Thursday, 20 August 2020

இன்றைய பார்வையில் இந்திய-இலங்கை உடன்பாடு

கர்னல் ஆர் ஹரிஹரன்

[கனடியத் தமிழர் மாமன்றம் 2020 ஆகஸ்டு 2ம்- தேதியன்று இணைதளம் வழியே நடத்திய “ஈழத்தமிழர் இனப் பிரச்சனையில் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் அன்றைய இன்றைய வகிபாகம்” என்ற கலந்துரையாடலில், நான் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் இந்தக் கட்டுரையில் அடங்கும்.]

 

தெற்காசியாவில் காலனி ஆதிக்கம் முடிந்த பிறகு வளர்ந்து வரும் இந்திய-இலங்கை நாடுகளின் உறவில், 1987 ஜூலை 29ந் தேதி கையெழுத்தான இந்திய-இலங்கை உடன்பாடு (ஆங்கிலச் சொல்லான Accord தமிழாக்கம் ஒப்பந்தம் அல்ல என்பது என் கருத்து), மிகப் பெரிய திருப்பு முனை என்று கூறலாம். அதற்கு எடுத்துக்காட்டு இந்த கலந்துரையாடலே. ஆகும். ஏனெனில், அந்த உடன்பாடு கையொப்பமிட்ட  33 ஆண்டுகளுக்கு பிறகு, அது  ஈழத் தமிழர் இனப் பிரச்சனையில் ஏற்படுத்திய தாக்கத்தை, இன்று நாம் கலந்துரையாட இருக்கிறோம்.  இதில் பேச நான் ஏன் அழைக்கப் பட்டேன் என்பது எனக்கு புரியாத கேள்வியாய் இருக்கிறது. ஏற்கனவே கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை-இந்திய உறவை பல கோணங்களில் விமரிசித்து வருகிறேன். அவற்றை 750விட அதிகமான பதிவுகள் கொண்ட எனது வலைதளத்தில் காணலாம்.  அவை பெரும்பாலும் ஆங்கிலத்தில் உள்ளன. ஏனெனில், என் தமிழ் கட்டுரைகளை பிரசுரிக்க தமிழ் ஊடகங்கள் காட்டிய தயக்கமே காரணம்.

 

இந்திய இலங்கை உடன்பாடு கையொப்பமானபோது, உலக சூழ்நிலை சோவியத்-அமெரிக்க பனிப்போரின் முடிவை நெருங்கி இருந்தது. ஆகவே, பன்னாட்டு அரசியல், வெளியுறவு, மற்றும் பாதுகாப்பு சூழ்நிலையின் அழுத்தத்தையும், இலங்கை தமிழ் மக்களுக்கும், ஈழ போராளிகளுக்கும் இந்தியா அளித்த உதவியின் தாக்கத்தையும்  அந்த உடன்பாட்டில் காணலாம்.

 

அந்த உடன்பாடு நீர்த்துப் போனதாக பலர் நினைக்கின்றனர். அதில் ஓரளவு உண்மை உள்ளது. ஏனெனில் கடந்த 33 ஆண்டுகளில், பசிபிக்-இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளர்ந்து வரும் சீனாவின் வலிமை,  பாதுகாப்பு சூழ்நிலையில் பெரும் மாற்றங்களைத் தோற்றுவித்துள்ளது. இந்த பின்னணியில் நாம் அந்த உடன்பாட்டை இன்று  விமரிசிக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேணும்.

 

மேலும் உடன்பாட்டுக்குப் பின்னர், சென்ற 33 ஆண்டுகளில் நமக்கு  ஏற்பட்ட அனுபவங்களின் பின்னணியில் நாம் அந்த உடன்பாட்டை மதிப்பீடு செய்கிறோம். அந்த உடன்பாடு வெற்றி அடைந்ததா அல்லது தோல்வி அடைந்ததா என்று பல மேடைகளில் என்னிடம் கேள்விகள் எழுப்ப பட்டுள்ளன.  வெளியுறவு உடன்பாடுகள் ஒரு கிரிகெட் விளையாட்டல்ல; அவற்றின்  வெற்றியும் தோல்வியும் அந்நாட்டு மக்கள் அந்த உடன்பாட்டை தங்களது குறிக்கோள்களை அடைய எவ்வாறு உபயோகித்தார்கள் என்பதைப் பொருத்ததாகும். 

 

நல்லதும் கெட்டதும்

 

இந்திய-இலங்கை உடன்பாடு கையொப்பமானதின் பின்னணி யாவருக்கும் தெரிந்ததே. இலங்கை தமிழர் தமது அடிப்படை கலாசார, மொழி, நெடுங்காலமாக வசித்துவந்த பிரதேசங்கள் மற்றும் குடியுரிமை ஆகியவற்றை இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை அரசு நெறிப்படுத்த ஒப்புக் கொண்டதற்கு அந்த உடன்பாடே காரணமாகும். அவற்றில் சிலவற்றை இலங்கை அரசு, 13வது அரசியல் சாசனத் திருத்தப்படி நிறுவப்பட்ட மாகாண சபைகள் மூலம் நிறைவேற்றியது; ஆனால் அவை இன்னமும் முழுமையாக நிறைவேற்றப் படவில்லை. இதற்கு உடன்பாட்டின் குறைபாடுகளை விட, அதை வழி நடத்திய அரசியல் ஆளுமையே காரணமாகும்.  ஆகவே இன்றுவரை 13வது அரசியல் சாசனத்திருத்தம் ஒன்றே, ஈழத் தமிழருக்கு ஓரளவு சுய ஆட்சி உரிமையை அளித்துள்ளது.

 

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான இந்தியாவின் நிலைப்பாடு, 1990ல் இருந்து செயல் அளவில் மாறுதல் அடைந்துள்ளது. அதற்கு இலங்கையில் இந்திய ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஏற்பட்ட மோதலின் பின்பு இருநாட்டு உறவில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும், இந்திய இலங்கை உடன்பாட்டை நிறைவேற்றிய ராஜீவ் காந்தியை தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டு கொலை செய்ததும் முக்கிய  காரணங்களாகும். அதன் விளைவாக ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், இருநாடுகளின் இடையே இருந்த அணுகு முறைகளில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தியது.

 

உடன்பாட்டிலும் அதன் செயலாக்கத்திலும் பல குறைகள் எல்லோர் தரப்பிலும் இருந்தன. அந்த உடன்பாடு முழுமையாக நிறைவேறாமல் போனதற்கு, இந்திய மற்றும் இலங்கை அரசியல் கட்சிகள் எடுத்த முடிவுகள், விடுதலைப் புலிகள் கை தவறவிட்ட சமரச முயற்சிகள் அகியவை அடங்கும். அவற்றைப் பற்றி நானும் மேலும் பலரும் விமரிசித்துள்ளோம்.  ஆகவே, உடன்பாட்டின் குறை பாடுகளை இன்னமும் விவாதித்துக் கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை.

 

இன்று நாம் தொடரும் கலந்துரையாடல் பொருள் பொதிந்ததாக, மக்களின் அடிப்படை அபிலாஷைகளை அடைய வழி காணுமானால், இது கலந்தாய்வாக மாறவேண்டும். அத்தகைய ஆய்வுக்கு  நடுநிலையான புரிதல் வேண்டும். ஆனால் இந்தியாவிலும் இலங்கையிலும் இந்த உடன்பாட்டை, பலரும் இந்தியா என்ன செய்ய தவறியது என்ற பிரசாரத்துக்கு ஒரு பகடைக் காயாகவே உபயோகிக்கிறார்கள். அந்த உடன்பாட்டின் அடிப்படையே இந்தியா ஒருங்கிணைந்த இலங்கையை உறுதிப்படுத்தி, பிரிவினைக்கு எதிராக எடுத்த நிலைப்பாடாகும். இன்று  பேசவரும் அறிஞர்கள் சிலர் தனி ஈழ கோரிக்கையை கைவிடாமல், இந்த உடன்படிக்கையை விமரிசப்பதிலோ அல்லது இந்தியாவுக்கு அறிவுரை கூறுவதிலோ என்ன பயன் என்பது எனக்கு விளங்கவில்லை.  

 

 இலங்கையில் வாழ்வாதாரமின்றி தவிக்கும் ஈழத்தமிழர்களுக்கு இரு நாடுகளிலும் உள்ள நல்ல உள்ளங்கள் உதவியோடு ஆக்கப் பூர்வமான் திட்டம் வகுக்க வேண்டும் என்று நான் பலமுறை  தமிழ் தொலைக் காட்சியில் அரசியல் தலைவர்களுடன் பங்கு பெற்ற கலந்துரையாடல்களில் கூறிவந்துள்ளேன். ஆனால் தமிழ் தலைவர்களோ, அரசியல் காரணங்களால் அத்தகைய கூட்டு முயற்சிக்கு இன்று வரை ஈடுபடவில்லை. இதற்கு இருநாட்டு அரசுகளை குறை சொல்லி பயனில்லை. ஈழப் போரில் இரண்டு தலைமுறைகளை இழந்து நிற்கும் போது, நான் தமிழன் என்று மார்தட்டி வீரம் பேசினால் போதாது. விவேகத்துடன் செயல்பட்டு, நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதே ஈழத்தமிழரின் வருங்காலத்தை நிர்ணயிக்கும்.  

 

 ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தேரவாத பௌத்த கலாச்சார அடிப்படையில் ஆட்சி புரிவோம் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார். அவர் கூட்டணி வரும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு அங்கத்தினர் வெற்றி பெற பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அப்போதுதான் கோத்தபயாவின் ஒரு புதிய அரசியல் சாசனத்தை வரையவேண்டும் என்ற குறிக்கோளை நிறைவேற்ற முடியும். அந்த புதிய சாசானத்தில் 19வது அரசியல் சாசனத் திருத்தத்தை விலக்கி, ஜனாதிபதியின் செயலாக்க உரிமைகள் முழுமையாக்கப் படும். மாகாண சபைகளை உருவாக்கிய 13வது சாசனத் திருத்தத்தை விலக்க அல்லது அதில் காணும் மாகாண சபையின் அதிகாரப் பகிர்வுகளை குறைப்பதில் அதிபர் ஈடுபடுவார் என்பது என் கணிப்பு.  ஆகவே தமிழ் அரசியலின் தற்போதைய மிகப்பெரிய சவால், கோத்தபயாவின் சிங்கள பெரும்பான்மை அரசுடன் தமிழர்  இனப்பிரச்சினையைத் தீர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதாகும்.

 

தற்போதைய தெற்காசிய பாதுகாப்பு சூழ்நிலையில், இலங்கையுடன் நல்லுறவை வளர்ப்பதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெரும் ஈடுபாடு காட்டிவருகிறார். அவருக்கு அதிபர் கோத்தபயா மற்றும் பிரதமர் மகந்த ஆகியவருடன் சுமுகமான உறவு நிலவுகிறது.  வடமாகாணம் சென்ற முதல் இந்திய பிரதமாரான மோடி, தமிழர்கள் பிரச்சினைகளை 13வது சாசனத் திருத்தத்தின் அனுசரணையுடன்  தீர்க்கத் தயார் என்பதில் தெளிவாய் இருக்கிறார்.  அதே சமயத்தில் இந்தியா தமிழ் தேசிய முன்னணி வட மாகாணத்தில் ஆட்சி புரிய கிடைத்த வாய்ப்பை மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாமல் தவறியது இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கும் என்பது என் கணிப்பு.

 

ஆகவே, ஈழத்தமிழர் பிரச்சினையை இன்று மாறி வரும் இலங்கை அரசியல் சூழ்நிலையின் ஒரு அங்கமாக நாம் கருதவேண்டும். அதற்கு இந்தியா எவ்வாறு உதவலாம் என்ற கேள்விக்கு இலங்கையில் வாழும் தமிழ் அரசியல் தலைவர்கள் பங்கேற்காமல் நாம் எப்படி முடிவெடுக்க முடியும் என்பது எனக்கு விளங்கவில்லை.

 

சுருங்கச் சொன்னால் இந்திய இலங்கை உடன்பாட்டின் விளைவாக தமிழர்களுக்கு ஓரளவு சுயஉரிமை அளிக்கும் 13வது சாசனத்திருத்தமே பரிபோகும் சூழ்நிலை உருவாகி வருகிறது. ஆகவே பழையன கழித்து, புதியன புகுத்தல் என்ற முதுமொழிக்கு ஏற்ப, கடந்த காலத்து விகாரங்களை விமரிசித்து அங்கலாய்க்கும் வழிமுறையை விட்டு விட்டு, ஆக்கப்பூர்வாமாக செயல்பட அரசியல் வாதிகளுக்கு நாம் வழிமுறை காண வேண்டும்.  அதன் முதல் கட்டாமாக 13வது சாசனத் திருத்தத்தை பாதுகாக்க இந்தியா எவ்வாறு உதவலாம் என்பதை யோசிக்க வேண்டும். 

 


No comments: