Thursday, 4 August 2016

A Bird’s eye view of Modi’s foreign policy (Tamil)

சொன்னதும் செய்ததும் – வெற்றிக்கான வாய்ப்பு

கர்னல் ஆர் ஹரிஹரன்

மேற்கத்தியப் பார்வையில் நமது நாட்டின் வெளியுறவுக்  கொள்கையைப் பார்க்கும் பெரும்பாலான அறிவு ஜீவிகளுக்கு நரேந்திர மோடியின் அணுகுமுறை கசக்கிறது.. இதற்கு மோடியின் இந்துத்துவ மற்றும் ஆர்.. எஸ். எஸ் பின்னணி, ஒரு முக்கிய காரணமாகும். அவர்கள் பார்வையில் ஆங்கிலக் கல்வியோ, குடும்ப-அரசியல் பலமோ அல்லது டெல்லியில் மத்திய அரசின் நெளிவு சுளிவுகளில் அனுபவமோ இல்லாத மோடிக்கு இந்தியாவின் பிரதமராகும்  தகுதி கிடையாது.

ஆனால் நடுநிலையான, இந்துத்துவ பின்னணி இல்லாத, என்னைப் போன்றவன் கணிப்பில் பிரதமர் மோடியின் வெளியுறவு சாதனைகள் மிகவும் பாராட்டத் தக்கவை. கடந்த 24 மாதங்களில் அவர் வெளியுறவில் நிகழ்த்திய சாதனைகள் எல்லாம் முழுமையாக வெற்றி அடையவில்லை; ஆனால் அவற்றுக்குக்கூட வெற்றிக்கான வாய்ப்புக்கள் அதிகமாகி உள்ளன.  

இந்தியா சுதந்திரம் அடைந்திருந்ததிலிருந்து பின்பற்றி வந்த வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையிலேயே மோடி செயல் பட்டாலும், அவர் அதற்கு அளித்த உருவகமும், உந்ததுலும், செயலாக்க முனைப்புக்களும், உலகில் பல  நாடுகளைக் கவர்ந்திருக்கின்றன. அவற்றில் இந்தியாவில் இதுவரை அதிக அளவில் அக்கறை காட்டாத சில நாடுகளும் அடங்கும்.
அத்தகைய நாடுகள் மோடியின் இந்துத்துவ மற்றும் ஆர். எஸ். எஸ் பின்னணியைக் கண்டு கொள்ளாமல் இந்தியாவுடனான உறவை ஏன் வலுப்படுத்த முயல்கிறார்கள்? அதற்கு, மோடியின்சப்கே சாத், சப்கா விகாஸ்’ (எல்லோருடனும் சேர்ந்து எல்லோருக்கும் வளர்ச்சி) என்ற அடிப்படை வெளியுறவுக் கொள்கையே காரணம்.

இதற்கு இஸ்லாமிய நாடான சௌதி அரேபியா ஒரு முன்னுதாரணமாகும். பாகிஸ்தானுடன் நெருங்கிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவைக் கொண்ட சவுதி அரேபியாவுக்கு முதல் முறையாக பிரதமர் மோடி பயணம் மேற் கொண்ட போதே அந்த நாட்டின் அரசர் மோடிக்குகிங் அப்துல் அஜீஸ் சாஷ்என்ற நாட்டின் மிக உயர்ந்த பட்டயத்தை அளித்து கௌரவித்தார்.

அடிப்படையில், மோடி இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இரண்டு கோணங்களில்  இயங்குகிறது. முதலாவது தெற்காசியாவில் அண்டை நாடுகளுடனான உறவை வலிமைப் படுத்தி, தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் உள்ள உறவை வலிமைப் படுத்துவது. ஆனால் பாகிஸ்தானுடனான உறவில், மோடியின் உறவுக் கரமுயற்சிகள் இதுவரை பலிக்கவில்லை. அது போல நோபாளத்துடனான உறவில் தேக்க நிலை ஏற்பட்டிருக்கிறது.


இரண்டாவது கோணம் உலகின் வலிமை வாய்ந்த சீனா உள்ளடங்கிய பி-5 நாடுகளுடன் நல்லுறவை வலுப்படுத்தி, தொழில் வளர்ச்சி, மற்றும் பாதுகாப்பை அதிகப்படுத்துவது. முக்கியமாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் மோடியின் நட்பு தனிப்பட்ட முறையில் வளரவே, இரு நாடுகளுக்கிடையே பல ஆண்டுகளாகத் தேக்கத்தில் கிடந்த அணு சக்தி உபயோக மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உறவுகள் பெருமளவில் முன்னேற்றம் கண்டிருக்கின்றன.. சீனாவுடன் பல ஆண்டுகளான எல்லைப் பிரச்சினைகளில் மாற்றம் இல்லை என்றாலும், பொருளாதார உறவுகள் மேலும் பலமடைய வாயப்புகள் அதிகரித்திருக்கின்றன.   

பதிவு; அந்திமழை மாத இதழ், ஆகஸ்டு 2016 www.andhimazhai.com

1 comment:

Vithiyapathy Purushothaman said...

அருமையான நடுநிலை பதிவு.