Friday, 6 May 2016

My Tamil article 'Dorathu Idimuzhakkam" (Distant Thunder)

தூரத்து இடி முழக்கம்

கர்னல் ஆர் ஹரிஹரன்

எங்கள் வீட்டு வாசலில் ராணுவ யூனிஃபார்மில் நின்ற மாணிக்கத்தை ஆச்சரியத்துடன் நாங்கள் எல்லோரும் பார்த்தோம். எட்டு மாசத்துக்கு முன்னால் எங்கள் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த மாணிக்கம் திடீரென்று “வாரு’க்கு போய் சேர்ந்துவிட்டான். இரண்டாம் உலகப் போருக்கு எங்கள் ஊரில் “வாரு” என்றுதான் கூறுவார்கள்.

வானம் பார்த்த பஞ்சப் பிரதேசமான வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்த எங்கள் ஊரில் பலர், என்னைத் தூக்கிக் கொண்டு ஊர் சுற்றிய சண்முகம் உள்பட, “வாரு”க்கு போய் விட்டார்கள். எங்கோ பர்மாவிலும் சிங்கப்பூரிலும் நடந்த “வாரு” தூரத்து இடி முழக்கமாக இல்லாமல் எங்கள் சிற்றூரின் சாதாரண மக்களின் வாழ்வில் சில தாக்கங்களை ஏற்படுத்தியது.

மாணிக்கம் அந்தக் காலத்து ராணுவ உடையான காக்கி தலைப்பா, காக்கி சட்டை, அரை நிஜாரும் கஞ்சி போட்டு விரைத்து நிற்க பூட்ஸ் போட்ட காலுடன் கம்பீரமாக நின்றது ஏழு வயசான என்னை மிகவும் கவர்ந்தது. “ஏம்பா, எப்படி மில்ட்ரில சேர்ந்தே?” என்ற என் கேள்வியைக் கேட்டு மாணிக்கம் சிரித்தான். “தம்பி, கோட்டை மைதானத்தில வெள்ளைக்கார ஆபீசர் நொண்டிக்கினே வந்தாரு அங்க லைனா எல்லாரையும் நிக்க சொல்லி. எங்க உள் கையத் தடவிப் பார்த்தாரு. யாருக்கு கை மொற மொறப்பா இருந்திச்சோ அவனல்லாம் ‘பர்த்தி’ ஆயிட்டான்,” என்று மாணிக்கம் சொன்னதும் நான் என் உள்ளங்கையைத் தடவிப் பார்த்தேன்.

அதைப் பார்த்த மாணிக்கம் சிரித்தான். “நீ போனா எடுக்கமாட்டான். உனக்கு வயசாவல. கை மொற மொறனு இருக்கணும்.” உலகப் போரின் போது இந்திய ராணுவத்தில் பெருமளவில் ஆள் சேர்க்க ஆங்கிலேயர் கையாண்ட யதார்த்தமான உத்தியை அவன் விளக்கினான். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே,  குய்யோ முறையோ என அலறிக் கொண்டு மாணிக்கத்தின் தாயர் கிராமத்திலிருந்து மூச்சி இறைக்க ஓடி வந்தாள். வந்தவள் என் தாயாரின் காலில் விழாத குறையாக, “ஐயோ தாயி என்னாத்த  சொல்லுவேன், இந்த படுபாவிப் பய, இரணியா (ஹெர்னியா) விழாதிக்காரன் (எங்கள் ஊர் பேச்சில் ‘வியாதி’ விழாதியாக உருமாரிப் போகும்) மில்ட்ரில சேர்ந்துட்டான். அவனுக்கு ஐயாதான் வைத்தியம் பண்னாரு. அவன் மிலிட்ரில செத்துடுவாம்மா, நீதான் ஐயாவாண்ட சொல்லி மில்ட்ரிலேந்து அவனை எடுத்துக் கொடு தாயி” என்று புலம்பினாள். அதன்படி என் தகப்பனார் ராணுவ அதிகாரிகளிடம் மாணிக்கத்தின் ‘விழாதி’யை எடுத்துச் சொல்லி ராணுவத்திலிருந்து விடுவித்தார்.  

எங்கள் சித்தப்பா ஏற்கனவே இந்திய கடற் படையில் ஆபீசாராக கட்டாய சேவையில் இருந்ததால், நாங்கள் எல்லோரும் இரண்டாம் உலகப் போரின் போக்கை உன்னிப்பாக கவனித்து வந்தோம். தினமும் காலையில் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும் போது பிள்ளைகளைக் கூட்டி, தலைமை ஆசிரியர் நடேச ஐயர் “இந்திய ராணுவம் இன்று வெற்றிகரமாக ரங்கூனிலிருந்து (அல்லது ப்ரோம், பெகு என்று பெயர் தெரியாத ஊர்களிலிருந்த) பின்வாங்கியது’ என்று ஜப்பானியரிடம் அடிபட்டு ஓடுவது பெரிய சாகசம்போல விளக்குவார்.

ஏழு வயசில் கூட எனக்கு அவர் பேசியதைக் கேட்டு சிரிக்கத் தோன்றும் ஏனென்றால் சிறுவர்களைப் பொறுத்தவரை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்தான் எங்கள் ஹீரோ. வெள்ளையர் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அவர் இந்திய தேசிய ராணுவத்தைத் துவக்கி, ஜப்பானியருடன் சேர்ந்து பிரிட்டிஷ் ராணுத்தை பர்மாவிலிருந்த செய்தியை நாங்கள் கைதட்டி வரவேற்றி இருப்போம். ஆனால் தலைமை ஆசிரியர் தன்னை ஜார்ஜ் மன்னரின் பிரதிநிதி என்று நினைத்துக் கொண்டு செயல்பட்டு வந்தார்.. ஆகவே மௌனமா போர் செய்திகளை கேட்போம்..
 
ஆனால் அவரைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. அவரைப் போன்ற ‘அடிவருடி’கள் பலர் இருந்தனர். சொல்லப்  போனால், நேதாஜி காந்தி சொன்னதைப் புறக்கணித்து காங்கிரஸ் தலைமைத் தேர்தலில் நின்றார் என்ற ஒரே காரணத்துக்காக அந்தக்காலத்து ஆனந்த விகடன் நேதாஜியின் தேசிய ராணுவ முயற்ச்சியைக் கேலி செய்து ‘தடலடி வீரர்’ என்று கார்டூன் போட்டது.

ஜப்பானிய போர் விமானம் ஒரு முறை கல்கத்தாவின் மீது  குண்டு வீசியதும் ஆங்கில அரசுக்கு ஜன்னி கண்டு விட்டது. எல்லா ஊர்களிலும் கட்டாயமான இருட்டடிப்புக்கு உத்தரவிட்டார்கள். விமானத் தாக்குதலின் சேதங்களைச் சமாளிக்க ஏ. ஆர். பி நிவாரணப் படை நிறுவப்பட்டது.  சாம்பல் நிற யூனிபாரம் அணிந்த அவர்கள் எங்கள் ஊரிலும் அமைக்கப் பட்டது. ஜப்பானிய உளவாளிகள் உலாவுவதால், வதந்திகளைப் பரப்ப வேண்டாம்; அப்படி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று தினமும் பள்ளிக்கூடத்தில் பயமுறுத்தல்கள் விடுக்கப் பட்டன.

எங்கள் ஊர் பொது வெளிகளில் ராணுவத்தினர் பயிற்சிக்காக அடிக்கடி தங்குவார்கள். அவர்களில் பல வெள்ளையரும் இருந்தார்கள்.. நாங்கள் பள்ளிக்குப் போகும் போது வழியில் வெள்ளைக்கார சிப்பாய்களையும் அவர்களது ராட்சத லாரிகளையும் நாங்கள் வேடிக்கை பார்ப்போம். ஒரு முறை அவர்களில் ஒருவன் எங்களைக் கூப்பிட்டு இங்கிலீஷ்  பாட புத்தகத்தை வாங்கி படிக்கச் சொன்னான்.. எல்லோரும் பயந்து நடுங்கினாலும்,  நான் அதைத் திக்கித் திணறிப் படிக்க அவன் எனக்கு ஒரு கைப்பிடி சாக்லேட் தந்தான். என்னுடன் வந்த ராதாமாதவன் அதுவரை சாக்லேட்டைப் பார்த்ததே  இல்லை. அதைத் தின்று அனுபவித்தவன் அன்று முழுவதும் சாக்லேட்டில் முட்டை போடுவாங்களா என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் திண்டாடினான். அங்கு நின்ற பெரிய டேங்கர் லாரிகளில் வெள்ளைக்காரர்கள் குடிக்க பியர் நிரப்பியவை என்று நாங்கள் எல்லோரும் நம்பினோம்.  

எங்கள் ஊர் வெங்கு பதி பில்டிங்கில் போர்முனைப் படைகளுக்கு ராணுவ காக்கி யூனிஃபாரங்களைத் தைத்து அனுப்ப ஓயாமல் தையல் யந்திரங்கள் இயங்கின. வங்காளத்தில் அரிசி விளைச்சலை முழுமையாக அரசு கையகப்படுத்தி ராணுவத்திற்கு அனுப்ப பல லட்சம் மக்கள் பட்டினியில் இறந்த செய்தியை இருட்டடிப்பு செய்யப் பட்டது. எப்போதுமே போதிய விளைச்சல் இல்லாத எங்கள் ஊரில்கூட கட்டாயக் கொள் முதலால் உணவுப் பொருட்களுக்கு பயங்கர தட்டுப்பாடு ஏற்பட்டது. காப்பிக்கு பதிலாக ராகிக் காப்பி அவதரித்தது. சர்க்கரை இறக்குமதி முற்றிலுமாக தவிர்க்கப் பட்டதால் வெல்லக் காப்பியை குடித்தோம். அரிசிக்கு பதிலாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப் பட்ட உலர்த்தப் பட்ட உருளைக் கிழங்குத் துருவல்கள் விற்பனைக்கு வந்தன.

பர்மா, சிங்கப்பூர், பினாங்கு ஆகிய இடங்களில் வாழ்ந்த பல தமிழர்கள் தங்கள் சொத்து சுகங்களை இழந்த காட்டு வழிகளில் நடந்து நாடு திரும்பினார்கள். அதே நேரத்தில் நேதாஜியின் தேசிய ராணுவத்தில் சேர்ந்து போரிட்டவர்களில் சிலர் மீண்டும் எங்கள் ஊருக்குத் திரும்பியது நன்றாக நினைவிருக்கிறது.

எங்கள் வீட்டில் தினசரி இரவு ஒன்பது மணிக்கு என் தாயார் ரகசியமாக நேதாஜியின் அஜாத் ஹிந்த் தேசிய ராணுவத்தின் தமிழ் ரேடியோ ஒலிபரப்பைக் கேட்பாள். ரேடியோ பாங்காக் அலை வரிசையில் “இந்திய தேசிய ராணுவத்தின் தமிழ் ஒலி பரப்பு” என்று கம்பீரக் குரலில் தமிழில் போர் செய்திகள் படிப்பார்கள். சில சமயம் நேதாஜியின் மேடைப் பேச்சுகளையும் ஒலி பரப்புவார்கள். அந்த ஒலிபரப்பைக் கேட்க அரசு தடை விதித்திருந்ததால் அதை திருட்டுத்தனமாகக் கேட்பதில் எனக்கு ஒரு ஆனந்தம் இருந்தது.

காந்திஜியின் சத்தியாக்கிரகப் போரில் பங்கு பெற்று சிறை சென்ற என் தகப்பனார்கூட ஒரு காலகட்டத்தில் இந்திய தேசிய ராணுவத்தில் பங்கேற்க யோசித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் என்னையும் எனது அண்ணனையும் அவர் ஒரு நாள் கூப்பிட்டு “நான் மிலிட்ரில சேர்ந்தா நீங்க என்ன பண்ணுவீங்க?” என்ற விசித்திரமான கேள்வியைக் கேட்டிருக்க மாட்டார். ஏனெனில் காந்தியவாதியான அவர், பிரிட்டிஷ் இந்திய ராணுவத்துக்குத் துணை போகும் வாய்ப்பே இல்லை. அவர் உயிருடன் இருந்து போது இதற்கு விளக்கம் கேட்கத் தோன்றவில்லை.

போரின் போது எல்லாப் பொருட்களுக்கும் விதிக்கப் பட்ட ரேஷன் கட்டுப்பாடுகள் தினசரி வாழ்க்கையை மிகவும் பாதித்தன. பல வணிகர்கள் அரிசியையும் பருப்பையும் பதுக்கி வைக்கப் பழகிக் கொண்டனர். சில அர்த்தமில்லாத கட்டுப்பாடுகள் எரிச்சல் ஊட்டின. உதாரணமாக என் அண்ணனுக்கு ஒரு பேனா வாங்க இருபத்தி நாலு மைலை போய் வேலூரில் கலெக்டர் பர்மிஷன் வாங்கினோம்! வெள்ளைக் காகிதங்களுக்குப் பதிலாக மட்டரக பழுப்புக் காகிதங்களே பள்ளிக்கூடத்தில் உபயோகிக்கப் பட்டன. சோப்புக்கு தட்டுப்பாடு. ஆகவே “ஜெர்மன் படை” என்று என் தாயாரால் பெயர் சூட்டப்பட்ட சொறிப்புண் பலருக்கும் உடல் முழுதும் பரவியது. அந்த  ஜெர்மன் படை எடுப்பின் தாக்கம் எனக்கு ஏற்பட்ட போது என் நண்பர்களும் அதே சொறியில் அவதிப்பட்டதில் எனக்கு ஒரு சிறிய சந்தோஷம் ஏற்பட்டது. 

ஹீரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களின் மீது அமெரிக்க விமானங்கள் அணு குண்டு வீசித் தாக்கி பல்லாயிரம் சாதாரணமக்களை சாம்பலாக்கிய சம்பவத்தை காலைச் செய்தியில் தலைமை ஆசிரியர் வெற்றிக் குரலுடன் சொன்னது நினைவில் இருக்கிறது. சில நாட்களுக்குப் பிறகு ஜப்பானியர் சரணடைந்தார்கள். எங்கள் ஊரின் சில முக்கிய புள்ளிகள் கோட்டை மைதானத்தில் கூடி ஜார்ஜ்  மன்னர் படத்தை அலங்கரித்து வைத்து கும்பிட்டு, வெற்றி விழா எடுத்து வாழ்க வாழ்கவே ஜார்ஜ் மன்னர் வாழ்கவே என்று புகழ் பாடினார்கள். அதைக் கண்டு வெட்கிய நான் எங்கள் ஊர் பெரிசுகள் மீது தீராத வெறுப்புக் கொண்டேன்.

போரின் பிறகு என் வகுப்பில் படித்து வந்த மறைந்த ராணுவத்தினரின் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்தது.  அவர்களுக்கு வருடதுக்கு நாலரை ரூபாய் கல்வி உதவித் தொகை சரியான காலத்தில் அரசு வழங்கவில்லை. அரசின் அந்த மெத்தனம் இன்னமும் மாறாதது ஏழை மக்களின் தலையெழுத்து என்று நாம் சொல்லிக் கொள்வது வெட்கமாய் இருக்கிறது.


நாடு சுதந்திரம் அடைந்த பின்பு எங்கள் தகப்பனார் காந்தி சொன்னபடி காங்கிரசிலிருந்து விலக, ஜார்ஜ் மன்னர் புகழ் பாடிய சில பெரிசுகள் உடனடியாக தங்களது பாட்டை மாற்றிக் கொண்டார்கள். ஆழ்ந்த சித்தாந்த அடிப்படையில் நடத்தப்பட் அந்தக் காலத்து அரசியல் நாகரிகம் பச்சோந்தித்தனுக்கு அடிமையானதும் அந்த தூரத்து இடி முழக்கத்தின் தாக்கத்தின் ஒரு விளைவு என்றே நினைக்கிறேன். 


Courtesy: Andhimazhai Tamil monthly May 2016 issue. www.andhimazhai.com 

Note: This is the unedited copy of the article published in the magazine. I have shown the edited portions in bold. E-mail: haridirect@gmail.com 

1 comment:

Vithiyapathy Purushothaman said...

Dear Col. Hariharan sir,

I am sure you made the readers to visualise the situation of the past. From this article, I could imagine the situation of politics and the military selection at that time. Hope your friend Mr. Rathamadhavan found the answer for the ingredients in Chocolate :). I could imagine how thrilling it would be to hear Great Nethaji's voice in radio when there was a restriction in town.

Many people of that time, used to say that even in British rule India flourished. But you have clearly brought out the issues people faced during british rule which was even worse than our present politicians rule. While reading about, getting the permission in Velore collector office to buy a pen, I wondered, do the Englishmen followed the saying "Pen is mightier than sword!".

While reading about the way 'Scabies' was compared to 'German Soldiers' by your mother, I could understand the amount of knowledge she acquired about war by hearing radio. On the other side, I am surprised to know that your father was a Gandhian. Great Salutes to him sir.

The finishing touch about chameleon's showed the complex political situation during the time of Independence.

I enjoyed the way it was directed to explain the situation of that time.

Regards,
Vithiyapathy