கர்னல் ஆர் ஹரிஹரன்
சிந்தனைக் களம் | தினமலர்| ஆகஸ்டு
30, 2020
https://www.dinamalar.com/news_detail.asp?id=2604418
இம்மாதம் முதல் தேதி, சீன அரசால்
இயக்கப்படும் ‘ஷின்ஜியாங் புரொடக்ஷன் கன்ஸ்ட்ரக்ஷன் கோர் (எக்ஸ்.பி.சீ.சீ.)’, என்ற,
துணை ராணுவம் மற்றும் வியாபார அமைப்பையும், அதன் இரண்டு உயர் அதிகாரிகளையும், அமெரிக்கா
தடை செய்துள்ளது. அந்த அமைப்பின் கீழ் வேலை செய்யும் உய்கூர் மக்களின், அடிப்படை
உரிமைகளை பறிக்கும் வகையில்
அவர்கள் செயல்பட்டதற்காக, கடந்த மே
மாதம், அமெரிக்கா நிறைவேற்றிய உய்கூர் மனித உரிமைக் கொள்கைச் சட்டத்தின் கீழ், இந்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அப்போது, அமெரிக்க வெளியுறவு செயலாளரான மைக்
பொம்பியோ, “சீன கம்யூனிஸ்டு கட்சி ஷின்ஜியாங் பகுதியில், குறிப்பாக உய்கூர் மக்கள்
மீதும், இதர இஸ்லாமிய சிறுபான்மையினர்
மீதும், நடத்தி வரும் மனித உரிமை மீறல்கள், இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய
கரும்புள்ளியாகும்” என்று குறிப்பிட்டார். மேலும் அவர், சீனா தொடர்ந்து, உய்கூர்
இனத்தவருக்கு எதிராக நடத்திவரும் செயல்களை
பட்டியிலிட்டுக் காட்டினார். அவற்றில் அடக்குமுறை, பொது மக்களை காரணமில்லாமல் சிறையில் அடைத்தல்,
தொடர்ந்த கண்காணிப்பு, கொத்தடிமையாக்கி வேலை வாங்குதல், கட்டாய குடும்பக் கட்டுபாடு, ஆகிய, அத்து
மீறல்கள் அடங்கும்.
இதற்காக அமெரிக்காவை கண்டித்த சீன
அரசு, ‘இது சீனாவின் உள்நாட்டு விவகாரத்தில், அமெரிக்கா தொடர்ந்து தலையிடும் வேலை
என்று சொல்லி, அதற்கு தக்க பதில் நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்று எச்சரித்துள்ளது.
இது விரைவாக சரிந்துவரும், அமெரிக்க-சீன
உறவில் பெரிய திருப்பு முனை என்று கருதலாம்.
ஏற்கனவே, இந்த இரு பெரும்
நாடுகளின் இடையே தொடரும் பனிப்போரால் பாதிக்கப்பட்ட உலகநாடுகளின் பார்வை,
ஷின்ஜியாங்கில், உய்கூர் மக்களின் பக்கம் இப்போது திரும்பியுள்ளது. அதானல், அவர்களுக்கு
பல நாடுகளில் ஆதரவு பெருகி வருகிறது. ஆனால், உலக முஸ்லிம்கள், உய்கூர் முஸ்லிம்களை
கண்டு கொள்ளவில்லை.
உய்கூர் மக்கள் யார்?
சீனாவின் வடமேற்கு கோடியில் உள்ள ஷின்ஜியாங்கில்
உய்கூர் தன்னாட்சி பிரதேசம், அந்நாட்டின் மிகப் பெரிய பகுதியாகும். அங்கே வாழும்,
40 இனங்களைச் சார்ந்த 2.18 கோடி மக்களில், 1.13 கோடிக்கும் மேற்பட்டோர், உய்கூர்
இன இஸ்லாமிய மக்களாகும். உய்கூர் மக்கள் துருக்கிக் வம்சாவளியில் வந்தவர்கள்;
இவர்கள் பேசுவதும், அதே வம்சாவளி சார்ந்த உய்கூர் மொழியாகும். இவர்கள், இந்தப்
பகுதியில் நான்காம் நூற்றாண்டிலிருந்து வசித்து வருகின்றனர்.
இடையில், அவ்வப்போது, அவர்கள் சீன
ஆதிக்கத்தின் கீழ் வந்தாலும், உய்கூர் மக்கள், மீண்டும் அதிகாரத்தை மீட்டு, தங்கள்
ஆட்சியை நடத்தியதாக, சரித்திரம் கூறுகிறது. இந்தப் பகுதி, “கிழக்கு துருக்கிஸ்தான்
குடியரசு” என்ற பெயரில் சுதந்திர நாடாக, இரு முறை உருவாயிற்று. முதன் முறையாக 1933, இரண்டாம் முறையாக 1944
முதல் 1949 வரையிலும், சுதந்திர நாடாக செயல்பட்டது. எனினும், 1949ல், சீன கம்யூனிஸ்டு அரசு பதவிக்கு
வந்த பின்பு, அப்பகுதி, சீனாவின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
சீன கம்யூனிஸ்டு ஆதிக்கம்
மா சேதுங் ஆட்சி காலத்தில், 1955ல்,
முன்னாள் சீன ராணுவ வீரர்களை அந்தப் பிரதேசத்தில் குடியேற்றி, தற்போது தடை
செய்யப்பட்டுள்ள, எக்ஸ்.பி.சீ.சீ உற்பத்தி நிறுவனம் உருவாக்கப்பட்டது. அதைத்
தொடர்ந்து, சீன அரசு, நாட்டின் பெரும்பான்மை மக்களான ஹான் சீனர்களை, அங்கே
குடியேற்றி வருகிறது. அதன் விளைவாக, அங்கே உய்கூர் இன பெரும் பான்மையினரின்
ஆளுமையை குறைந்து கொண்டே வருகிறது. அரசு மறைமுகமாக, உய்கூர் மக்கள் குழந்தைப் பேரை
குறைக்க எடுத்துள்ள முயற்சிகளால், சென்ற ஆண்டு, அந்த மக்களிடையே பிறப்பு விகிதம்,
தேசிய அளவை விட, 80 சதவிகிதம் குறைந்துள்ளது.
உய்கூர் மக்களின் சீன எதிர்ப்பு
சீனர்கள் ஆதிக்கம் அதிகரிப்பதை
எதிர்த்து, பல உய்கூர் விடுதலை இயக்கங்கள் தோன்றியுள்ளன. அவற்றில் முக்கியமானவை கிழக்கு
துருக்கிஸ்தான் விடுதலை அமைப்பு, மற்றும் கிழக்கு துருக்கிஸ்தான் விடுதலை இயக்கம்
ஆகியவையாகும். சீனாவைத் தவிர,
கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துருக்கி, கஜக்கஸ்தான் ஆகிய நாடுகளிலும்
ஒட்டு மொத்தமாக 16 லட்சம் உய்கூர் மக்கள் வாழ்கிறார்கள்.
அவர்களும், வளைகுடா நாடுகள், சவுதி
அரேபியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் குடியேறிய உய்கூர் மக்களும் ஒருங்கிணைந்து
“உலக உய்கூர் காங்கிரஸ்,” என்ற உய்கூர் அமைப்பை நடத்தி வருகின்றனர். அதன் மூலம்,
சீனா உய்கூர் மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடத்தி வரும் அட்டூழியங்களை, உலக
அளவில் விளக்கி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில், ஒசாமா பின் லாடன்
துவக்கிய, அல் கயிதா இஸ்லாமிய தீவிர வாத இயக்கத்தில், உய்கூர் மக்களில் பலர்,
பங்கேற்றனர். அதன் பின், சீனாவுக்கு
உய்கூர் இஸ்லாமிய தீவிரவாதம் சிம்ம சொப்பனம் ஆகிவிட்டது. அந்த இயக்கத்தின் தாக்கத்துக்கு பயந்து, பாகிஸ்தான்,
மற்றும் வளைகுடா நாடுகளில் வேலை செய்யும், உய்கூர் மக்களின் நடவடிக்கைகளை அந்த
நாட்டு அரசுகளின் உதவியோடு, சீனா கண்காணித்து வருகிறது. ஷின்ஜியாங்கின் தலைநகரான உரும்சீயில், 2009ம்
ஆண்டு ஜூலை மாதம், வெடித்த பயங்கரமான சீன எதிர்ப்பு கலவரம், சீன அரசுக்கு பெரும்
கலக்கத்தை ஏற்படுத்தியது. அப்போது, உய்கூர் மக்கள் சீனர்களையும், அவர்களுக்கு
சொந்தமான கடைகளையும், நிறுவனங்களையும் அடித்து நொருக்கி தாக்கினார்கள். நிலமையை
கட்டுக்கு கொண்டு வர, அரசு, சீன பொது பாதுகாப்பு படை உபயோகித்தது.
அரசின் அறிக்கைப் படி, இந்தக் கலவரத்தைத்
தொடர்ந்த தாக்குதல்களில் ஒட்டு மொத்தமாக 197 பேர் கொல்லப் பட்டார்கள், மேலும் 1721
பேர் காயமடைந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் உய்கூர் மக்களாகும். அதன் பிறகு சீன அரசு, உய்கூர் மற்றும் திபெத்
சிறுபான்மையினரின் சுதந்திரப் போராட்டங்களை ஒட்டு மொத்தமாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அவற்றில், தனிநாடு பற்றி பேசக்கூடாது;
அதற்கான உரிமையைப் பரிக்கும் புதிய தீவிரவாதச் சட்டம்; பொது பாதுகாப்பு படையின்
பயிற்சி செயலாக்கம் ஆகியவற்றில் முன்னேற்றம் காண, அந்தப் படையை ராணுவக்
கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது, பொது இடங்களில் காமிரா மூலம் மக்களை கண்காணிப்பது,
உய்கூர் மக்களின் மூளைச்சலவை செய்ய இயங்கும் ‘மாற்றுக் கல்வி” கூடங்கள் ஆகியவையும்,
படிப்படியாக செய்யப்பட்டன. அடங்கும். ஏற்கனவே, சீனாவில் இஸ்லாம், கிறிஸ்துவ மதம்
ஆகியவற்றின் செயல்களை அரசு கட்டுப்பாட்டில் வைக்க பல முயற்சிகளை தொடரந்து
மேற்கொண்டு வருகிறது.
உய்கூர் கலவரத்தின் பின்பு,
இஸ்லாமியர் தொழுகை, மற்றும் எல்லா மதம் சார்ந்த எல்லா செயல்களும், அரசின்
கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. மதரசாக்கள் தடை செய்யப் பட்டுள்ளன.
தொழுகை இடங்களும் அரசின் மேற்பார்வையில் மட்டுமே இயங்குக அனுமதிக்கப் படுகின்றன. மேலும்,
ரம்ஜான் விரதம், ஹலால் இறைச்சி உபயோகம், பொது இடங்களில் உய்கூர் அணியும் இஸ்லாமிய
அடையாளங்களான உடை, தாடிவைத்துக் கொள்ளுதல் ஆகியவை தடை செய்யப் பட்டுள்ளன.
சீன அரசின் ஒருங்கிணைந்த இந்த
முயற்சிகளால் பல்லாயிரக்கணக்கான உய்கூர் மக்கள், அறிவு ஜீவிகளும், ஆசிரியர்கள்,
மதபோதகர்கள், செய்தியாளர்கள் உட்பட, சுதந்திரமாக செயல்
பட முடியாமல் தவிக்கிறார்கள்.
மூளைச் சலவை முகாம்கள்
ஐ.நா.வால் 2018ல் பிரசுரிக்கப்பட்ட
அறிக்கையின்படி, 2017ம் ஆண்டிலிருந்து, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட உய்கூர்
இஸ்லாமியர்கள், மாற்றுக் கல்வி தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கே,
அவர்கள் தங்களது மதத்தையும், கலாசாரத்தையும் மறக்க, மாற்றுக் கல்வி என்ற பெயரில் மூளைச்சலவை
செய்யப் பட்டு வருவதாக, அந்த அறிக்கை கூறுகிறது. ஆனால், பல ஊடகச் செய்திகளின் படி,
தடுப்பு முகாமில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட உய்கூர் மக்கள் உள்ளனர். இந்த
மூளைச்சலவை முகாம்களில், தங்கள் குடும்பங்களில் இருந்து தனியாக பிரிக்கப்பட்ட
உய்கூர் இன ஆண்களும், பெண்களும் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இஸ்லாமிய மதத்தை
மறந்து, உய்கூர் கலாச்சாரத்தை துறந்து, சீன மொழி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின்
கோட்பாடுகள், சீன பிரதமர் ஷீ ஜின்பிங்கின் சித்தாந்தகள் ஆகியவை கட்டாய பாடமாக கற்பிக்கப் படுகின்றன.
ஷின்ஜியாங்க் பகுதி சீனாவின்
பாதுகாப்புக்கு உயிர் நாடியாகும். ஏனெனில், அதன் எல்லை ரஷ்யா, கஜகஸ்தான்,
மங்கோலியா, ஆப்கானிஸ்தான்ஆகிய நாடுகளையும்,
மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியையும் தொட்டுள்ளது. ஷின்ஜியாங்கின்
முக்கிய நகரமான கஷ்காரில், சீனா கட்டமைத்து வரும், சீன-பாகிஸ்தான் பொருளாதார
பன்முனைத் திட்டம் தொடங்குகிறது. இந்த பன்முனைத் திட்டம் பாகிஸ்தான்
ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதி வழியாக தொடர்ந்து, அரபிக் கடல் துறைமுகமான
குவாதாரில் முடிகிறது. ஆகவே, இந்தியாவுக்கு எதிராக உருவாகும் சீனா-பாகிஸ்தான்
பாதுகாப்பு வியூகத்துக்கு, ஷின்ஜியாங் பகுதி மிக முக்கிய அங்கம் வகிக்கிறது.
பாக். இரட்டை வேடம்
உய்கூர் இஸ்லாமிய மக்கள் மீது சீனா
பல ஆண்டுகளாக கட்டவிழ்த்து விட்டுள்ள மனித உரிமை மீறல்கள், உலக ஊடகங்களில் தொடர்ந்து
விமரிசனிக்கப் பட்டு வருகின்றன. அப்படி இருந்தும், இந்தியாவில் இஸ்லாமியர்கள்
அழிக்கப் படுகிறார்கள், காஷ்மீரில் அவர்கள் உரிமைகள் பரிபோகின்றன என்று தினசரி
கூக்குரலிடும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்ணுக்கு, வடக்கு எல்லையில் உள்ள
சீனாவின் ஷின்ஜியாங் பகுதி பெரும்பான்மையினரான உய்கூர் இஸ்லாமிய மக்கள் எதிர்
கொள்ளும் அவலங்கள் தென்படவில்லை. கேட்டால், அதைப் பற்றிய விவரம் தனக்கு தெரியாது
என்று இம்ரான் சொல்வது வினோதமானது. பாகிஸ்தான், வேகமாக சரியும் பொருளாதார
நெருக்கடியை சமாளிக்க, சீனாவுக்கு பெருமளவு கடன்பட்டுள்ளது.
ஆகவே இம்ரானுக்கு வேறு வழி இல்லை.
ஆனால் பாகிஸ்தான் மக்களும் இந்த விஷயத்தில் மௌனம் காப்பது, அவர்களிடையே, சீனாவின்
ஆளுமை எவ்வளவு அடிப்படைத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, என்பதைக்
காட்டுகிறது.
பாகிஸ்தான் மட்டுமல்ல; இஸ்லாமிய
மக்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப் பட்ட உலக இஸ்லாமிய பேரவையும் இதுவரை சீனாவைக்
கண்டித்து பேசியதே இல்லை. ஏனெனில், இஸ்லாமிய நாடுகளின் கண்ணுக்கும், சீனா
தொடர்ந்து உய்கூர் இஸ்லாமியர்களை தமது குடும்பத்தினரிடம் இருந்து பிரித்து,
அவர்கள் அடிப்படை உரிமைகளை ஒடுக்கி, பெயரளவில் "விடுதிகள்" என்று
கூறப்படும் சிறைகளில் அடைக்கப்படும் சீனாவின் செயல்கள் தெரிவதில்லை. இஸ்லாமிய
நாடுகளின் இந்த இரட்டை வேடத்திற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
ஒன்று, அவை சீனாவின் பணபலத்தின்
தாக்கத்தால் பல்வேறு வழிகளில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. ஆகவே சீனாவைப்
பகைக்கும் எந்த விதமான கருத்துக்களையும் அடக்கியே வாசிக்கின்றன. உதாரணமாக, கடந்த
ஆண்டு ஜூலை மாதம், ஐ.நா. மனித உரிமை கௌன்சில் தலைவருக்கு, அமெரிக்கா, ஆஸ்திரேலியா,
பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் ஆகிய உட்பட, 22 நாடுகள் ஒரு கடிதம் எழுதின. அதில் சீனாவில்
உய்கூர் மக்களின் மனித உரிமைகளைப் பரிக்கும் அரசின் செயல்பாட்டைப் பற்றி தங்கள்
கவலையைத் தெரிவித்தன. அத்தகைய கட்டுப்பாடுகளை விலக்க சீன அரசை கோருவதாகவும் கூறின.
ஆனால் அந்த 22 நாடுகளில் ஒன்று கூட
இஸ்லாமிய நாடு இல்லை! அதற்கு பதிலடியாக,
அதே மாதாத்தில் 55 நாடுகள் ஐ.நா. மனித உரிமை கௌன்சிலின் தலைவருக்கு
ஷின்ஜியாங்கில், சீனா மேற்கொண்ட நிலைபாட்டுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தன. அவற்றில்
துருக்கி, சவுதி உட்பட மற்ற அரேபிய நாடுகளும் பாகிஸ்தானும் அடங்கும். பிறகு குடா
நாடான கட்டர் நாடு மட்டும், உய்கூர் இஸ்லாமிய மக்கள் மனித உரிமைகள் போய் அவதிப்படுவதாக
கூறி, அந்தக் கடிதத்திற்கு அளித்த ஆதரவை, விலக்கிக் கொண்டது.
சீனாவின் நிலைப்பாட்டை ஆதரிக்கும்
பெரும் பான்மையான நாடுகளில், ஜனநாயக மற்றும்
மனித உரிமைகள் பெயரளவில் மட்டுமே உள்ளன. செயலளவில், அந்நாட்டு ஆட்சியாளர்கள் பலர்,
மனித உரிமை மீறல்களுக்கு பெயர் போனவர்கள். ஆகவே உய்கூர் மக்களின் மனித உரிமை
பரிபோவது, அவர்களுக்கு பெரிய பாதிப்பாகத் தெரியவில்லை. அந்த நாடுகளை ஏன் குறை சொல்லவேண்டும்? நமது
நாட்டில் இயங்கும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புக்களும், கட்சிகளும் இந்த விஷயத்தில்,
உய்கூர் மக்களுக்கு ஆதரவாக பெரும் முயற்சி எதுவும் எடுக்காதது ஏன் என்பது
புரியவில்லை.
நிலைப்பாட்டை மாற்றுமா?
இந்தியா தொடர்ந்து உய்கூர்
விவகாரத்தில், சீனாவைப் பற்றி அரசு ரீதியாக விமரிசிக்காமல், நடுநிலையாக செயல்பட்டு
வருகிறது. தற்போது, தொடரும் இந்திய சீன உறவில் தொடரும் விரிசல் காரணமாக இந்தியா
தனது நிலைப்பாட்டை மாற்றுமா? இந்த விஷயத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக காஷ்மீர்
பிரச்சினையை ஐ.நா.வில் விவாதிக்க சீனா அண்மையில் எடுத்த முயற்சியை, நாம் நினைவில்
கொள்ள வேண்டும். ஆகவே, அதற்கு பதிலாக, இந்தியா உய்கூர் விவகாரத்தில், சீனாவின்
நிலைபாட்டை பற்றிய தனது கவலையை வெளிப்படையாக தெரிவிப்பதில் தவறு ஏதும் இருக்கப்
போவதில்லை. எனினும் அவ்வறு செய்ய மறுக்கின்றது!
No comments:
Post a Comment