Thursday, 6 March 2025

வேலையைப் பிடுங்கிக் கொள்ளுமா ஏஐ?

 


கர்னல் ஆர் ஹரிஹரன் | அந்தி மழை | சிறப்புக் கட்டுரை மார்ச் 3, 2025  

https://www.andhimazhai.com/special-section/special-stories/will-ai-take-over-jobs

ஏ.ஐ. என்று சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தற்போது அதிகம் பேசு பொருளாகிவிட்டது. எளிதாக விளக்கம் கூறினால் ஏ.ஐ. என்பது இயந்திரங்கள் மனிதர்களைப் போல கற்றுக்கொள்ளவும், பகுத்தறிந்து செயல்படவும் அனுமதிக்கும் ஒரு தொழில்நுட்பமாகும். ஏ.ஐ. அமைப்புகளால் தரவைச் செயலாக்கவும், சிக்கல்களைத் தீர்க்கவும், அவற்றின் நடத்தையை மாற்றியமைக்கவும் முடியும்.

ஏ.ஐ உபயோகம். ஏற்கனவே அசுர வேகத்தில் அதிகரித்து வருவதால் அதனால் எத்தகைய தாக்கம் ஏற்படும் என்று அறிவதில் எல்லா நாடுகளும் நாட்டம் காட்டி வருகின்றன. அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவும் அமெரிக்காவும் பல்வேறு ஒப்பந்தங்களில் கையொப்பம் இட்டுள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று ட்ரஸ்ட் (TRUST) என்று கூறப்படும் “மூலோபாயத் தொழில் நுட்பத்தை பயன்டுத்தி உறவை மாற்றுதல்” ஒப்பந்தமாகும். இதன்படி இந்தியாவும் அமெரிக்காவும் இந்த ஆண்டு இறுதிக்குள் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்கட்டமைப்பை விரைவுபடுத்துவதற்கான வரைபடத்தைத் தயாரிக்க முடிவு செய்துள்ளன. அதன் செயலாக்கம் பாதுகாப்பு, எரி சக்தி, விண்வெளி ஆகிய துறைகளைத் தவிர உயர் தொழில் நுட்பத்துறையிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. ஆகவே அடுத்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு துறைகளின் செயல்முறைகளில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

இதனால் தற்போதைய வேலைகளில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் உலக அளவில் வேலை வாய்ப்பில் எத்தகைய மாற்றம் ஏற்படும் என்பதை அனுமானிக்க கடந்த ஜனவரி 7 ஆம் தேதி உலக பொருளாதார மன்றம் (World Economic Forum) வேலைகளின் எதிர்கால அறிக்கை: 2025 (Future of Jobs report 2025) என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை உலகில் உள்ள 22 தொழில்கள் சார்ந்த 1000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை ஆய்வு செய்த பிறகு தயார் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையில் 2030 ஆம் ஆண்டுக்குள் உலகில் வேகமாக வளர்ந்து வரும் மற்றும் குறைந்து வரும் வேலைத் துறைகளின் பட்டியல்கள் உள்ளன. இவை வரும் ஆண்டுகளில் உலக சந்தையின் பல்வேறு தொழில்களில் வேலைகளின் போக்குகள் மற்றும் அவற்றில் ஏற்படக்கூடிய தாக்கத்தையும் விவரிக்கின்றன. மக்கள்தொகை மாற்றங்கள், புவிசார் அரசியல் மோதல்கள் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன. வரும் ஆண்டுகளில் எந்தெந்த தொழில்கள் ஆதிக்கம் செலுத்தும் என்பது குறித்து சமூக ஊடகங்களில் ஏராளமான பதிவுகளை நீங்கள் பார்த்திருக்கலாம். செயற்கை நுண்ணறிவு வேலை வாய்ப்பில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. உ.பொ.மன்ற அறிக்கை என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்

முதலாவதாக, 2030 ஆம் ஆண்டுக்குள் சுமார் 170 மில்லியன் புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்று அறிக்கை கணித்துள்ளது. இருப்பினும், இதே கால அளவில், தோராயமாக 92 மில்லியன் பேர் வேலை இழக்க வாய்ப்புண்டு. கூட்டி கழித்துப் பார்த்தால், உலகில் 78 மில்லியன் நிகர புதிய வேலைகள் உருவாக வாய்ப்புகள் அதிகம்.

இவற்றில் ஐந்து வேலைகளில் ஆள்களுக்கான தேவைகள் சிறப்பான வளர்ச்சியைக் காணும். இதில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், இலகுரக டிரக் அல்லது விநியோக சேவை ஓட்டுநர்கள், மென்பொருள் மற்றும் பயன்பாட்டு உருவாக்குனர்கள், கட்டிட வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மேலும் கடை விற்பனையாளர்கள் ஆகியவை அடங்கும்.

பல நாடுகள் மிகவும் நிலையான எதிர்காலத்திற்காக எடுத்துவரும் பசுமை முயற்சிகளால் விவசாயத் துறையில் வேலை செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும். இவற்றைத் தொடர்ந்து உணவு பதப்படுத்துதல் மற்றும் அதில் தொடர்புடைய தொழிலாளர்கள்; கார், வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள்; நர்சிங் நிபுணர்கள்; உணவு மற்றும் பான சேவை ஊழியர்கள்; செயல்பாட்டு மேலாளர்கள்; சமூகப் பணி மற்றும் ஆலோசனை நிபுணர்கள்; திட்ட மேலாளர்கள், பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்வி ஆசிரியர்கள்; இடைநிலைக் கல்வி ஆசிரியர்கள்; மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு உதவியாளர்கள் இவர்களின் தேவை அதிகரிக்கும்.

பின்வரும் வேலைகள் அடுத்த பத்தாண்டுகளில் மிக வேகமாக வளரும் என்று அறிக்கை கூறுகிறது: செயற்கை நுண்ணறிவு மற்றும் பெருந்தரவுப் (Big data) புரட்சி இதன் பின்னணியில் இருக்கும். பெருந்தரவு நிபுணர்கள், நிதி தொழில்நுட்ப பொறியாளர்கள், இயந்திர கற்றல் நிபுணர்கள், மென்பொருள் மற்றும் பயன்பாட்டு உருவாக்குநர்கள் மற்றும் பாதுகாப்பு மேலாண்மை நிபுணர்கள் ஆகிய ஐந்து வேலைவாய்ப்புகள் வளரும். அதிக சம்பளம் பெறுகிறவர்களாக இவர்கள் மாறுவர்.

இதற்கு மாறாக, பல பாரம்பரிய ஆபீஸ் வேலைகள் வேகமாக குறைந்து வரும் வேலைகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. தபால் சேவை ஊழியர்கள், வங்கி காசாளர்கள் மற்றும் உதவியாளர்கள், தரவு உள்ளீட்டு செயல்முறை ஆக்குநர், நிர்வாக உதவியாளர்கள் மற்றும் நிர்வாக செயலாளர்கள் ஆகியோர் இதில் அடங்குவார்கள். இந்த வீழ்ச்சியடைந்து வரும் போக்கால் மிகவும் பாதிக்கப்படும் மற்றொரு வேலை கிராஃபிக் டிசைனர். ஏ.ஐ உபயோகம் ஒவ்வொரு நாளும் அதன் மாயாஜாலத்தை புதிய உயரத்திற்கு உயர்த்துவதால், இந்த படைப்பு நிபுணர்களின் வேலை கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்று அறிக்கை கூறுகிறது.

வேலையில் தேவைப்படும் திறன்களில் கிட்டத்தட்ட 40 சதவீத மாற்றம் ஏற்பட உள்ளது. ஏற்கனவே, 63 சதவீத முதலாளிகள் அதை தாங்கள் எதிர்கொள்ளும் முக்கியமான தடையாக குறிப்பிடுகின்றனர். ஏ.ஐ. நம் வாழ்க்கையை இருண்டதாக மாற்றிவிடும் என்று எண்ண வேண்டாம். ஏனெனில், எதிர்காலத்தில் தேவையான மற்றும் விரும்பத்தக்கதாகக் கருதப்படும் திறன்களின் பட்டியலில், முன்னணியில் இருப்பவை மனிதர்களுக்கே உரிய பின்வரும் திறன்களாகும். அதில் பகுப்பாய்வு சிந்தனை முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து மீள்தன்மை(resilience), நெகிழ்வுத்தன்மை(flexibility), சுறுசுறுப்பு(agility) ஆகியவை வரும் ஆண்டுகளில் தேவைப்படும் சில முக்கிய திறன்களாகும்.

மேலும் தலைமைத்துவம் மற்றும் சமூக செல்வாக்கு, படைப்பு சிந்தனை, ஊக்கம் மற்றும் சுய விழிப்புணர்வு கொண்டிருத்தல், தொழில்நுட்ப கல்வியறிவு, பச்சாதாபம் காட்டுதல், ஆர்வம், வாழ்நாள் முழுவதும் கற்றல், திறமை மேலாண்மை, சேவை நோக்குநிலை மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவை முக்கிய திறன்களாகும். எனவே, வரும் ஆண்டுகளில் உலகளாவிய வேலை சந்தைப் புரட்சியின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நம்மை நாமே மேம்படுத்திக் கொள்வது தான் ஒரே வழியாகும்.

பீதி தேவையில்லை. எல்லோரும் சொல்வது போல், ஏ.ஐ உங்கள் வேலையை எடுத்துக் கொள்ளாது, ஆனால், எவ்வாறு ஏ.ஐ-யை பயன்படுத்துவது என்று தெரிந்த ஒருவர் உங்கள் வேலையை எடுத்துக்கொள்ளலாம்!

(கர்னல் ஹரிஹரன், தெற்காசிய பாதுகாப்பு விவகார வல்லுநர்)

 



No comments: