கர்னல் ஆர் ஹரிஹரன்
ஜெனரல் பிபின் ராவத் CDS ஆக நியமிக்கப் பட்டதை பற்றி ஒரு தமிழ்
பத்திரிகையாளரின் கேள்விகளுக்கு நான் அளித்த விடைகளை கீழே அளித்துள்ளேன் :
1.
முப்படைகளுக்கும்
ஒரே தளபதி' என்பதற்கான தேவை என்ன, இவருடைய பணி என்னவாக இருக்கும்?
போர் கலை 20-21ம் நூற்றாண்டுகளில் மகத்தான வளர்ச்சி அடைந்துள்ளது.
சேடலைட் மற்றும் கம்பியூடர் ஆகியவற்றின் தொடர்ந்து அதிகமாகும் உபயோகம் உலக அளவில் செய்திகளின்
பரிமாற்றத்தில் புரட்சி ஏற்படுத்தியுள்ளது. ஆகவே தற்காலப் போரில் எதிரிகளை எதிர் கொள்ள
முப்படைகளும் ஒருங்கிணைந்த சேவை செய்வதற்கான கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அந்த ஒருங்கிணைப்பாளராக
CDS செயல்படுவார். ஆகவே அவரை ராணுவ அல்லது விமான மற்றும் கடற்படைத் தலைமைத் தளபதிகளின்
தளபதி என்று கூறுவது தவறு.
இந்திய எல்லையில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சூழ்நிலையில் பெரும்
மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம் இரண்டு அணு ஆயுத அரசுகள் -
பாகிஸ்தான் மற்றும் சீனா - இணைந்து செயல்படுவதற்கான பாதுகாப்பு ஒப்பந்தங்கள்
ஆகும்.
இதுபோலவ இந்திய பெருங்கடலில் சீன கடற் படையினரின் பிரவேசம்
வலுத்து வருகிறது. இது இந்தியா மட்டும் அல்லாமல் மற்ற உலக வல்லரசான அமெரிக்கா
மற்றும் அதன் நேச நாடுகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே தனியாக செயல்பட்ட இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும்
முன்னெப்போதும் இல்லாத நெருக்கமான பாதுகாப்பு உறவுகள் சென்று பத்தாண்டுகளில்
உருவாகியுள்ளது. ஆகவே இந்திய முப்படைகள் பல நாடுகளுடன் ஒருங்கிணைந்த பயிற்சி
செய்து வருகின்றன. ஆகவே CDS இத்தகைய திட்டமிட்ட செயலாக்கங்களை உருவாக்குவதில்
பாதுகாப்பு அமைச்சருக்கும் பிரதமருக்கும் ஆலோசகராக செயல்படுவார்.
2. தற்போது
ஜனாதிபதி தான் முப்படைகளின் தளபதியாக உள்ளார். இந்தப் புதிய பதவி ஜனாதிபதியின்
அந்தஸ்தை குறைக்கிறதா?
நான் ஏற்கனவே CDS முப்படைகளின் தளபதி அல்ல என்பதற்காகன
காரணங்களை முதல் கேள்வியின் விடையில் அளித்துள்ளேன். ஆகவே CDS பதவி ஒரு
விதத்திலும் ஜனாதிபதியின் அந்தஸ்தை குறைக்காது. அதற்கு மாற்றாக ஜனாதிபதிக்கு
தேவையான போது CDS-க்கு போர்நிலையைப் பற்றிய விளக்கம் கூறும் கடமையும் இருக்கும்
என்பது என கணிப்பு.
3. புதிதாக
நியமிக்கப்பட்டுள்ள பிபின் ராவத், இராணுவத் தளபதியாக இருந்தபோது பல சர்ச்சைக்குரிய
அரசியல் கருத்துகள் தெரிவித்ததாகவும், ஆளும் தரப்புக்கும் நெருக்கமானவர் என்கிற குற்றச்சாட்டு
உள்ளது? இவரது நியமனத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
அவர் 38 ஆண்டுகள் ராணுவத்தில் பல்வேறு அழுத்தம் மிக்க
சூழ்நிலையில் அடிமட்டத்தில் ஆரம்பித்து உயர் பதவிகளில் பணியாற்றியவர். அவ்வாறு
பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான ஆபீசர்களில் இருந்து ராணுவத் தலைமைப் பதவியில்
பணியாற்றியவர். ஆகவே நான் அவரை மெத்தனமாக ஊடக முறையில் அவர் தனிப்பட்ட
கருத்துக்களை விமர்சிக்க விரும்பவில்லை.
4. பாதுகாப்பு
படைகளின் அதிகாரம் ஓரிடத்தில் குவிவதாக இதன்மீது ஒரு பார்வை வைக்கப்படுகிறது.
இதன்மூலம் மக்களாட்சிக்கு அச்சுறுத்தல், இராணுவ ஆட்சி வந்துவிடும் என்கிற குற்றச்சாட்டுகளுக்கு
உங்களுடைய பதில் என்னவாக இருக்கும்?
இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்ற சென்ற 70 ஆண்டுகளில் ராணுவப்
படைகள் செய்த மகத்தான தியாகங்களை மறந்து அரசியல் ஒன்றே பிழைப்பு என்று
செயல்படுவோர்களின் பிதற்றல் என்றே இந்தக் கருத்தைக் கூறுவேன். இந்திய ராணுவம்
இன்றும் தனது முழுத்திறனுடன் செயல்படவிடாமல் இருப்பதற்கு இத்தகைய மனநிலையில்
பதவியில் இருப்பவர்களே காரணம்.
No comments:
Post a Comment