Tuesday, 8 March 2022

ரஷ்யா- உக்ரைன் பங்காளிச் சண்டை



கர்னல் ஆர் ஹரிஹரன் | அந்திமழை இதழ் 113 | மார்ச் 01, 2022 |

http://andhimazhai.com/magazine/current.html

 

ரஷ்யா உக்ரைன் மீது கடந்த 24ந் தேதி போர் தொடுத்தது உலகம் எதிர்பாராதது அல்ல.  ரஷ்யா உக்ரைன் எல்லையில் படைக்குவிப்பை ஜனவரி மாதத்தில் தொடங்கிய பிறகு,  அமெரிக்க அதிபர் மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது ரஷ்ய அதிபர் புதினுக்க எச்சரிக்கை விட்டுக் கொண்டிருந்தார்.  இந்தப் போர் அது உலக அளவில் வெடிக்கும் அபாயம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவது இயற்கையே, ஏனெனில், இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ரஷ்யப் படைகள் ஐரோப்பாவில் நேரடியாக நடத்தும் முதல் போராகும்.

ஐரோப்பாவில் உக்ரைன் ரஷ்யாவுக்கு அடுத்த படி ஐரோப்பாவின் மிகப் பெரிய நாடு. அது ரஷ்யாவோடு தொப்புள் கொடி உறவு கொண்ட நாடு. கடந்த ஐந்து நூற்றாண்டுகளுக்கு மேலாக, பல்வேறு காலகட்டங்களில் உக்ரைன் ரஷ்யப் பேரரசின் பகுதியாக இருந்து வந்தது ரஷ்ய புரட்சிக்குப் பிறகு சோவியுத் யூனியன் அவதரித்த போது உக்ரைன் அதன் ஒரு முக்கிய அங்கமாக மாறியது.  பெரும்பாலான உக்ரைன் மக்கள் ரஷ்ய மொழியில் கல்வி பயின்றவர்கள். உக்ரைன் நாட்டின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு ரஷ்ய வம்சாவளியினர். அது போலவே, ரஷ்யாவில் தற்போது ஏறத்தாழ 20 லட்சம் உக்ரேனியர்கள் உள்ளனர்.

1991-ல் சோவியத் நாடு சிதறத் தொடங்கியபோது, உக்ரைன் சுதந்திர நாடாக உருவாயிற்று. அதற்கு பிறகும், ரஷ்ய உக்ரைன் சகோதர உறவுகள் தொடர்ந்தன.  அதற்கு  ஒரு காரணம், சோவியத் அதிபராக கோர்பஷேவ் 1991ல் பதவிக்கு வந்த பின்பு, உலக அளவில் அமெரிக்காவுடனான பனிப்போரை முடிக்க எடுத்த முயற்சிகளாகும். அவரும், அவரைத் தொடர்ந்த அதிபரான யெல்ட்சினும் சோவியத் நாட்டிலிருந்து பிரிந்து போகும் நாடுகள் ரஷ்யாவை அச்சுறுத்தும் நாடுகளாக மாறக்கூடாது என்பதற்காக அமெரிக்கா மற்றும் நேட்டோ கட்டமைப்பு நாடுளுடன் சேர்ந்து பல நல்லிணக்க ஒப்பந்தங்களை உருவாக்கினார். 

ஆனால், உக்ரைன்-ரஷ்யா இடையே நிலவிய நல்லிணக்கம், 2014 பெப்ரவரி மாதம் துவங்கி தொடர்ந்த உக்ரைன் தலைநகர் கீயேவில் நடந்த “யுரோ மைதான் புரட்சி”க்கு பின் தகர்ந்தது.  ரஷ்ய எதிர்ப்பை மையமாக கொண்ட அந்த புரட்சியாளர்கள், உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் (European Union) அரசியல் மற்றும் வியாபார உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார்கள். அதை ஏற்றுக் கொள்ள, ரஷ்யாவுடன் நெருக்கம் கொண்ட உக்ரைன் அதிபர் யகனோவிச் மறுத்த போது நடந்த கலக்கமான சூழ்நிலையில் அவரது அரசு கவிழ்ந்தது. அவர் பதவி துறக்கும் முன்னால் ரஷ்ய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் க்ரைமியா பகுதியில் அந்த புரட்சி பரவாமல் இருக்க அவர் ரஷ்யாவுக்கு வேண்டுகோள் விட்டார். அதன்படி ரஷ்யப் படைகள் க்ரைமியாவை கைவசப்படுத்தின.

அதே நேரத்தில், ரஷ்யாவின் பலத்த ஆதரவுடன் ரஷ்ய மொழி பேசும் மக்கள் அதிகமாக உக்ரைன் கிழக்கு எல்லையில் வசிக்கும் டான்பாஸ்  (Donbas) பகுதி உக்ரைனில் இருந்து பிரிந்து டோனெட்ஸ்க் (Donetsk) மற்றும் லுஹான்ட்ஸ்க் (Luhantsk) என்ற தனி நாடுகளாக தம்மை பிரகடனப் படுத்திக் கொண்டன. அவற்றுக்கு எதிராக டான்பாஸ் பகுதியில் உக்கரைன் ராணுவம் போர்தொடுத்து பெரும் சேதம் உண்டாக்கியது.  

 டான்பாஸ் போரை நிறுத்த ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும்  ஒத்துழைப்பு அமைப்பின் (OSCE) சார்பாக பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஒன்று சேர்ந்து ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுடன பேலாரூஸ் தலைநகரான மின்ஸ்க் நகரில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் முடிவில்  செப்டம்பர் 5, 2014ல் மின்ஸ்க் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் போர் தொடர்ந்ததால், அந்த ஒப்பந்தத்தை திருத்தி மின்ஸ்-2 ஒப்பந்தம் பிப்ரவரி 12, 2015ல் கையெழுத்தான பின்பு போர்நிறுத்தம்  செயலாக்கப்பட்டது. ஆனால்  அந்த ஒப்பந்தத்தின் செயல்பாட்டை சீறாக நடத்தாமல், உக்ரைன் டான்பாஸ் மக்களை தாக்குவதற்கு  பலமுறை ரஷ்யா கண்டனம் தெரிவித்தது.

உள்நாட்டு அரசியல் குழப்பங்களுக்கு இடையே, பதவி ஏற்ற இடைக்கால உக்ரைன் அரசு ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிய உறவுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதற்கு பிறகு நடந்த பொதுத்தேர்தலில் ரஷ்ய எதிர்ப்பு அரசியல் அணிகள் வெற்றி பெற்றபின் உக்ரைன் அரசியல் சூழ்நிலை முற்றிலுமாக ரஷ்யாவுக்கு எதிராக மாறியது. தற்போது உள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேட்டோ ராணுவ கட்டமைப்பில் உக்ரைன் அங்கம் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

மின்ஸ்க் ஒப்பந்தங்கள் மீறப்படுவதை கண்டுகொள்ளாத நேட்டோ அரசுகள் உக்ரைனுடன் நெருங்கிய உறவுகளை வளர்க்க எடுத்த முயற்சிகளை கண்ட புதின் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் அத்தகைய எந்த முயற்சியையும் முறியடிப்போம் என்று பல முறை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துக்கூறியுள்ளார். ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் மீது போர் தொடுக்க ஏன் முடிவெடுத்தார் என்பதை புரிந்து கொள்ள இந்த பின்னணி அவசியமாகும்.

இதுவரை அமெரிக்காவும் அதன் நேச நாடுகளான ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை கண்டித்து பெருமளவில் ரஷ்யா மீது பொருளாதரத் தடைகளை அறிவித்துள்ளனர். அதன்படி அந்த நாடுகளில் ரஷ்ய வங்கிகள் வைத்துள்ள பணத்தை உபயோகிக்க முடியாமல் போகும். ஆனால், இதுவரை அமெரிக்காவோ அல்லது அதன் நேச நாடுகளோ தமது படைகளை உக்ரைனுக்கு அனுப்பி உதவத் தயாராக இல்லை. இதற்கு முக்கிய காரணம்,  அமெரிக்காவுக்கு அடுத்த படியாக, ரஷ்யாதான் உலக அளவில் அணுஆயுதம் மற்றும் ஏவுகணை ஆகியவற்றில் வலிமை வாய்ந்த நாடு.  ஆகவே அவ்வாறு மற்ற நாடுகள் உக்ரைன் போரில் ஈடுபட்டால் அது உலகப் போராக மாறும் அபாயம் உள்ளது.

ஏற்கனவே, புதின் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த முயற்சியையும் முறியடிப்போம் என்று போரின் முதல் நாளே எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஆகவே தற்போதுள்ள உலகச்சூழ்நிலையில் உக்ரைன் போர் உலகப் போராக மாறும் வாய்ப்புக்கள் மிகவும் குறைவே.  

இந்நிலையில் ஏற்கனவே பெருகியுள்ள சீன-ரஷ்ய வர்த்தகம் இந்த பொருளாதரத் தடைகளால் அதிகரிக்கும்.  ஆனால், இந்த பொருளாதரத் தடைகளின் பக்க விளைவகளை பல நாடுகள் எதிர் கொள்ளலாம். ரஷ்ய எரிபொருள் எற்றுமதி தடைப்படுவதால் அவற்றின் விலை மேலும் ஏறும். இது உலக நாடுகளின் பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கும, உக்ரைன்தான் ஐரோப்பிய நாடுகளுக்கு மிக அதிக அளவில் கோதுமை மற்றும் சோளம் ஆகிய தானியங்களை ஏற்றுமதி செய்கிறது. ஆகவே போரினால் தானியத் தட்டுபாடு அதிகரிக்க, ஐரோப்பாவில் விலைவாசி மேலும் அதிகரிக்கும்.

ரஷ்யாவுடன் பங்காளி உறவு கொண்ட உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போருக்கு, ரஷ்யாவிலேயே பல நகரங்களில் மக்கள் தெரிவிக்கிறார்கள். உக்ரைனிலும் ரஷ்யாவுடன் பாரம்பரிய உறவை வரவேற்கும் மக்கள் பெரும் அளவில் உள்ளனர். போரைத் தொடர்ந்தால் அவர்களின் ஆதரவை புதின் இழப்பது நிச்சயம். ஆகவே, புதின் இப்போரை அரசியல் முயற்சியால் முடிவுக்கு கொண்டு வரலாம் என்று தோன்றுகிறது.  

(கர்னல். ஆர். ஹரிஹரன், தெற்காசிய ராணுவ நுண்ணறிவுத் துறை வல்லுனர்.)

 

No comments: