸ்தானைப் போல இந்தியாவிலும் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுமோ என்ற சந்தேகம் இன்றும் சில அரசியல் தலைவர்களிடையே இருப்பதாகத்தான் தெரிகிறது. அதுவே தற்போதைய அரசியல் கலாச்சாரமாக மாறிவிட்டது ராணுவத்தின் துரதிர்ஷ்டமே. இதன் விளைவாக, பாதுகாப்பு சார்ந்த முக்கிய முடிவுகள் அரசியல் தலைவர்களால் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் மட்டுமே  ஆலோசனை நடத்தி எடுக்கப்படுவது  இன்று நடைமுறையாக நீடிக்கிறது. ஆகவே பல ஆண்டுகளாக ராணுவத்தின் ஆயுதத் தளவாடத் தேவைகள் தீர்க்கப் படாமல், ராணுவம் தயார் நிலையில் இல்லாமல் தொடர்ந்து அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  

இந்தத் தருணத்தில் ஜவஹர்லால் நேரு 1947-ல் தேசிய பாதுகாப்பு அகடெமியைத் துவக்கி வைத்த போது ராணுவத்தைப் பற்றிப் பேசியது நினைவுக்கு வருகிறது. நாம் பல தலைமுறைகளாக வன் நடத்தையைத் தவிர்த்து, சமாதான வழியில் தீர்வு காணவேண்டும் என்று பேசி வருகிறோம்...இருந்தாலும் வாழ்க்கையில் நாம் எந்த எதிர்பாராத நிகழ்வையும் எதிர் கொள்ளத் தயாராய் இல்லாவிட்டால் நமக்கு தோல்வியே ஏற்படும்...தேசத் தந்தை காந்தியே தோற்று ஓடுவதை விட கையில் வாள் எடுப்பதே மேல் என்று கூறியுள்ளார்...ஆகவே நமது 

சுதந்திரத்தைப் பாதுகாக்க நாம் நவீன போர் முறைகளைக் கற்று ராணுவம், கடற் படை மற்றும் விமானப் படை ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்என்று கூறினார். நேரு சொன்னதை அவர் வாழ்ந்த போது செயல்படுத்தத் தவறினாலும் இப்போதாவது விழிப்படைவோம் என நம்புகிறேன். அதுவே நமது நலனுக்கு அவசியமாகும்.


(கர்னல் ஹரிஹரன் இந்திய ராணுவத்தின் உளவுப்பிரிவில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்)

அந்திமழை மார்ச் 2014 இதழில் வெளியானது.


My Tamil article: Maranathin Marupakkam

மரணத்தின் மறுபக்கம்

கர்னல் ஆர். ஹரிஹரன்

என் கனவில் பல  ஆண்டுகளாக பால்யகால நண்பர்கள் மூன்று பேர் தோன்றிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மாணவப் பருவத்திலேயே மரணத்தைத் தழுவி விட்டவர்கள். ஒருவர் என் நண்பன் கண்ணனின் அண்ணன் பார்த்தசாரதி. அவன் பிணமாய் தேர்ப்பாடையில் ஊர்வலம் வந்த  காட்சி டெக்னிக் கலரில் தோன்றும். இரண்டாவது வருவது என்னுடன் படித்த மார்க்கபந்து எட்டு வயதில் தெற்றுப் பல் தெரிய சிரிக்கும் கருப்பு வெள்ளைக் காட்சி. மூன்றாவது என்னுடன் நாலாம் வகுப்பில் படித்த எப்போதும் ஒரு சிரிப்புடன் இருந்த கமலாவின் முகம் கலரில் தெரியும். மார்க்கபந்து எங்களுக்குத் தெரிந்த ஒரு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரின் மகன். கமலாவின் அப்பா தபால்காரர். கமலா இறந்த பின் தினசரி அவர் என் வீட்டுக்கு என் பெயரைச் சொல்லி அழைத்துக் கொண்டே என்னைப் பார்க்க வருவார். வரும் போதெல்லாம் கமலாவைப் பற்றிப் பேசுவார். இது பல ஆண்டுகள் தொடர்ந்தது. ஆகவே அவரைப் பொருத்தவரை நான் அவர்களின் இழப்புகளுக்கு ஒரு நினைவுச் சின்னமாகவே கருதப் பட்டிருந்தேன்.

என்னுடைய இருபதாம் வயதில் நான் ஊருக்குத் திரும்பிய போது அவர்கள் இருவரையும் சந்திக்க நேர்ந்தது. “தம்பி, நல்லா இருக்கியா? கமலா(அல்லது மார்க்கன்) இருந்திருந்தா இப்போ இருவது வயசாகி வளர்ந்திருக்கும்…”என்று பல முறை அதன் பின்பு கூறியிருக்கிறார்கள். கனவுகள் தொடர்ந்தாலும் மரணத்தின் தாக்கம் பெரிதாக மனதில் எனக்கு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. மரணம் என்றால் என்ன என்று எனக்குப் புரியாததே ஒரு வேளை அதற்கு காரணமாயிருக்கும்.

இது போல என் மகன் அசோக் தனது ஆறாம் வயதில் மரணத்தின்  விளைவை நேரில் கண்ட காட்சி என் நினைவில் நிற்கிறது. அப்போது நான் டெல்லியில் ராணுவத் தலைமையகத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அசோக் கரோல்பாக்கில் அறுபது வயதான ஒரு தமிழ் பெரியவர் நடத்திய சங்கீதப் பள்ளியில் மிருதங்கம் பயின்று வந்தான். வாரம் இரு முறை அவனை அழைத்துக் கொண்டு போவேன். நாலைந்து மாதங்கள் பயிற்சிக்குப் பிறகு ஒரு நாள் அவனை அவர் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போன போது வழக்கத்தைப் போல  மிருதங்க சப்தம் கேட்கவில்லை. அந்த மாடி வீட்டின் கதைவைத் திறந்து கொண்டு நாங்கள் இரண்டு பேரும் உள்ளே எட்டிப் பார்த்தாம். விரிச்சோடியிருந்த அந்த அறையின் ஒரு மூலையில் அவர் வயதான மனைவி குந்திட்டு உட்கார்ந்திருந்தார்இன்னொரு மூலையில் மிருதங்கங்கள் அடுக்கப் பட்டிருந்தன.

என்ன இன்னிக்கி கிளாஸ் இல்லையா?” என்ற என் கேள்விக்கு, அந்த அம்மாள்ஐயையோ உங்களுக்குத் தெரியாதா, முந்தாநாள் அவர் போயிட்டாரேஎங்கஎன்று தொடர்ந்ததும், நான் என் மகனை இழுத்துக் கொண்டு போனேன். நல்லா இருந்த மனிதனர் எப்படி திடீரென்று இறந்தார் என்று நான் யோசித்துக் கொண்டிருந்த போது வெளியே வந்த  அசோக்அப்பா, டீச்சர் போயிட்டார்னா என்ன அர்த்தம்? எங்க போயிட்டார்?” என்று வியப்புடன் கேட்டான். அந்தக் காட்சி இன்னமும் என்  மனத்திரையில் நிற்கிறது. நான் மட்டும் அல்ல நாம் எல்லோரும் இன்னமும் வாழ்நாள் முழுவதும் அந்தக் கேள்வியைக்  கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

மரணத்தின் தாக்கத்தை வாழ்க்கையில் தொடர்ந்து நடக்கும் பல்வேறு நிகழ்வுகள் மறக்க வைக்கின்றன. இந்த இயற்கை நியதிக்கு நானும் விலக்கல்ல. அது முக்கியமாக ராணுவத்தில் பணிபுரிந்தவர்களுக்கு இயற்கை அளித்துள்ள ஒரு வரப்பிரசாதம் என்றே கருதவேண்டும். இல்லாவிட்டால் நாம் மரண பயத்தின் பிடியில் உளைத்து, வாழ்க்கையையே நாசமாகிவிடும்

1965 மற்றும் 1971ல் நடந்த போர்களிலும், மற்றும் அசாம், நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா மாநிலங்களிலும் இலங்கையிலும் விடுதலைப்புலிகள் போன்ற தீவிரவாத இயக்கங்களுடன் நடந்த மோதல்களிலும் பங்கு பெற்றவன். நான் என்னுடைய ராணுவ சேவை பெரும்பாலும் நுண்ணறிவுத் துறை (உளவுத்துறை என்று தவறாகக் கூறப்படும்இண்டெலிஜென்ஸ் கோர்”) சார்ந்ததே. ஆனால் 1965 மற்றும் 1971 போர்களின் போது நான் பீரங்கிப்படையில் இருந்தேன். ஆக அந்தப் போர்களில் உயிரிழந்தவர்களில் பலர் எனக்கு நன்கு பரிச்சயமான பல ராணுவ சகாக்களும், தீவிரவாத இயக்கங்களைச் செர்ந்தவர்களும், மற்றும் சாதாரண மக்களும் உண்டு. அந்த இழப்புகள் எனக்கு மரணத்தின் பல கோணங்களைக் காட்டியிருப்பதை இப்போதுதான் உணர்கிறேன

அவற்றில் சில நினைவுகள் மறக்க முடியாதவை. 1965-ல் நடந்த கட்ச் போரில், ஒரு பாகிஸ்தான் ராணுவப் பிரிவு நமது முன்னிலைப் பகுதியில் ஊடுருவ யத்தனித்தபோது ஏறத்தாழ எட்டு பேர் நாம் நட்டு வைத்திருந்த கண்ணிவெடிகளில் சிக்கி உயிர் இழந்தார்கள். கண்ணிவெடிகளுக்கு இடையே சிதறிய அவர்களுடைய சடலங்களை மீட்டு வெளியே எடுத்துச்செல்ல எவருக்கும் தைரியம் இல்லை. இரவு நேரங்களில் நரிகள் அந்தப் பிணங்களை இழுக்க முயற்சிக்கும் போது ஊடுருவல்களை எச்சரிக்க கண்ணிவெடிகளுடன் நமது படைகள் இணைத்திருந்தஃப்ளேர்ஸ்என்ற வாணங்கள் பச்சையும் சிவப்புமாக சுர்ர்ர்... என்று ஆகாயத்தில் வெளிச்சத்துடன் சீறிப் பாயும். சில சமயங்களில் சில கண்ணி வெடிகள் படார் படார் என்று வெடித்து எங்களது நிம்மதியைக் குலைக்கும். பகலில் பிணந்தின்னிக் கழுகுகள் நரிகளைப் போல பிணங்களின் மீது பாயும் போது வாண வேடிக்கை தொடரும். அந்தப் பிணங்களில் என்னைப் போன்ற இளவயதான பாகிஸ்தான் பீரங்கிப்படைஆபீசர் ஒருவனும் சிதலமாகிக் கிடந்தான். அவனுக்கு நேர்ந்த கதியைப் பார்த்து  செத்தான் எதிரி என்ற மகிழ்ச்சி எனக்குத் தோன்றவில்லை. அதற்கு மாறாக, ஐயோ பாவம் நம்மைப் போல் ஒருவன், இந்த அவல நிலையில் பிணமாகக் கிடக்கிறானே என்றே தோன்றியது. அது போல 1971-ல் பிரம்மன்பாரியா பகுதியில் நாங்கள் போரில் இறந்த மஜூம்தார் என்ற இளம் ஆபீசரின் சடலத்தை போர்முனையில் தேடியபோது இறந்து கிடந்தவர்களில் இந்தியருக்கும் பாகிஸ்தானிக்கு வித்தியாசம் தெரியாமல் திண்டாடியது நினைவில் நிற்கிறது. வேறுபாடுகள் உயிருள்ளவரைதான், சாவு எல்லாவற்றையும் சமநிலைப் படுத்துகிறது.\

ஆனால் மரணத்தின் இன்னொரு பக்கமும் இருக்கிறது. என்னுடன் ஆபீசர் பயிற்சியில் பங்கு பெற்ற காப்டன் மாட்வெல் 1965 போரின் போது காஷ்மீர் பகதியில்காணாமல்போய்விட்டான். நாங்கள் பயிற்சி முடிந்து அங்கமெல்லாம் வலிக்க இரவு படுக்கும் போது மாட்வெல் தனது கிடார் பயிற்சியைத் துவக்கி எல்லோரிடமும் திட்டு வாங்குவான். யார் மோதிக் கொண்டாலும் உடனே ஒரு கடி ஜோக் அடித்து திசை திருப்புவான். அந்த ஜாலியான மாட்வெல் மறைந்த செய்தியை என்னால் நம்பவே முடியவில்லை. இடியட், ஏண்டா இப்படி செத்தே என்ற கேள்வி என் மனதுக்குள் பலமுறை இடித்திருக்கிறது.

1971-ல் நடந்த சம்பவம் இது. மேஜர் கோபாலகிருஷ்ணா என்ற மதுரைக்காரர், விதவைத் தாயின் ஒரே மகன், எனக்கு அகர்தலாவில் பரிச்சயமானார். ஒரு பயிற்சிக்காக கோபாலகிருஷ்ணாவுக்கு உடனடியாக சோவியத் நாட்டுக்கு பயணிக்க உத்தரவு வந்தது. அவர் அகர்தலாவில் விமானத்தில் ஏறி உட்கார்ந்த பின்பு, போர் சீக்கிரமே ஆரம்பிக்கப் போகிறது என்ற செய்தி கிடைக்க அவர் பயணம் ரத்தானது. அவர் இரண்டு நாள் கழித்து, போர் துவங்குவதற்று முந்தைய தினம் எல்லைப் பகுதியில் போர் நடத்த வேண்டிய குறிப்பிட்ட இடங்களைப் பார்க்கப் போனார். ஆனால் திடீரென்று ஒரே ஒரு துப்பாக்கி சுட மறுகணமே கோபாலகிருஷ்ணா பிணமாக கீழே விழுந்தார். இத்தகைய இழப்புக்கள் வாழ்க்கையில் எதிர்பார்க்க வேண்டியதுதான் என்றாலும் சில நினைவுகளை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அவை அடிமனதின் ஆழத்தில் அவற்றின் வடுக்கள் நிலைத்து நிற்கின்றன. அதனால்தான் மார்க்கபந்துவும், கமலாவும், கோபாலகிருஷ்ணனும், மாட்வெல்லும் திடீரென்று அவ்வப்போது மனத்திரையில் தோன்றுகிறார்களா? விடை தெரியவில்லை.

சமீபத்தில் எனது மூத்த அண்ணன் சீனிவாசன் (தமிழ் எழுத்துலகில்சார்வாகன்என்ற பெயரால் அறியப்பட்டவர்) மறைந்தார். அவர் வாழ்க்கையில் மேற்கொண்ட பல்வேறு திறன்களின் உச்சத்தைத் தொட்டவர். அவர் மறைவு மரணத்தின் மறுபக்கம் என்ன கேள்வியை என்னுள் சமீபத்தில் எழுப்பியது. அதற்கு அவரே கடைசிக் காலத்தில் உடல்நலக் குறைவால் அவதியில் இருந்த போதுசாவு  என்பது ஒரு விடுதலை என்றே சொல்ல வேணும்என்று விளக்கம் அளித்தார்.

மரணத்தைப் பற்றி எவ்வளவோ எழுதலாம். எனக்குத் தெரிந்த யாழ்ப்பாணக் குடும்பத்தைச் சேர்ந்த பதினேழு வயதான இளம்புலிநரேன் (இயக்கப் பெயர்) குப்பியடித்து செத்ததை எழுதவா, அல்லது என்னுடன் நெருங்கிப் பழகிய .பி.ஆர்.எல்.எஃப் தலைவர் பத்மநாபா, ஒரு நல்ல, நேர்மையான மனிதர் சென்னையில் அனியாயமாக சுட்டுக்கொல்லப் பட்டதையா, எதை எழுதுவது? அப்படி எழுதுவதற்கு முடிவே இல்லை ஏனென்றால் மரணத்துக்கு மறு பக்கம் அல்ல பல பக்கங்கள் இருக்கின்றன என்பதை உணர்கிறேன். அப்படிப்பட்ட நினைவுகளை அசை போடுவதில் பயன் இருப்பதாகவும் தெரியவில்லை.

லெபனானைச் சேர்ந்த சிந்தனையாளர் கலீல் கிப்ரன் கூறியபடி வாழ்வும் மரணமும் நதியும் கடலும் போன்றவை. ஒன்றின் தொடர்ச்சியே இன்னொன்றின் துவக்கம்இந்த விளக்கத்தை மறைந்த என் தாயார் கேட்டிருந்தால், “போதுண்டா மசான வைராக்கியம், உருப்படியான விஷயத்தைப் பேசுஎன்றிருப்பாள். அது சரிதான். ஏனெனில் மரணம் மறக்க  வேண்டிய டாபிக். அந்த வேலையை இயற்கையே செய்து விடுகிறது, நல்ல காலம்.
Courtesy: Andhimazhai Tamil monthly April 2016 issue
Note: Edited portions for publication are shown in red. I have retained them to show my perceptions in full.