மரணத்தின் மறுபக்கம்
கர்னல் ஆர். ஹரிஹரன்
என் கனவில் பல ஆண்டுகளாக பால்யகால நண்பர்கள் மூன்று பேர் தோன்றிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மாணவப்
பருவத்திலேயே மரணத்தைத் தழுவி விட்டவர்கள். ஒருவர் என் நண்பன் கண்ணனின் அண்ணன் பார்த்தசாரதி. அவன் பிணமாய் தேர்ப்பாடையில் ஊர்வலம் வந்த காட்சி டெக்னிக் கலரில் தோன்றும். இரண்டாவது வருவது என்னுடன் படித்த மார்க்கபந்து எட்டு வயதில் தெற்றுப் பல் தெரிய சிரிக்கும் கருப்பு வெள்ளைக் காட்சி. மூன்றாவது என்னுடன் நாலாம் வகுப்பில் படித்த எப்போதும் ஒரு சிரிப்புடன் இருந்த கமலாவின் முகம் கலரில் தெரியும். மார்க்கபந்து எங்களுக்குத் தெரிந்த ஒரு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரின் மகன். கமலாவின் அப்பா தபால்காரர். கமலா இறந்த பின் தினசரி அவர் என் வீட்டுக்கு என் பெயரைச் சொல்லி அழைத்துக் கொண்டே என்னைப் பார்க்க வருவார். வரும் போதெல்லாம் கமலாவைப் பற்றிப் பேசுவார். இது பல ஆண்டுகள் தொடர்ந்தது. ஆகவே அவரைப் பொருத்தவரை நான் அவர்களின் இழப்புகளுக்கு ஒரு நினைவுச் சின்னமாகவே கருதப் பட்டிருந்தேன்.
என்னுடைய இருபதாம் வயதில் நான் ஊருக்குத் திரும்பிய போது அவர்கள் இருவரையும் சந்திக்க நேர்ந்தது. “தம்பி, நல்லா இருக்கியா? கமலா(அல்லது மார்க்கன்) இருந்திருந்தா இப்போ இருவது வயசாகி வளர்ந்திருக்கும்…”என்று பல முறை அதன் பின்பு கூறியிருக்கிறார்கள். கனவுகள் தொடர்ந்தாலும் மரணத்தின் தாக்கம் பெரிதாக மனதில் எனக்கு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. மரணம் என்றால் என்ன என்று எனக்குப் புரியாததே ஒரு வேளை அதற்கு காரணமாயிருக்கும்.
இது போல என் மகன் அசோக் தனது ஆறாம் வயதில் மரணத்தின் விளைவை நேரில் கண்ட காட்சி என் நினைவில் நிற்கிறது. அப்போது நான் டெல்லியில் ராணுவத் தலைமையகத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அசோக் கரோல்பாக்கில் அறுபது வயதான ஒரு தமிழ் பெரியவர் நடத்திய சங்கீதப் பள்ளியில் மிருதங்கம் பயின்று வந்தான். வாரம் இரு முறை அவனை அழைத்துக் கொண்டு போவேன். நாலைந்து மாதங்கள் பயிற்சிக்குப் பிறகு ஒரு நாள் அவனை அவர் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போன போது வழக்கத்தைப் போல மிருதங்க சப்தம் கேட்கவில்லை. அந்த மாடி வீட்டின் கதைவைத் திறந்து கொண்டு நாங்கள் இரண்டு பேரும் உள்ளே எட்டிப் பார்த்தாம். விரிச்சோடியிருந்த அந்த அறையின் ஒரு மூலையில் அவர் வயதான மனைவி குந்திட்டு உட்கார்ந்திருந்தார். இன்னொரு மூலையில் மிருதங்கங்கள் அடுக்கப் பட்டிருந்தன.
“என்ன இன்னிக்கி கிளாஸ் இல்லையா?” என்ற என் கேள்விக்கு, அந்த அம்மாள் “ஐயையோ உங்களுக்குத் தெரியாதா, முந்தாநாள் அவர் போயிட்டாரே…எங்க” என்று தொடர்ந்ததும், நான் என் மகனை இழுத்துக் கொண்டு போனேன். நல்லா இருந்த மனிதனர் எப்படி திடீரென்று இறந்தார் என்று நான் யோசித்துக் கொண்டிருந்த போது வெளியே வந்த அசோக் “அப்பா, டீச்சர் போயிட்டார்னா என்ன அர்த்தம்? எங்க போயிட்டார்?” என்று வியப்புடன் கேட்டான். அந்தக் காட்சி இன்னமும் என் மனத்திரையில் நிற்கிறது. நான் மட்டும் அல்ல நாம் எல்லோரும் இன்னமும் வாழ்நாள் முழுவதும் அந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
மரணத்தின் தாக்கத்தை வாழ்க்கையில் தொடர்ந்து நடக்கும் பல்வேறு நிகழ்வுகள் மறக்க வைக்கின்றன. இந்த இயற்கை நியதிக்கு நானும் விலக்கல்ல. அது முக்கியமாக ராணுவத்தில் பணிபுரிந்தவர்களுக்கு இயற்கை அளித்துள்ள ஒரு வரப்பிரசாதம் என்றே கருதவேண்டும். இல்லாவிட்டால் நாம் மரண பயத்தின் பிடியில் உளைத்து, வாழ்க்கையையே நாசமாகிவிடும்.
1965 மற்றும் 1971ல் நடந்த போர்களிலும், மற்றும் அசாம், நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா மாநிலங்களிலும் இலங்கையிலும் விடுதலைப்புலிகள் போன்ற தீவிரவாத இயக்கங்களுடன் நடந்த மோதல்களிலும் பங்கு பெற்றவன். நான் என்னுடைய ராணுவ சேவை பெரும்பாலும் நுண்ணறிவுத் துறை (உளவுத்துறை என்று தவறாகக் கூறப்படும் “இண்டெலிஜென்ஸ் கோர்”) சார்ந்ததே. ஆனால் 1965 மற்றும் 1971 போர்களின் போது நான் பீரங்கிப்படையில் இருந்தேன். ஆக அந்தப் போர்களில் உயிரிழந்தவர்களில் பலர் எனக்கு நன்கு பரிச்சயமான பல ராணுவ சகாக்களும், தீவிரவாத இயக்கங்களைச் செர்ந்தவர்களும், மற்றும் சாதாரண மக்களும் உண்டு. அந்த இழப்புகள் எனக்கு மரணத்தின் பல கோணங்களைக் காட்டியிருப்பதை இப்போதுதான் உணர்கிறேன.
அவற்றில் சில நினைவுகள் மறக்க முடியாதவை. 1965-ல் நடந்த கட்ச் போரில், ஒரு பாகிஸ்தான் ராணுவப் பிரிவு நமது முன்னிலைப் பகுதியில் ஊடுருவ யத்தனித்தபோது ஏறத்தாழ எட்டு பேர் நாம் நட்டு வைத்திருந்த கண்ணிவெடிகளில் சிக்கி உயிர் இழந்தார்கள். கண்ணிவெடிகளுக்கு இடையே சிதறிய அவர்களுடைய சடலங்களை மீட்டு வெளியே எடுத்துச்செல்ல எவருக்கும் தைரியம் இல்லை. இரவு நேரங்களில் நரிகள் அந்தப் பிணங்களை இழுக்க முயற்சிக்கும் போது ஊடுருவல்களை எச்சரிக்க கண்ணிவெடிகளுடன் நமது படைகள் இணைத்திருந்த “ஃப்ளேர்ஸ்” என்ற வாணங்கள் பச்சையும் சிவப்புமாக சுர்ர்ர்... என்று ஆகாயத்தில் வெளிச்சத்துடன் சீறிப் பாயும். சில சமயங்களில் சில கண்ணி வெடிகள் படார் படார் என்று வெடித்து எங்களது நிம்மதியைக் குலைக்கும். பகலில் பிணந்தின்னிக் கழுகுகள் நரிகளைப் போல பிணங்களின் மீது பாயும் போது வாண வேடிக்கை தொடரும். அந்தப் பிணங்களில் என்னைப் போன்ற இளவயதான பாகிஸ்தான் பீரங்கிப்படைஆபீசர் ஒருவனும் சிதலமாகிக் கிடந்தான். அவனுக்கு நேர்ந்த கதியைப் பார்த்து செத்தான் எதிரி என்ற மகிழ்ச்சி எனக்குத் தோன்றவில்லை. அதற்கு மாறாக, ஐயோ பாவம் நம்மைப் போல் ஒருவன், இந்த அவல நிலையில் பிணமாகக் கிடக்கிறானே என்றே தோன்றியது. அது போல 1971-ல் பிரம்மன்பாரியா பகுதியில் நாங்கள் போரில் இறந்த மஜூம்தார் என்ற இளம் ஆபீசரின் சடலத்தை போர்முனையில் தேடியபோது இறந்து கிடந்தவர்களில் இந்தியருக்கும் பாகிஸ்தானிக்கு வித்தியாசம் தெரியாமல் திண்டாடியது நினைவில் நிற்கிறது. வேறுபாடுகள் உயிருள்ளவரைதான், சாவு எல்லாவற்றையும் சமநிலைப் படுத்துகிறது.\
ஆனால் மரணத்தின் இன்னொரு பக்கமும் இருக்கிறது. என்னுடன் ஆபீசர் பயிற்சியில் பங்கு பெற்ற காப்டன் மாட்வெல் 1965 போரின் போது காஷ்மீர் பகதியில் “காணாமல்” போய்விட்டான். நாங்கள் பயிற்சி முடிந்து அங்கமெல்லாம் வலிக்க இரவு படுக்கும் போது மாட்வெல் தனது கிடார் பயிற்சியைத் துவக்கி எல்லோரிடமும் திட்டு வாங்குவான். யார் மோதிக் கொண்டாலும் உடனே ஒரு கடி ஜோக் அடித்து திசை திருப்புவான். அந்த ஜாலியான மாட்வெல் மறைந்த செய்தியை என்னால் நம்பவே முடியவில்லை. இடியட், ஏண்டா இப்படி செத்தே என்ற கேள்வி என் மனதுக்குள் பலமுறை இடித்திருக்கிறது.
1971-ல் நடந்த சம்பவம் இது. மேஜர் கோபாலகிருஷ்ணா என்ற மதுரைக்காரர், விதவைத் தாயின் ஒரே மகன், எனக்கு அகர்தலாவில் பரிச்சயமானார். ஒரு பயிற்சிக்காக கோபாலகிருஷ்ணாவுக்கு உடனடியாக சோவியத் நாட்டுக்கு பயணிக்க உத்தரவு வந்தது. அவர் அகர்தலாவில் விமானத்தில் ஏறி உட்கார்ந்த பின்பு, போர் சீக்கிரமே ஆரம்பிக்கப் போகிறது என்ற செய்தி கிடைக்க அவர் பயணம் ரத்தானது. அவர் இரண்டு நாள் கழித்து, போர் துவங்குவதற்று முந்தைய தினம் எல்லைப் பகுதியில் போர் நடத்த வேண்டிய குறிப்பிட்ட இடங்களைப் பார்க்கப் போனார். ஆனால் திடீரென்று ஒரே ஒரு துப்பாக்கி சுட மறுகணமே கோபாலகிருஷ்ணா பிணமாக கீழே விழுந்தார். இத்தகைய இழப்புக்கள் வாழ்க்கையில் எதிர்பார்க்க வேண்டியதுதான் என்றாலும் சில நினைவுகளை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அவை அடிமனதின் ஆழத்தில் அவற்றின் வடுக்கள் நிலைத்து நிற்கின்றன. அதனால்தான் மார்க்கபந்துவும், கமலாவும், கோபாலகிருஷ்ணனும், மாட்வெல்லும் திடீரென்று அவ்வப்போது மனத்திரையில் தோன்றுகிறார்களா? விடை தெரியவில்லை.
சமீபத்தில் எனது மூத்த அண்ணன் சீனிவாசன் (தமிழ் எழுத்துலகில் ‘சார்வாகன்’ என்ற பெயரால் அறியப்பட்டவர்) மறைந்தார். அவர் வாழ்க்கையில் மேற்கொண்ட பல்வேறு திறன்களின் உச்சத்தைத் தொட்டவர். அவர் மறைவு மரணத்தின் மறுபக்கம் என்ன கேள்வியை என்னுள் சமீபத்தில் எழுப்பியது. அதற்கு அவரே கடைசிக் காலத்தில் உடல்நலக் குறைவால் அவதியில் இருந்த போது “சாவு என்பது ஒரு விடுதலை என்றே சொல்ல வேணும்” என்று விளக்கம் அளித்தார்.
மரணத்தைப் பற்றி எவ்வளவோ எழுதலாம். எனக்குத் தெரிந்த யாழ்ப்பாணக் குடும்பத்தைச் சேர்ந்த பதினேழு வயதான இளம் ‘புலி’ நரேன் (இயக்கப் பெயர்) குப்பியடித்து செத்ததை எழுதவா, அல்லது என்னுடன் நெருங்கிப் பழகிய ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர் பத்மநாபா, ஒரு நல்ல, நேர்மையான மனிதர் சென்னையில் அனியாயமாக சுட்டுக்கொல்லப் பட்டதையா, எதை எழுதுவது? அப்படி எழுதுவதற்கு முடிவே இல்லை ஏனென்றால் மரணத்துக்கு மறு பக்கம் அல்ல பல பக்கங்கள் இருக்கின்றன என்பதை உணர்கிறேன். அப்படிப்பட்ட நினைவுகளை அசை போடுவதில் பயன் இருப்பதாகவும் தெரியவில்லை.
லெபனானைச் சேர்ந்த சிந்தனையாளர் கலீல் கிப்ரன் கூறியபடி வாழ்வும் மரணமும் நதியும் கடலும் போன்றவை. ஒன்றின் தொடர்ச்சியே இன்னொன்றின் துவக்கம். இந்த விளக்கத்தை மறைந்த என் தாயார் கேட்டிருந்தால், “போதுண்டா மசான வைராக்கியம், உருப்படியான விஷயத்தைப் பேசு” என்றிருப்பாள். அது சரிதான். ஏனெனில் மரணம் மறக்க வேண்டிய டாபிக். அந்த வேலையை இயற்கையே செய்து விடுகிறது, நல்ல காலம்.
Courtesy: Andhimazhai Tamil monthly April 2016
issue
Note: Edited portions for publication are shown in red. I have retained them to show my perceptions in full.
1 comment:
Dear Col. Hariharan sir,
Would like to share some thoughts, either a king or a normal man or a brave soldier, they are named as baby and body when they are born and dead, that defines the neutrality of life. Between these two 'B's is the life. Yes even when I talk all these, like your mom, my mom too immediately change the topic towards something by saying 'உருப்படியான விஷயத்தைப் பேசு':)
As per Phychology is corcerned Late Kamala, Gopalakrishnan and Matvel had impacted you by their presence as a result they are still lives in your dream. I could understand how much you loved and respected them. It is always said that, during a peaceful sleep, human attains the state o meditation which makes him to dream things which make him visualise both past and the future .
Rest in peace Kamala, Gopalakrishnan and Matvel 🙏. The article is more philosophical which raises 'n' number of questions about death and war. I agree with your brother Srinivasan sir words, “சாவு என்பது ஒரு விடுதலை என்றே சொல்ல வேணும்”
I always wonder how beautiful the world will be when people understand those philosophies.
Regards,
Vithiyapathy
Post a Comment