…………………………
கொவிட் பெருந்தொற்றின்
பின்னடைவுக்கு மத்தியிலும் கூட, இலங்கை அதன் தரவரிசையை 87 க்கு மேம்படுத்தியிருக்கிறது
என்று ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளைச் சாதிப்பதில் 164 நாடுகளின்
செயற்பாடுகள் தொடர்பான பிந்திய அறிக்கையின் பிரகாரம் அறிந்துகாள்ளக்கூடியதாக இருக்கிறது.
(2019 ஆண்டில் இலங்கை 94 வது இடத்தில் இருந்தது.)
மனித குலத்தினதும்
பூமியினதும் அமைதி, சமாதானத்துக்கும் சுபிட்சத்துக்கும் அத்தியாவசியமானவை என்று
கருதப்பட்ட — 2030 ஆம் ஆண்டளவில் சாதிக்கப்படவேண்டியவை என்று அடையாளம் காணப்பட்ட
17 அபிவிருத்தி இலக்குகள் ( Sustainable development goals) 2015 ஆம் ஆண்டு
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐ.நா.வின் நிலைபேறான
அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தில்(UN Agenda of Sustainable development goals —
SDGs) உள்ளடங்கியிருக்கின்றன.ஆனால், அமைதி, சமாதானத்துக்கும் சுபிட்சத்துக்கும் அவசியமான
நல்லாட்சிக்கு நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் ஒரு இடமிருக்கவில்லை.
நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில்
தரவரிசையில் முன்னேற்றம் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவைப் பொறுத்தவரை, வரவேற்கக்கூடிய ஒரு
செய்தியே. ஜூன் 25 தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் நாட்டின்
ஒட்டுமொத்த செயற்பாடுகளை மீளாய்வு செய்கின்றவேளை சற்று தற்காப்பு மனநிலையுடன் அவர்
பேசியதைக் காணக்கூடியதாக இருந்தது.இலங்கைக்கு பௌத்தமதம் வந்து சேர்ந்ததை குறிக்கும்
பொசன் போயா தினத்தை தேசம் அப்போது கொண்டாடிக் கொண்டிருந்தது. அன்றைய
தினத்தில் ஜனாதிபதியின் உரை அவரது பௌத்த தகுதிப்பாட்டை உறுதிசெய்வதாக அமைந்தது.
கொவிட் — 19 பெருந்தொற்றின்
விளைவாக பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட பின்னடைவுகளையும் அதன் எதிர்மறையான தாக்கங்களை
வெற்றி கொள்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் விளக்கிக்கூறிய பிறகு ஜனாதிபதி
ராஜபக்ச, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீர்வதென்று
மீளவும் உறுதியளித்தார். பாதுகாப்பு இயந்திரத்தை பலப்படுத்தியதன் மூலம் தேசிய
பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் முன்னைய அரசாங்கத்தினால் பலவீனப்படுத்தப்பட்ட
பொருளாதாரத்தை முன்னேற்றியதிலும் தனது சாதனைகளை சரளமாக அவர் பட்டியலிட்டார். ஆனால்,
தனது சகோதரர் மகிந்த மூன்றாவது பதவிக்காலத்துக்கு ஜனாதிபதியாக தெரிவாவதற்கு மேற்கொண்ட
முயற்சியை தோற்கடித்த நல்லாட்சி(Good Governance) கோதாபயவின் உரையில் ஒரு இடத்தைப்
பிடிக்கவில்லை.
நல்லாட்சி இல்லாமல் அபிவிருத்தி
இலக்குகளை அடைவதென்பது அர்த்தமில்லாத ஒன்றாகும். நல்லாட்சியை பல வழிகளில் விளங்கப்படுத்தமுடியும்
; ஆனால், ஒரு ஜனநாயகத்தில் நல்லாட்சி என்பதை இறுதியில் மக்களே தீர்மானிக்கிறார்கள்.
நல்லாட்சி
ஆசியா மற்றும் பசுபிக்கிற்கான
ஐக்கிய நாடுகள் பொருளாதார — சமூக ஆணைக்குழு(UN Economic and Social Commission for
Asia and Pacific (ESCAP) நல்லாட்சியின் 8 பிரதான குணாதிசயங்களை அடையாளப்படுத்துகிறது.நல்லாட்சி
எஸ்காப்பின் அளவுகோல் பிரயோகிக்கப்படுமானால்,
ராஜபக்ச அரசாங்கம் அநேகமாக நல்லாட்சியின் சகல அளவெல்லைகளிலும் பலவீனமானதாகவே இருக்கும்.முன்னைய
அரசாங்கத்தின் தோலவிகளுக்கு பிறகு உறுதிப்பாட்டுக்கும் நல்லாட்சிக்குமாக ஜனாதிபதி கோதாபய
ராஜபக்சவுக்கு அதிகப்பெரும்பான்மையாக வாக்களித்த மக்களுக்கு இது நல்ல செய்தியல்லவே.சட்டத்தின்
ஆட்சி, பொறுப்புக்கூறல், சகல தரப்பினரையும் அரவணைத்த ஆட்சிமுறை எல்லாமே ராஜபக்ச அரசாங்க
முறையில் இல்லை என்பது பிரத்தியேகமாக தெரிகிறது.
மரணதண்டனைக் கைதியான
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய
விவகாரம் இலங்கையில் நல்லாட்சியின் சீரழிவுக்கு நல்ல உதாரணமாகும்.உண்மையில்,பொசன் போயா
தினத்தை முன்னிட்டு மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 93 கைதிகளில் சில்வாவும்
ஒருவர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதேவேளை வழக்கு
எதுவும் தொடுக்கப்படாத 16 தமிழர்களும் மன்னிப்பு அளிக்கப்பட்டவர்களில் அடங்குவர் என்பது
கவனிக்கத்தக்கது.
வசதியான குடும்ப பின்னணியைக்
கொண்ட தனவந்தரான துமிந்த சில்வா , கோதாபயவின் விசுவாசி என்று கருதப்படுகிறார்.
பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அவர் கோதாபயவுடன் நெருக்கமாக பணியாற்றி பாதுகாப்பு
அமைச்சில் ஒரு ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டவர். 2011 அக்டோபர் 8 உள்ளூராட்சி தேர்தல்களின்போது
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவை
சுட்டுக்கொலை செய்ததாக சில்வாவையும் வேறு நான்கு பேரையும் 2016 ஆம் ஆண்டில் கொழும்பு
மேல்நீதிமன்றம் குற்றவாளிகளாக கண்டது. ஐந்து நீதியரசர்களைக் கொண்ட உச்சநீதிமன்ற
அமர்வு 2018 சில்வாவின் மேன்முறையீட்டை நிராகரித்து மரணதண்டனையை ஊர்ஜிதம் செய்தது.
18 மாதங்களுக்கு
முன்னர் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு கோதாபயவினால் வழங்கப்பட்ட இரண்டாவது மன்னிப்பு
இதுவாகும்.2000 ஏப்ரிலில் மிருசுவிலில் மூன்று குழந்தைகள் உட்பட எட்டு குடிமக்களை
கொலை செய்ததாக 2015 குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் இராணவ சார்ஜணட் சுனில் இரத்நாயக்கவை
2020 மார்ச்சில் கோதாபய மன்னிப்பளித்து விடுதலை செய்தார். முன்னதாக இரத்நாயக்கவின்
மேன்முறையீட்டை நிராகரித்த உச்சநீதிமன்றம் மரணதண்டனையை ஊர்ஜிதம் செய்திருந்தது.
சில்வாவுக்கு ஜனாதிபதி
அளித்த மன்னிப்பையடுத்து பெரும் கண்டனங்கள் கிளம்பின. ஜனாதிபதிக்கு கடிதமொன்றை
எழுதிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எந்த அடிப்படையில் பொது மன்னிப்புக்காக
சில்வா தெரிவுசெய்யப்பட்டார் என்பதை தெளிவுபடுத்துமாறு அவரைக் கேட்டிருந்தது. இத்தகைய
ஒரு பொதுமன்னிப்பை வழங்கவேண்டுமானால் அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளிடம் இருந்து
அறிக்கையொன்று பெறப்படவேண்டும் என்று அரசியலமைப்பில் ஏற்பாடு உள்ளது. அதன் பிரகாரம்
செய்யப்பட்டதா என்றும் சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் வினவியது. சில்வாவை விடுவிப்பதற்கு
முன்னதாக சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டதா? நீதியமைச்சருடன் கலந்தாலோசிக்கப்
பட்டதா என்றும் சடடத்தரணிகள் சங்கம் கடிதத்தில் ஜனாதிபதியைக் கேட்டது.
சில்வாவுக்கு அளிக்கப்பட்ட
மன்னிப்பு சட்டத்தின் ஆட்சியை பலவீனப் படுத்தியிருப்பதுடன் பொறுப்புக் கூறலை
மலினப்படுத்தியிருக்கிறது என்று ஐ.நா.மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் சுட்டிக்காட்டியது.
பிரேமச்சந்திரவின் விதவை மனைவி சுமணா பிரேமச்சந்திர அந்த மன்னிப்பை ஒரு தெய்வக்குற்றம்
என்று வர்ணித்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரேமச்சந்திரவின் மகளுமான
ஹிருணிக்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் தனது தந்தைக்கு இருந்த நெருக்கமான உறவை நினைவுகூர்ந்தார்.
மகிந்தவுக்கு எழுதிய கடிதமொன்றில் ஹிருணிக்கா தனது தந்தையை கொடூரமாக கொலை செய்தவருக்கு
மன்னிப்பு வழங்கியமைக்காக ஜனாதிபதியை கடுமையாக கண்டனம் செய்தார். கோதாபயவின்
கீழ் இலங்கை சட்டங்கள் நடைமுறையில் இல்லாத நாடாக இருக்கிறது என்று ஹருணிக்கா வர்ணித்திருந்தார்.
குறிப்பிட்ட சில வழக்குகளில்
சட்டத்தின் ஆட்சியைக் காணவில்லை என்று உச்சநீதிமன்றமும் அவதானித்து வந்திருக்கிறது.
2014 மே மாதம் பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்தவேளையில் கொல்லப்பட்ட 17 வயதான சந்து
மாலிங்க என்ற இளைஞர் தொடர்பான வழக்கில் பொலிசாரின் கொடூரத்துக்கு எதிராக கடுமையான தீர்ப்பொன்றை
உச்சநீதிமன்றம் வழங்கியது. பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போன விவகாரம்,
பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை உட்பட பல முக்கியமான மனித உரிமைகள் மீறல்களை
விசாரணை செய்துவந்த குற்றவியல் விசாரணை
திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர நடத்தப்பட்ட முறை எல்லோருக்கும் தெரிந்ததே.
சட்டமா அதிபரின் வாதங்களை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் நீண்டகாலமாக சிறையில்
இருந்த அபேசேகரவுக்கு பிணை வழங்கியது. இது சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதால் நீதித்துறை
பொறுமையிழந்து வருகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
நீண்டகாலமாக சிறையில் அடக்கப்பட்டிருந்த
தமிழ்க்கைதிகளில் 16 பேரின் விடுதலை இந்த மட்டமான பொசன் பொதுமன்னிப்பு கதையில் ஒரு
ஔிக்கீற்றாக தெரிகிறது. அவர்களது விடுதலை புலிகள் அல்லது புலிகளுக்கு உதவியவர்கள்
என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை எதுவுமின்றி நீண்டகாலமாக சிறையில் வாடும் 100 க்கும்
அதிகமானவர்களின் வழக்குகள் துரிதப்படுத்துவதற்கு கட்டியம் கூறுவதாக அமைகிறது என்று
நம்புவோம்.
ஜனாதிபதி ராஜபக்சவுக்கும் தமிழ்
தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறப்போவதாக
கதை அடிபடுகிறது ; இது இன முரண்பாட்டை முடிவுக்கு கொண்டுவரக்கூடிய அரசியல் இணக்கப்போக்கிற்கு
வழிவகுக்குமா? இது இன்னமும் ஒரு திறந்த கேள்வியே.
ஆனால், இதுவரையான அறிகுறிகள
ஜனாதிபதி ராஜபக்சவுக்கு தீங்கானவையாகவே இருக்கின்றன. கல்லில் எழுத்துப்போல் எல்லாமே
தெளிவாக தெரிகிறது.
ஹிருணிக்கா ஜனாதிபதிக்கு எழுதிய
கடிதத்தில் குறிப்பிட்டதைப் போன்று ” உங்களது ஆட்சி அநீதியை வளர்க்கிறது. ஜனாதிபதி
அவர்களே…..இந்த விலங்குகளை உடைத்துக்கொண்டு மக்கள் கிளர்ந்தெழும் நாள் வெகு தொலைவில்
இல்லை.”
No comments:
Post a Comment