Tuesday, 10 December 2019

அம்பாந்தோட்டையின் ஆதிக்கத்தை சீனா விட்டுக்கொடுக்காது


கேர்ணல். ஹரிஹரன் விசேட செவ்வி
நேர்காணல்:- ஆர்.ராம்
Courtesy: Veera Kesari Weekend, Colombo | 08-12-2019 |
 #GR VISIT to INDIA #Indo lanka ocean politics #Chinese role #BRI #Exclusive

ஜனாதிபதி கோத்தாபய சீன சார்பு நிலையில் இல்லை என்பதை இந்தியா நிச்சயம் செய்வது அவரின் அடுத்த கட்ட செயற்பாடுகளை பொறுத்தே அமையும்.

பதின்மூன்றாவது சட்டத் திருத்தத்தை கோத்தாபய முழுமையாக செயல் படுத்துவார் என்பது வீணான எதிர்பார்ப்பு.

அம்பந்தோட்டை துறைமுகமானது, கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தினை விடவும் சீனாவின் பிராந்திய பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானது. அத்துடன் இத்துறைமுகமானது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் கனவுத்திட்டத்தின் 'கரு' ஆகும். ஆகவே அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா தனது ஆதிக்கத்தை விட்டுக் கொடுக்கும் என எதிர்பார்ப்பது ஏமாற்றத்திலேயே முடியும் என்று இந்திய இராணுவத்தின் ஓய்வு நிலை மூத்த அதிகாரியான கேர்ணல் ஆர். ஹரிஹரன் விரகேசரி வாரவெளியீட்டுக்கு தொலைபேசி மூலம் வழங்கிய விசேட செவ்வியின்போது இவ்வாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, முக்கியத்துவம் அளிக்கப்பட்ட விடயங்களை எவ்வாறு பார்கின்றீர்கள்?

பதில்:- எனது பார்வையில், இரு தலைவர்களுக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையின் முக்கிய தொனியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையிலான கடந்த கால ஆட்சியில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட கசப்பான உணர்வுகளையும், அனுபவங்களையும் மறந்து, புதிய பாதையில் நல்லுறவு ஏற்படுத்துவயே மையப்படுத்தியுள்ளது.

குறிப்பாக, மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுடன் கொண்டிருந்த காழ்புணர்ச்சியால் சீனாவிடம் காட்டிய விசேட கரிசனையும் உள்ளடங்குகின்றது. அதன் பிரதிபலிப்பாகவே ஜனாதிபதி கோத்தாபய இலங்கை, இந்திய, சீனா ஆகிய இரு வல்லரசுகளுக்கும் இடையே நடு நிலையாக செயல்படும் என வெளிப்படையாக கூறியுள்ளார்.

அத்துடன் இரு நாடுகளும் பிராந்திய மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் எவ்வாறு மேம்படுத்திச் செயல்படுவது, அதற்கு இலங்கைக்கு வேண்டிய தேவைகளை நிறைவேற்றுவதில் இந்தியா எவ்வாறு உதவலாம் என்பனவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன.

இந்தியா நெடுங்காலமாக பல்வேறு தீவிரவாத அமைப்புகளை உள்நாட்டில் பிரவேசிப்பதற்கோ, காலூன்றுவதற்கு அனுமதிக்காது உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வெற்றி கண்டுள்ளது. அவ்வாறான நிலையில் இலங்கையில் புதிதாகத் தோன்றியுள்ள இஸ்லாமிய தீவிரவாத அச்சுறுத்தலை ஒடுக்கவதற்காக இந்தியாவின் உதவியை பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தையி;ன்போது ஜனாதிபதி கோத்தாபய நாடியுள்ளார்.

பிரதமர் மோடி இலங்கைக்கு இந்த விடயத்தில் முழுமையான ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் ஒர் அங்கமாகவே இலங்கையின் பாதுகாப்பு கட்டமைப்புக்களை வலுப்படுத்தி 50மில்லியன் டொலர் உதவித் தொகையை இந்தியா முதற்கட்டமாக வழங்குகின்றது.

கேள்வி:- இச்சந்திப்பில் இலங்கையின் தேசிய பாதுகாப்பு, பிராந்திய பாதுகாப்பு தொடர்பில் அதிகளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் நிதியுதவியை இலங்கை எவ்வாறு பயன்படுத்த முடியும்?

பதில்:- குறிப்பாக இலங்கை புலனாய்வுத்துறையை மேம்படுத்துவதே இந்த நிதியுதவியின் பிரதான நோக்காக இருக்கின்றது. இந்நிலையில் இரு நாடுகளின் புலனாய்வு அமைப்புக்களுக்கு இடையேயான செய்திப் பறிமாற்றத்தை உடனுக்குடன் ஏற்படுத்துவதற்காக உபயோகிக்கலாம். வுpனைத்திறனான செயற்பாடுகளுக்காக, கண்காணிப்பு கருவிகளையும், அதற்கான மென்பொருட்களையும் கொள்வனவு செய்வதற்காக இந்த நிதியை பயன்படுத்த முடியும். இருநாடுகளும் இந்த விடயத்தில் ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றே கருதுகின்றேன்.

கேள்வி:- இந்தியா உட்பட இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்ந்தும் காணப்படுவதாக கருதுகின்றீர்களா?

பதில்:- இந்து மற்றும் பசுபிக் பெருங்கடல்களில் பாரிய அளவில் பாதுகாப்பு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமையால் அதன் பாதிப்புகள் எதிர் வருங்காலத்தில் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களே உள்ளன. இவ்வாறான மாற்றங்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது சீனாவின் இராணுவ வலிமை மற்றும் பண பல அதிகம் தான். இந்த இரண்டு விடயங்களும் தன்வசம் வைத்திருக்கும் சீனா உலக அளவில் தனது வல்லாதிக்க தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவின் பிரவேசத்தால் இந்து- பசுபிக் பெருங்கடலில் வல்லரசாக உலவி வரும் அமெரிக்கா மற்றும் அதைச் சார்ந்த நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் அந்நாட்டைச் சார்ந்த நாடுகளுக்கும் பாரிய சந்தேகங்களை அதிகரிக்கச் செய்து வருகின்றது. ஆகவே இந்த பிரச்சினை உடனடியாக தீர்க்கப்படாது நீடித்தால் ஓரளவுக்கு பதட்டமான சூழ்நிலை இப்பிராந்தியத்தில் அவ்வப்போது இருந்துகொண்டே இருக்கும் என்பதே எனது கணிப்பாக இருக்கின்றது. அந்த அடிப்படையில் இந்தப் பிராந்தியங்களின் பாதுகாப்பு என்பது இன்றியமையாததாக இருக்கின்றது.

கேள்வி:- பிரதமர் மோடியின் வெற்றிக்கு புல்வாமா தாக்குதலும், ஜனாதிபதி கோத்தாபயவின் வெற்றிக்கு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலும் காரணிகளாக அமைந்துள்ளன என்ற கருத்தினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- இந்தக் கருத்தை முழுமையாக நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். பிரதமர் மோடியின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவர் அரசின் செயல்பாட்டில் மேற்கொண்ட சீர்திருத்தங்களே ஆகும். அவற்றில் இலஞ்ச ஒழிப்பு, பொதுவிநியோகம் மற்றும் அரசு உதவியை நேரடியாக பெற எடுக்க பட்ட முயற்சிகள் மற்றும் மக்களிடையே அவர் ஒரு செயல்பாட்டு வீரர் என்று பெற்ற பெருமதிப்பு ஆகியவை அடங்கும். இந்தக் கருத்துக்கள் மக்களிடையே புல்வாமா தாக்குதலுக்கு முன்பே பரவியிருந்தன.

இலங்கையில் 2015இல் ஆட்சிப்பொறுப்பினை ஏற்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் ரணில் கூட்டு ஆட்சியின் இரண்டாண்டு செயல்பாட்டுக்கு பின்னர், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அவர்கள் மறந்தார்கள். இருதரப்பினருக்கம் இடையில் உட்பூசல்கள் மேலோங்கின. அதனையடுத்து ஆட்சியை முன்னகர்த்த முடியாத அரசின் கையாலாகாத நிலைமைகள் உருவாகின. அதனால் மக்கள் அந்த ஆட்சியின் மீது வைத்திருந்த மதிப்பு குலைந்தது.

அத்துடன் மிக முக்கியமாக ஈஸ்டர் தினத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு முன்பும் பின்பும் அரசு பாதுகாப்புத்துறையில் காட்டிய மெத்தனமான போக்கு வெட்டவெளிச்சமாகியது. ஆகவே மக்களிடையே நாட்டின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் பற்றிய அச்சம் அதிகமாயிற்று. ஏற்கனவே கோத்தாபய சிங்களப் பொதுமக்களிடையே ஈழப்போரில் வெற்றி கண்ட பெருமதிப்பினை பெற்றிருந்தார்.

அவ்வாறானவொருவரிடத்தில் நாடு ஒப்படைக்கப்பட்டால் பாதுகாப்பு உறுதியாகும் என்ற மனநிலைக்கு மக்கள் மாறினார்கள். அத்துடன் அவருக்கு உடனுக்குடன் முடிவெடுத்து செயலாக்கத் திறமை உள்ளவர் என்ற கருத்து மக்களிடையே நிலவியது. அதுவே அவர் வெற்றி பெற காரணமாக அமைந்து விட்டது.

கேள்வி:- ராஜபக்ஷ தரப்பினர் சீன சார்பு நிலை கொண்டவர்கள் என்ற பொதுவான கணிப்புக்களே இருக்கின்ற நிலையில் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பதில் இந்தியா எத்தகைய கரிசனையைக் கொண்டுள்ளது?

பதில்:- வெளிநாடுகளின் தலையீடு பெருமளவில் இல்லாததே இந்த தேர்தலுக்கும் முந்தைய ஜனாதிபதி தேர்தல்களுக்கும் இருந்த முக்கியமான வேறுபாடாக உள்ளது. அத்துடன் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தோல்விக்கு பின்னரும் மஹிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் மோடியுடன் தொடர்பு வைத்திருநதமை குறிப்பிடத்தக்கது. இருந்தாலும், கோத்தாபய ராஜபக்ஷ சீன சார்பு நிலை இல்லை என்பதை இந்தியா நிச்சயம் செய்வது அவருடைய அடுத்த கட்ட செயற்பாடுகளை பொறுத்தே அமையும். ஆகவே இந்தியா ஜனாதிபதி கோத்தாபயவின் அடுத்த கட்டச் செயற்பாடுகளில் நிச்சயமாக கரிசனை கொண்டிருக்கும்.

கேள்வி:- அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் மீள்பரிசீலனை செய்யப்படவுள்ள நிலையில் அச்செயற்பாடு சீனாவின் 'பிடியை' தளத்துவதாக அமையும் என்று கருதலாமா?

பதில்:- இந்த துறைமுகம் சார்ந்த ஒப்பந்தத்தை திருத்த முதலில் சீனாவின் ஒப்புதலைப் பெறவேண்டியுள்ளது. அதைப் பெறுவது அவ்வளவு எளிதான விடயமல்ல. முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால அரசு கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்ட ஒப்பந்தத்தை திருத்தியமைப்பதற்கு ஏறத்தாழ மூன்று ஆண்டுகளாகியிருந்தன.

அவ்வாறான நிலையில் சீனா அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தினை திருத்தியமைப்பதற்கு இணங்கினாலும் மேற்குறிப்பிட்ட விடயத்தின் பிரகாரம் பார்க்கையில் அது உடன் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்க முடியாது. அம்பந்தோட்டை துறைமுகமானது, கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தினை விடவும் சீனாவின் பிராந்திய பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானது.

ஆகவே ஜனாதிபதி கோத்தாபய இந்த விடயத்தை கையிலெடுத்தாலும் ஐந்து ஆண்டுகளுக்குள் எவ்விதமான முடிவுகளும் கிடைக்காது. பேச்சுவார்த்தைகளிலேயே ஆட்சிக்காலம் நிறைவுக்கு வந்துவிடும்.

கேள்வி:- சீனா, தனது கனவுத்திட்டமான ஒரேபட்டி ஒரே மண்டலம் (டீசுஐ) திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் கேந்திர ஸ்தானமான அம்பாந்தோட்டையில் ஆதிக்கத்தை தளத்துவதற்கு முன்வருமா?

பதில்:- இல்லை, அம்பந்தோட்டை துறைமுகமானது ஒரு பட்டி ஒரே மண்டலம் திட்டத்தின் இன்றியமையாத அங்கமாகவுள்ளது. ஏனெனில் இலங்கை பூகோள ரீதியில் இந்து சமுத்திரத்தின் ஆளுமைக்கான கேந்திர முக்கியமான பகுதியில் அமைந்துள்ளது. அம்பந்தோட்டை துறைமுகம் இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் சீனாவின் கனவுத்திட்டத்தின் கரு என்று கருதலாம்.

ஆகவே அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா தனது ஆதிக்கத்தை விட்டுக் கொடுக்கும் என எதிர்பார்ப்பது ஏமாற்றத்தில் முடியும். அவ்வாறு சீனா முடிவெடுக்கும் வகையில் அழுத்தம் எதுவும் தற்போது இருப்பதாகத் தெரியவில்லை. சீனாவின் இராணுவ மற்றும் பணபல வளர்ச்சியைக் கண்டால் அத்தகைய சூழ்நிலை எதிர்காலத்திலும் தோன்றுவதற்கும் வாய்ப்புக்கள் இல்லை.

கேள்வி:- புதிய ஜனாதிபதி கோத்தாபய அமெரிக்க, சீனா, இந்தியா நாடுகளுக்கு இடையிலான சமநிலையை பேணுவார் என்று எதிர்பார்கின்றீர்களா?

பதில்:- இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் வல்லரசுகளால் ஏற்படும் பாதுகாப்பு அழுத்தங்களால் ஜனாதிபதி கோத்தாபயவுக்கு நடுநிலை பேணுவதைத் தவிர வேறு வழியில்லை.

கேள்வி:- புதிய ஆட்சியில் இராணுவ புலனாய்வுக் கட்டமைப்புக்களை வலுப்படுத்தி அவற்றை அன்றாட செயற்படுகளில் ஈடுபடுத்தப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டினையும், போர் நிறைவடைந்த பத்தாண்டுகளாகின்ற போதும் வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் இராணுவ முகாம்கள் நீடிக்கப்பட வேண்டும் என்று கூறப்படுவதையும் எவ்வாறு பார்கின்றீர்கள்?

பதில்;:- உள்நாட்டில் இனங்களுக்கிடையிலான வேறுபாடுகள் நீடிக்கின்ற நிலையில் இவ்வாறான நிலைப்பாடுகள் விரிசல்களை மேலும் அதிகமாக்கும் செயற்பாடுகளாகவே இருக்கும் என்று கருதுகிறேன். வடகிழக்கில் இராணுவ முகாம்கள் தொடர்ந்து நிலை கொண்டு இருப்பதில் தவறில்லை. ஆனால் அதற்கான சமூக சூழ்நிலையை ஏற்படுத்த அரசு தவறிவிட்டது. ஆகவே முதலாவதாக அரசு வடகிழக்கில் இராணுவ செயல்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

கேள்வி:- இராணுவப்பின்னணியைக் கொண்டுள்ள ஜனாதிபதி கோத்தாபய முன்னாள் படைவீரர்களை முக்கிய பதவிகளில் அமர்த்துகின்றமையையும் அவருடைய போக்கு சர்வாதிகாரத்தினையே நோக்கி நகரும் என்று எதிர்வு கூறப்படுவதையும் எவ்வாறு பார்கின்றீர்கள்?

பதில்:- இராணுவ செயல்பாடுகளை அரசாண்மைக்கு உபயோகமாக்குவது ஜனநாயக வளர்ச்சிக்கு புறம்பானது. பாகிஸ்தானில் அதிக அளவில் அரசியலில் இராணுவ ஈடுபட்டால் நடக்கும் அவலங்கள் இதற்கு எடுத்துக்காட்டாகின்றன. கோத்தாபயவின் கடந்தகால செயல்பாடுகளில் சில எதேச்சதிகாரத்தன்மை கொண்டவை என்று பொதுவான கருத்துக்கள் நிலவும் போது இத்தகைய அச்சங்கள் ஏற்படுகின்றன.

ஆகவே அவர் தனது செயல்பாடுகளை கவனத்துடன் செய்ய வேண்டும். அவருக்கு உத்திகளைக் கூறுவது பிரதமர் மஹிந்த மற்றும் பதவியில் உள்ள பழுத்த அரசியல்வாதிகள் கடமையாகின்றது. இவற்றை எல்லாம் கடந்து இலங்கையில் ஜனநாயகம் தொடர்ந்து நிலை பெறவேண்டும் என்று எதிர்பார்கின்றேன்.

கேள்வி:- சீன ஜனாதிபதிக்கும், இந்திய பிரதமருக்கும் இடையில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற சந்திப்பின் பின்னரான சூழலில் இந்தியாவின் சீன சார்பு நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா?

பதில்:- செயற்பாட்டு ரீதியாக இந்திய சீனா உறவில் ஏற்படும் விரிசல்கள் கட்டுக்கு அடங்காது போர்ச் சூழலை உருவாக்க கூடாது என்பதே ஊஹான் மற்றும் மாமல்லபுரம் ஆகியவற்றில் இரு தலைவர்களுக்குமிடையிலான சந்திப்புக்களின் கருத்தாகும். அதற்கான சுமூக சூழலை ஏற்படுத்துவதற்கு இந்தச் சந்திப்புக்கள் பெரிதும் உதவியுள்ளன. ஆனால் இரு நாடுகளின் அடிப்படை நிலைப்பாட்டில் மாற்றங்கள் அதிகம் இல்லை. மாமல்லபுரம் போன்ற சந்திப்புகளின் குறிக்கோள்கள் அதிகாரப்பூர்வமான அடிப்படை நிலைப்பாடுகளில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பதல்ல.

கேள்வி:- பொருளாதர ஸ்திரத்தினை பேணுவதற்கு தவிர்க்க முடியாதவொரு சூழலில் இலங்கை, சீனாவுடன் நெருங்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்றபோது இந்தியாவின் பிரதிபலிப்பு எவ்வாறு இருக்கும்?

பதில்;:- எந்த காரணத்துக்காக, எத்தகைய சூழலில் சீன பொருளாதார உதவியை இலங்கை பெறுகிறது என்பதைப் பொறுத்தே, இந்தியா தனது நிலைபாட்டை எடுக்கும். அந்தப் பிரதிபலிப்புக்களை தற்போதே கூற முடியாது.

கேள்வி:- இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை அரசியலமைப்பில் உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று கருதுகின்றீர்காளா?

பதில்;:- பதின்மூன்றாவது சட்டத் திருத்தத்தை கோத்தாபய முழுமையாக செயல் படுத்துவார் என்பது வீணான எதிர்பார்ப்பு. அதை அவரே பல முறை கூறியுள்ளார். ஏனெனில், அவருக்கு வாக்களித்த சிங்களப் பெரும்பான்மையினருக்கு அதில் உடன்பாடு இல்லை.

கேள்வி:- பிரதமர் மோடி அதற்கான வலியுறுத்தலைச் செய்துள்ளபோதும் கோத்தாபய இந்து நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில் அதற்கு மாறுபட்ட கருத்தினையே முன்வைத்துள்ளாரே?

பதில்:- இருவரும் தமது கருத்துக்களை வெளிப்படையாக கூறியுள்ளார்கள். அதற்கு மேல் முன்னேற்றம் காண இரு நாடுகளில் உள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் முயற்சி எடுப்பார்களா என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியாக இருக்கின்றது.

கேள்வி:- இறுதிப்போரின் பின்னர் தற்போயை புதிய ஜனாதிபதி, இராணுவத்தளபதி, பாதுகாப்புச் செயலாளர், உள்ளிட்டவர்கள் ஐக்கிய நாடுகள் மீது மனித உரிமை பேரவை உட்பட சர்வதேச ரீதியாக குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன. இவை எதிர்காலத்தில் இலங்கையின் மீது சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுக்கு காரணமாக அமையும் என்று கருதுகின்றீர்களா?

பதில்:- ஈழப்போர் சார்ந்த மனித உரிமை குற்றங்களுக்கு இலங்கை பொறுப்புடன் நடவடிக்கை எடுக்கும் வரையில் சர்வதேச நாடுகளின் அழுத்தங்கள் தொடரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அவ்வாறான அழுத்தங்களை இலங்கை தவிர்க்க முடியாது. அதற்கு உலக அளவில் பல்வேறு உதாரணங்களைக் கூற முடியும்.

ஐக்கிய நாடுகள் சபையில், வட கொரியா, சூடான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இடம் பெற்ற பல்வேறு மனித உரிமை குற்றங்களுக்கு சரியான பதிலளிக்காததால் அவற்றின் மீது சுமத்தப் பட்ட பொருளாதர மற்றும் ஏற்றுமதி இறக்குமதி தடைகள் பல ஆண்டுகளாக நிடிக்கின்றமையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

கேள்வி:- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை நிராகரிக்கப்போவதாக புதிய ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ள நிலையில் போரின் போது இடம்பெற்ற மீறல்களுக்கான பொறுப்புக்கூறல், நீதிவழங்கள், இராணுவத்தின் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆகியவை தொடர்பிலான விடயங்களுக்கு என்னவாகும்? இந்த விடயங்களில் கரிசனை கொண்டிருக்கும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கை கொள்ள முடியுமா?

பதில்:- தற்போதுள்ள உலக பாதுகாப்பு சூழலில் சர்வதேச நாடுகள், இலங்கையின் போர்குற்றம் சார்ந்த விடயங்களில் கரிசனத்துடன் செயல்படும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்த விடயம் 2020 மார்ச்சில் விவாதத்திற்கு வரும் போது இலங்கையின் மெத்தனப் போக்கு கடுமையாக விமர்சிக்கப்படும். ஆனால் அது விமர்சனத்துடனேயே நின்றுவிடும்.

இலங்கைக்கு சீனாவின் ஒத்துழைப்பு இருக்கும் வரை, இலங்கையால் அவ்வாறான விமர்சனங்களுக்கு முகங்கொடுகக்கவும், அதுசார்ந்த நடவடிக்கைகளை ஓரளவு முன்னெடுக்கவும் முடியும். ஏனெனில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தற்போது அமெரிக்கா அங்கம் வகிக்கவில்லை. இதனால் சீனாவை திட்ட வட்டமாக எதிர்க்க முடியாத நிலைமை உள்ளது. அத்துடன் அங்கத்துவத்தினைக் கொண்டுள்ள ஏனைய நாடுகள் பல சீனாவுக்கு கடன்களைப் பெற்று கடமைப்பட்டவையாக உள்ளன.

ஆகவே அந்நாடுகள் மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்தால், அவற்றுக்கு எதிராக சீனா அழுத்தம் கொடுக்கத் தயங்கப்போவதில்லை. எவ்வாறு இலங்கை ஆட்சியாளர்கள் பாதுகாக்கப்பட்டாலும் போர் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை செய்யாத வரையில் சர்வதேச ரீதியாக இந்த விடயம் கறைபடிந்த நிழலாக இலங்கையைத் தொடரும். அவ்வாறான நிலைமை யொன்று தேவையா என்று கோத்தாபய தலைமையிலான புதிய அரசு சிந்திக்க வேண்டும்





No comments: