ஆர் ஹரிஹரன்
கொஞ்ச காலமாக எனக்கு ஒரு சின்ன பிரச்சினை. சின்ன
வயசில் தோன்றும் பிரச்சினைகளிலிருந்து அது முற்றிலும் மாறுபட்டது. எனது
வாழ்க்கையின் இலையுதிர் காலத்தில் நான் நிற்கும்போது,. ஏனோ தெரியவில்லை,
முன்னெப்போதையும் விட கடவுளைப் பற்றி யோசிக்கிறேன்.
இதற்கு வாழ்வின் அடுத்த கட்டப்
பயணம் என்ன என்ற இனம் தெரியாத கேள்வி அடி மனிதில் ஒளிந்திருப்பது தான் காரணமா?
தெரியவில்லை.
கடவுளே என் வீட்டுக் கதவைத் தட்டினால் கூட எனக்கு அவரையோ, (அவளையோ
அல்லது அதையோ) அடையாளம் கண்டு கொள்ள முடியாது. ஏனென்றால் கடவுள் அருவமா, உருவமா,
அல்லாவா, ஜீசஸ்ஸா, யாஹ்வேயா, நிரங்காரியா, பிரணவமா, விஷ்ணுவா, ராமரா, கிருஷ்ணனா,
அனுமனா, பிரம்மாவா அல்லது சிவனா, பார்வதியா என்று கடவுளர்களின் சூப்பர்
மார்க்கெட்டில் எது உண்மையான கடவுள் என்று நான் தேடியதில்லை.
கடவுள் என்னைத் தேடுவதின் தோற்றமா அல்லது
அடி மனதில் கடவுளைப் பற்றி என்னை அறியாமலே நான் தேடுகிறேனா தெரியவில்லை. ஏனென்றால்
நமது மனிதில் ஆழப்பொதிந்திருக்கும் சப்-கான்ஷியஸ் பகுதியில் என்ன இருக்கிறது என்று
நமக்கே தெரியாது என்று மனோதத்துவம் கூறுகிறது. சொல்லப்போனல் கடவுள் உண்டா இல்லையா என்ற வாதம்
என்னைப் பொறுத்தவரை உபயோகமே இல்லாத ஒன்று. ஆகவே என் மனைவி கோவிலுக்குப் போகலாம்
என்று என்னை அழைத்தால் நான் கிளம்பிவிடுவேன். அதன் காரணம் என் கடவுள் நம்பிக்கை
அல்ல. என் மனைவியிடம் எனக்கு உள்ள உறவே காரணம். மனைவிக்கு நம்பிக்கை சுதந்திரம்
என்பது அடிப்படை உரிமை. அதன் அடிப்படையில் அவள் என்னைக் கோவிலுக்கு அழைத்தால் அதை நான்
ஏன் தவிர்க்க வேண்டும்?
கடந்த அறுபது ஆண்டுகளாக எனக்கும்
கடவுளுக்கும் உள்ள உறவை. நமது நகர் புறங்களில் அடுக்கு மாடிக் கட்டிடத்தில்
வசிக்கும் குடிமகனுக்கும் அடுத்த ஃபிளாட்டில் உள்ளவருக்கும் உள்ள உறவுடன்
ஒப்பிடலாம். அடுத்த வீட்டுக்காரர் இருக்கிறாரா இல்லையா என்று அவனுக்குத் தெரியாது.
அதைப் பற்றி நமது குடிமகனுக்கு அக்கறை இல்லை. கேட்டால் “அதெல்லாம் டோட்டல் வேஸ்ட்,
அங்கிள், இன்வேஷன் ஆஃப் ப்ரைவசி” என்று விளக்கம் கிடைக்கும்.
அந்த நாகரீக வாதத்தை
விட “சிட்டில அடுத்த வீட்டு ஆசாமி யாருங்கறது முக்கியமில்லீங்க. அவன் நம்மை ரோதனை
பண்ணக்கூடாதுங்க அதுதான் முக்கியம்” என்று என் ஆபீஸ் பியூன் பாலசந்திரன் தனது
வீட்டை மாற்றிய போது அளித்த யதார்த்தமான விளக்கமே என்னுடைய நிலைக்குப் பொருந்தும்
என்று நினைக்கிறேன். .
சிறு வயதில் தேவாரமும் வள்ளலாரின்
திருவருட்பாவும் மனப்பாடம் செய்திருக்கிறேன்; எனது சுய ஈடுபாட்டால் நான் அதைச்
செய்யவில்லை. தமிழ் பக்தி இலக்கியத்தைக் கொண்டாடிய என் அம்மாவும் தாத்தாவுமே
அதற்குக் காரணம். பிற்காலத்தில் நாமக்கல் கவிஞர் கூறியபடி நீரு பூசினேன் நெறியினைக்
கண்டிலேன் என்று மாறிவிட்டேன்..
அதற்கு ஒரு காரணம், நான் பதினாறு வயதில் கல்லூரி
ஹாஸ்டல் வாசம் ஆரம்பித்த காலத்திலிருந்த பிறந்து வளர்ந்த வீட்டுச் சூழ்நிலையிலிருந்த
பிரிந்ததாக இருக்கலாம். ஆனால் கல்லூரியில் படித்த காலத்திலிருந்து எனக்கு கடவுளைப்
பற்றிய நினைப்பு அதிகம் கிடையாது. என் ரூம் மேட் அதற்கு நேர் மாதிரி. காலையில்
கடவுளைக் கும்பிட்டு நீறு பூசி பயந்து கொண்டே தேர்வு எழுதி ஃபெயிலானவன். அதெல்லாம்
செய்யாமலே அதே அனுபவத்தைப் பெற்றவன் நான்.
அந்தக் காலத்தில்தான் சி. என். அண்ணாதுரை
என்ற கவர்ச்சிகரமான இளம் பேச்சாளர், உலக அளவில் நாத்திகத்தைப் பரப்பிய
இங்கர்சாலைப் பற்றி அடுக்கு மொழியில் பேசியும் எழுதியும் அறிஞர் அண்ணாவாக
மாறினார். நான் ஆங்கிலத்தில் இங்கர்சால் எழுதியதைக் கொஞ்சம் படித்த பின், கடவுள்
நம்பிக்கையே இல்லாதவர், இல்லாதவரைப் பற்றியே ஏன் புத்தகம் எழுதினார் என்று எனக்கு
விளங்கவில்லை. நமது இலக்கியத்தில் முருகனைத் தமிழில் வைதாரையும் வாழ்த்துவான் என்று
குறிப்பிட்டுள்ளார்கள். அதன்படி இங்கர்சாலும் கடவுளால் வாழ்த்தப் பட்டிருப்பாரோ
என்னவோ தெரியாது.
தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரியில் எனக்கு
ஃபிசிக்ஸ் போதித்த டாக்டர் தங்கராஜ் அணுக்கூறுகளைப் பற்றி விளக்கும் போது உலகைப்
படைத்த கடவுளின் விந்தையே அந்த அணுவின் கருவக்குள் அடங்கி இருக்கிறது என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து நாத்திக வாதத்தைக் கண்டித்தவர், உலக மொழிகளில் கடவுள் என்ற சொல்
இருப்பதே அவர் உண்டு என்பதற்கு நிரூபணம் என்ற “டெலியலாஜிகல்” வாதத்தை முன்
வைத்தார்.
டெலியலாஜிகல் வாதம் இயற்கையில் நடப்பது எல்லாம் ஒரு காரணத்துடனேயே
நடக்கிறது என்பதாகும். ஆனால் கடவுளைப் பொருத்தவரை அந்த வாதம் எனக்கு சரியாகப்
படவில்லை. மங்கோலிய நாட்டில் பல பகுதிகளில் மழையே பெய்வதில்லை. அதனால் அங்கு
வழக்கில் இருந்த மொழிகளில் மழை என்ற சொல்லே இல்லை என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.
அந்தச் சொல் இல்லாத்தால் மழையே கிடையாது என்று வாதாட முடியுமா?
எனது ராணுவச் சேவைக்காலத்தில் போர்முனை
அனுபவங்களில் கடவுளுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. ஒவ்வொரு யூனிட்டிலும் ஒரு
கோவில், அல்லது குருத்துவாரா, சொல்லப் போனால் சர்ச் கூட உண்டு. சில ராணுவ
அமைப்புகளில் இவை எல்லாமே இருக்கும். ராணுவத்தில் கோவிலைப் பராமரிக்க சீருடை
அணிந்த பண்டித்ஜி (சீக்கியர்களுக்கு கிரந்தி, இஸ்லாமியருக்கு முல்லா,
கிறிஸ்துவர்களுக்கு சாப்ளின்) இருப்பார். ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி முடிந்த
பின் புதிதாகச் சேர்ந்த சிப்பாய்கள் தங்கள் மதத்திற்கு ஏற்ப, கீதை, குர்ஆன்,
பைபிள் அல்லது கிரந்த் சாகிப் மீதோ கையைத் தொட்டு ராணுவ சேவைக்கான பிரமாணம்
எடுப்பார்கள்.
ராணுவ யூனிட்டுகளில் பண்டிகைக்
காலங்களிலும் அல்லது எந்த முக்கியமான காரியத்தையும் துவங்குவதற்கு முன்பும்
“மந்திர் பரேட்” – கோவில் வழிபாடு – நடக்கும். அதில் ஜாதி மத வேறுபாடு இல்லாமல்
எல்லோரும் பங்கு பெருவார்கள். அவ்வாறு நான் பல முறை துர்கா பூஜா, கிறிஸ்மஸ்,
குருபரப் (சீக்கிய குரு குருநானக் பிறந்த நாள்) வழிபாட்டில் பங்கு
பெற்றிருக்கிறேன். போரில் ஈடுபடவதற்கு முன்பு கோவில் வழிபாட்டை நடத்துவார்கள்.
பல
படைப் பிரிவுகளின் போர் முழக்கமே கடவுளைப் பற்றியதுதான். “ஜெய் பவானி”, “போலே சோனே
ஹால் சத் சிரீ அகால்” ஏன் “அல்லாஹூ அக்பர்” என்று நமது படைகளின் முழக்கத்தைப்
போரின் போது நான் கேட்டிருக்கிறேன். ஆனால் போர் நடக்கும் போது எவரும் கடவுளைப்
பற்றி அதிகம் நினைக்கவில்லை என்றே தோன்றுகிறது.
என்னுடைய பீரங்கிப் பிரிவின்
கமாண்ட் போஸ்ட் (தரையின் கீழே ஆறடி தோண்டப்பட்ட பள்ளத்தில்) மீது பாகிஸ்தான்
பீரங்கிக் குண்டு வீச்சு தொடர்ந்து நடந்த போது கூட என்னுடன் இருந்த சிப்பாய்கள்
ஆண்டவனை நினைத்ததாகத் தெரியவில்லை. அவரவர்களுக்கான வேலையில் ஈடு பட்டிருந்தோம்.
குண்டு மாரி முடிந்த பின்பு தான் எனக்கு ஒருவழியாக மேலே வீசிய குண்டுச்
சிதறல்களின் வீச்சில் தப்பினோமே என்று பெருமூச்சு விட முடிந்தது. ஆனால் அங்கே, பதிலடி
கொடுக்க கணக்கெடுத்துக் கொண்டிருந்த கொச்சு மோன் ஜோசப் புன் சிரிப்புடன் சிலுவைக்
குறியிட்டுக் கொண்டே ஏதோ முணு முணுத்தான்.
“என்ன கொச்சு மோன், என்ன வேண்டுதலை?” என்று
நான் அறை குறை மலையாளத்தில் கேட்க அவன் சிரித்தான். “சார் நம்ம தலையில குண்டு
விழுந்திருந்தா நாம எங்கியோ போயிருப்போம். ஆனால் அந்த நியூசைக் கேட்ட உடனே என் அம்பது
வயசுக்கார அம்மாவுக்கு உயிரே
போயிருக்கும். அவளைக் காப்பாத்தினதுக்கு மதர் மேரிக்கு நன்றி சொன்னேன்” என்றான்!
இரண்டு நாள் கழித்து என் தாயார் தான் தினமும் வாசிக்கும் குமரகுருபரர் முருகனைத்
துதித்து எழுதிய “திருப்பெருவடிவம்” புத்தகத்தை எனக்கு அனுப்பி இருந்தார்.
“தினமும் வாசி இதை. எல்லாம் நல்லதே நடக்கும். நீ வாசிக்கவில்லையானாலும் உன்னுடன்
வைத்துக் கொள். ஆண்டவன் காப்பாற்றுவான்” என்று எழுதி இருந்தது என் தாயாரின் மீது நான்
வைத்திருந்த மதிப்பை அதிகரித்தது.
போரின் இடையே, கடவுளின் நினைப்பு மீண்டும்
தோன்றுவது, போரில் இறந்தவர்களின் ஈமக்கிரியைகளைச் செய்யும் போதுதான். அதை
பண்டித்ஜிதான் செய்வார். எனது இலங்கைப் போர் காலத்தில், யாழ்ப்பாணம் விமான தளத்தின்
அருகே நாங்கள் தங்கியிருந்தோம். அங்கே ஏர் போர்ட்டின் காங்கிரீட் பாதையில் நூற்றுக்கும்
மேற்பட்ட இந்திய ஜவான்களின் பிணங்கள் ராணுவத்துக்கு உரித்தான பாணியில் வரிசையாய்
வைக்கப்பட்டு மந்திரங்கள் ஓத எரிந்த காட்சி என் நினைவில் நீங்காத ஒன்றாகும்.
நாங்கள்
வசித்த அறைகள், ஆபீஸ் அறைகள் எல்லாவற்றையுமே மறைந்த வீர்ர்கள் புகையாய் இரண்டு
நாட்கள் சூழ்ந்து கொண்ட அனுபவம் இன்றும் என் உடலிலும் உள்ளத்தில் ஒட்டிக்
கொண்டிருக்கிறது.. ஈமக்கிரியை முடிந்த பின்பு, பண்டித்ஜி கண்கள் ரத்தமாய் சிவக்க,
மூச்சுத் திணறலுடன் எங்கள் டாக்டரிடம் வைத்தியத்திற்கு வந்தார். அவர்
மூச்சுத்திணறலும் வயிற்றில் செருமிய அமிலமும் தாக்க, “ஆண்டவன்தான் எனக்கு இந்த
வேலையைக் கொடுத்தான். அவன்தான் என்னைக் காப்பத்தணும்” என்று டாக்டரிடம் சொன்னது நினைவுக்கு
வருகிறது.
ஆண்டவன் ஆபத் சகாயன் என்று சொல்லுவது
எவ்வளவு பொருத்தம்? தலையை வாசலில் இடித்துக் கொண்டால் ராமா என்று கடவுளை
அழைக்கிறோம். நாம் ஆண்டவனை வழிபட்டால் நமக்கு என்ன ஆதாயம் என்ற ஆசையில் இஷ்ட
சித்தி, வரசித்தி, என்று கடவுளுக்குப் பெயர் வைத்து நேர்த்திக் கடன் செய்கிறோம்.
ஆக ஆண்டவன் இருக்கிறாரோ இல்லையோ, பெரும்பாலானோர் வாழ்க்கையில் அவர் முக்கிய அங்கம்
வகிக்கிறார். இருக்கட்டமே. நம்பினோர் கெடுவதில்லை நம்பாதவர் வாழ்வதில்லை என்ற
வாதம் உண்மையா? தெரியவில்லை. அதைக் கண்டு கொள்ளாமல் இருந்ததால் எனக்குப் பெரும் இழப்பு
இருப்பதாகத் தெரியவில்லை.
No comments:
Post a Comment