Thursday, 26 July 2018

கேள்வி-பதில்; இந்திய-சீனா இழுபறியில் தவிக்கும் இலங்கை & இந்தியாவும் கோத்தபாயவும்

கர்னல் ஹரிஹரன்

கேள்வி; தற்போது அம்பாந்தோட்டை மாவட்டத்தில் துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தீவொன்றின் உரிமையை சீனா கொண்டுள்ளது தொடர்பில் சர்ச்சைகள் நிகழ்கின்றது. அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நீர்மூழ்கி கப்பல்களை கண்காணிப்பதற்கு விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக கூறியுள்ளார். அதேநேரம் மத்தள விமான நிலையத்தினை இந்தியாவுக்கு வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தினை அடைந்துள்ளன. மேலும் இந்த மாவட்டத்தில் ஹைவே ஒன்றை அமைப்பதற்காக யப்பானுடன் ஒப்பந்தம் செய்யப்படுகின்றது. இதனால் மூன்று நாடுகளுக்கிடையில் இராஜதந்திர போட்டி ஏற்படும் என விமர்ச்சிக்கப்படுகின்றது. இது சம்பந்தமாக தங்களின் பார்வையை பகிர்ந்து கொள்ள முடியுமா? 

பதில்; தங்கள் கேள்வியில் மூன்று நிகழ்வுகளின் தாக்கங்கள் தென்படுகின்றன. ஆகவே அவற்றை முதலில் தனித்தனியாக நோக்கிய பிறகுதான் அவற்றின் ஒன்று சேர்ந்த தாக்கத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.

முதலாவது சீனாவுக்கு அம்பந்தோட்டை மாவட்டத்தில் துறைமுகத்தின் தீவொன்றில் சீனாவுக்கு வழங்கப்பட்ட உரிமை. இது ஏற்கனவே சீனாவுக்கு துறைமுகத்திலும் அதைச்சார்ந்த பகுதிகளிலும் அளிக்கப் பட்டுள்ள 99 ஆண்டு ஆளுமை உரிமையின் விளைவே ஆகும். போகப்போக அங்கே இலங்கை அரசின் ஆளுமை பெயரளவில் இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக சீனாவின் ஆதிக்கம் ஓங்கும் என்பதின் சந்தேகம் இல்லை. பிரதமர் விக்ரமசிங்க சீன நீர்மூழ்கிக் கப்பல்களைப் பற்றி குறிப்பிட்டிருப்பது இந்தியப் பெருங்கடலில் சீன ஊடுருவலுக்கு அம்பந்தோட்டை துறைமுகம் எவ்வாறு உதவக்கூடும் என்ற அமெரிக்காவின் கவலைக்கான பதிலாகும். ஆனால் இலங்கை கடற்படை கடலோரத்தை ஒட்டிய பாதுகாப்புக்கே தகுதி வாய்ந்ததாகும். ஆகவே அது எந்த அளவில் நீர்மூழ்கிகளின் கண்காணிப்பை செயாலாக்க முடியும் என்பது கேள்விக் குறியே.

மத்தள விமான நிலையத்தை இந்திய நிர்வாகத்திற்கு ஒப்படைப்பது அதை லாபகரமாக நடத்துவதற்கான வியாபர விரிவாக்கம் என்று கூறலாம். இருந்தாலும் இது இலங்கை அரசு தனது இந்திய உறவில் சீனாவுடன் வளர்ந்து வரும் நெருங்கிய உறவின் தாக்கத்தை ஓரளவு சமநிலைப் படுத்த உதவும் முயற்சி என்று கருதுகிறேன். இந்தியா அம்பந்தோட்டவின் அண்மையில் மத்தளவில் பிரவேசிப்பது அதற்கு கால்பதிக்க உதவும் என்று சீனா கருதும். ஆனால் அது இந்தியா எவ்வாறு மத்தள விமான நிலையை உபயோகிக்கும் என்பதைப் பொருத்தது. அதுபோல ஐப்பானுடனான ஹைவே கட்டுமான ஒப்பந்தமும் பிரதமர் ரனில் இலங்கை முழுமையாக சீனாவின் பொருளாதாரப் பிடிப்பில் இல்ல என்று உலகுக்குக் எடுத்துக் காட்டும் ஒரு முயற்சி என்றே தோன்றுகிறது.

ஆக இந்த நிகழ்வுகளை ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் இலங்கையில் வலுத்துவரும் சீனப் பிரவேசத்தின் விளைவாக  இலங்கையின் நட்பு நாடுகளான இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஏனைய மேற்கு நாடுகளிடையே இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பைப் பற்றிய கரிசனத்தின் அதிகரிப்பைக் காட்டுகின்றது. அவற்றை அந்நாடுகளின் ராஜதந்திர வெளியீடு என்று கருதலாம் ஆகவே இலங்கையில் சீனாவின் ஆளுமை தொடர்ந்து வளர்ந்து வரும் சூழ்நிலையில், இலங்கை அரசு தனது சீன உறவை மற்ற நேச நாடுகளுடன் சமநிலைப்படுத்தக் கடினமாக செயல்படும் என எதிர்பார்க்கலாம்.

கேள்வி; அத்துடன் கோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவது தொடர்பாக மீண்டும் இராணுவ அல்லது சர்வாதிகார ஆட்சி ஏற்படும் என்றும் விமர்ச்சிக்கப்படுகின்றமை தொடர்பாக தங்களின் நிலைப்பாடு என்ன? இந்தியா இதில் எத்தகைய நிலைப்பாட்டினை எடுக்கும் எனக் கருதுகின்றீர்கள்?

இந்தக் கேள்வியை நான் நடுநிலையுடன் பதலளிக்க முனைகிறேன். ஏனெனில், இலங்கையை ஜனநாயகப் பாதையிலிருந்து மாற்றி எளிதாக ராணுவ ஆட்சி கைப்பற்ற முடியும் என்ற கூற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை. கோத்தபாய கடந்த காலத்தில் அவ்வாறு செய்யவில்லை. ஆகவே நீங்கள் ‘மீண்டும்’ ராணுவ ஆட்சி என்று கேள்வியில்  குறிப்பிட்டிருப்பது உண்மைக்கு புறம்பானதாகும்.

அதே நேரத்தில் விடுதலைப் புலிகளை எதிர்த்து நடந்த நாலாவது ஈழப்போரின் போது, எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்ட காலத்தில் ராணுவத்தின் கை ஓங்கியிருந்ததும், பயங்கர வாதச்சட்டத்தை ஆட்சியினர் துஷ்பிரயோகம் செய்து மனித உரிமையை மதிக்காமல் செயல்பட்டதும் உண்மையே. அந்த காலத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களின் விளைவே ராஜபக்ச மீண்டும் பதவியில் வரதாபடி பெரும்பான்மை மக்கள் தேர்தலில் அவருக்கு எதிராக வாக்குரிமையை பிரயோகித்தார்கள். மைத்ரிபால அரசு பதவிக்கு வந்து மூன்றாண்டுகளுக்கு மேல் ஆனாலும் குற்றம் செய்தவர்களை தண்டிக்காமல் செயல்படுவது அதன் செயல்பாட்டின் குறையே ஆகும்.

அவ்வாறு அரசு தொடர்ந்து மெத்தனம் காட்டுவது ஏன்? போர்க்குற்றங்களுக்காக ராணுவத் தலைவர்கள் மீது வழக்குப் போட்டால் அதன் எதிர்மறை விளைவுகள் ராணுவத்தினுள்ளேயும், பொது மக்களிடையேயும் தோன்றக்கூடும் என்ற அச்சம் ஒரு காரணமாக இருக்கலாம். மைத்ரி-ரனில் அரசுக்கு அதன் அரசியல் ரீதியான் பக்க விளைவுகளைப் பற்றிய அச்சமும் இருக்கலாம்.

கோத்தபாய ராஜபக்ச அல்லது எந்த மாற்றுத் தலைவரோ அடுத்த பொதுத்தேர்தலில் ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசமைத்தால் அதை இந்தியா கட்டாயம் வரவேற்கும். மீண்டும் ராஜபக்ச குடும்பத்தினர் பதவிக்கு வந்தால், அவர்கள் செயல்பாடும் இந்தியா-இலங்கை உறவின் அரசியல் முக்கியத்துவத்தை மனதில் கொண்டே செயல்படுவார்கள் என்று நினைக்கிறேன். அவ்வாறுதான் கடந்தகாலத்தில் ராஜபக்சே ஓரளவு செயல்பட முயற்சிப்பதாக சொல்லிக் கொண்டார்.

ராஜபக்ச தலைமை தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றால் சர்வாதிகார அரசை அமைக்க கட்டாயம் இருப்பதாகத் தோன்றவில்லை. கடந்த காலத்தில் நடந்த விடுதலைப் புலிகளுடனான போர், ராஜபக்ச ராணுவத்தைப் பெருமளவில் உபயோகிக்க முக்கிய காரணியாக இருந்தது. தற்போது அத்தகைய சூழ்நிலை இல்லை. அது உருவாக வாய்ப்பு இருப்பதாகத் தோன்றவில்லை. மேலும் சர்வாதிகார ஆட்சி அமைத்தால், அதை மக்கள் மவுனம் காத்து அனுமதிப்பார்களா? கட்டாயம் எதிர்ப்பார்கள்.

இலங்கையில் சர்வாதிகார ஆட்சி அமைக்கப்பட்டால் இந்தியா கட்டாயம் அதை வரவேற்காது. மாலத்தீவில் நடந்து வரும் எதேச்சாதிகார விடயத்தில் இந்தியா எடுத்துள்ள எதிர் நிலையே இதற்கு ஒரு உதாரணமாகும். இந்தியா மாலத்தீவில் எடுத்த இந்த நிலைப்பாடு இலங்கையில் சர்வாதிகார அரசு அமைக்க ஒரு பெரும் தடையாய் இருக்கக் கூடும்.


No comments: