கர்னல் ஆர் ஹரிஹரன் | பெப்ரவரி 14, 2021
கடந்த ஆண்டு மே மாதத்தில் லடாக்
எல்லையில் சீனா தனது படைகளைக் குவிக்க ஆரம்பித்த பிறகு, அதைத் தொடர்ந்து ஜூன் 20
ந்தேதி கல்வான் பகுதியில் இந்தியா-சீன ராணவங்களிடையே ஏற்பட்ட ஆயதம் அற்ற
கைகலப்பில் இரு தரப்பிலும் உயிர் சேதத்தில் முடிய, அது இந்திய-சீன உறவுகளில்
மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அது பிரதமர் நரேந்திர மோடி சீனாவுடன்
நல்லிணக்கம் தேட எடுத்த பல முயற்சிகளுக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு என்று கூறலாம்.
அதைத் தொடர்ந்து இரு நாடுகளும் பல
மட்டங்களில் நடத்திய பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் காணவில்லை. அதற்கு மாறாக இரு
தரப்பும் படைகளை எல்லைப் பகுதியில் குவிக்க, இரு நாடுகளுக்கும் போர் மூள்வதற்கான
சூழ்நிலை உருவானது.
அத்தகைய போர் அபாயம் நிகழும் ஆபத்து
தற்போது ஓரளவு தவிர்க்கப்பட்டுள்ளது என்றே கூறலாம். பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்
சிங் கடந்த பெப்ரவரி 11ம் தேதி அன்று, இந்தியா-சீனா நாடுகளுக்கு இடையே லடாக்
எல்லையில் படைகளை குறைக்க ஒப்பந்தம் கையெழுத்தான செய்தியை பாராளுமன்றத்தில்
அறிவித்தார். விரிசலான இந்திய-சீன உறவில் இது வரவேற்கத்தக்க முதல் முன்னேற்றம்
என்று கூறலாம்.
லடாக் எல்லையில் கடந்த பத்து மாதங்களாக
இந்திய-சீனப் படைகளுக்கு இடைய நிலவி வந்த பதட்டமான சூழ்நிலையை மாற்ற, கையொப்பமான
படைக் குறைப்பு ஒப்பந்தத்தின் விசேஷ அம்சங்களை பாதுகாப்பு அமைச்சர் விளக்கினார்.
இந்த ஒப்பந்தம், இரு தரப்பு பிராந்திய
ராணுவ உயர் அதிகாரிகள் மட்டும் அல்லாமல், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின்
இணைச்செயலரும் பங்குபெற்ற, பல சந்திப்புக்களுக்கு பின்னர், உருவாக்கப்
பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தத்துக்கான பேச்சு
வார்த்தைகள் இழுபறியில் தொடர்ந்து நின்ற போது, இந்திய அரசு நூற்றுக் கணக்கான
டிக்டாக் போன்ற மிக பிரபலமான சீன மொபைல் பயன்பாடுகளைத் தடை செய்து, சீன முதலீட்டு
வியாபார நிறுவனங்களின் செயல் பாடுகளை ஆராய முனைந்தது. முதன் முறையாக, இந்திய—சீன
எல்லையில் ஏற்பட்டுள்ள பதட்டம் நிலை தொடரும் போது, சீனாவுடனான மற்ற வணிக,
பொருளாதார, அரசியல் உறவுகளும் பாதிக்கப்படும் என்ற இந்தியா, தன் புதிய நிலைப்பாட்டை
செயல் முறையில் நிதர்சனமாக காட்டியது. முன்பு எப்போதும் காணாத, இந்தியாவின் திடமான
நிலைப்பாட்டை, சீன அரசு புரிந்து கொள்ளவேதான், இந்த ஒப்பந்தம் உருவானது என்றே
தோன்றுகிறது.
இந்த ஒப்பந்தத்தில், படைக்குறைப்பின்
பல்வேறு கட்டங்களில், எந்தத் தேதியில் எந்த இடத்திலிருந்து எந்த இடத்துக்கு,
எத்தகைய கனரக ஆயுதங்கள், டாங்கிகள் ஆகியவை விலக்கப்படும் என்ற முழு
விவரங்கள் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இதன்மூலம் இரு தரப்பினரும்
படைக் குறைப்பு உண்மையில் செயலாக்கப் படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க உதவும்.
அதனால், படைக்குறைப்பின் போது, சந்தேகமான சூழ்நிலை ஏற்படுவதைத் தவிர்த்து,
எல்லையில் அமைதியை தொடர்ந்து நிலைநாட்ட முடியும்.
மேலும், இந்த ஒப்பந்தத்தில்,
படைக்குறைப்பு பல்வேறு கட்டங்களாக முடிந்த பின்பு, லடாக் எல்லையில்
இருநாடுகளுக்கும் சர்ச்சைக்கு உரிய மற்ற நிலைகளைப் பற்றிய பேச்சுவார்த்தைகளத்
தொடரலாம் என்ற விவரமம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் இந்த ஒப்பந்தத்தில்,
இந்தியா பங்காங்ட்ஸோ ஏரியின் வடக்கு கரையில் பிங்கர்-3 என்ற மலைவரம்பில் இருந்து
பிங்கர்-8 மலைவரம்பு வரை உள்ள பகுதியில் இரு தரப்பு படைகளும் ரோந்துப் பணியில்
ஈடுபடமாட்டோம் என்ற தாற்காலிக ஏற்பாட்டை ஒப்புக் கொண்டதற்கு கண்டனம்
தெரிவித்துள்ளனர். இந்த ஏற்பாட்டுக்கான காரணங்களை ராகுல் காந்தியும் மற்ற
காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் புரிந்து கொள்ளத் தயாராக இல்லை என்றே
தோன்றுகிறது.
இந்தியாவின் இந்த தாற்காலிக
ஏற்பாட்டுக்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, இந்த தாற்காலிக ஏற்பாட்டின்படி
பிங்கர்-3க்கும் 8க்கும் இடையே சீனா ஆக்கிரமித்துள்ள பகுதியிலிருந்து
தனது படைகளை விலக்கி, மே 2020க்கு முன்பு பாங்காங் ட்ஸோ வடக்கு கரையில் நிலவிய
எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதிக்கு திரும்பிவிடும். இது, எல்லையில்
சுமூக நிலை திரும்ப இந்தியா வைத்த அடிப்படை கோரிக்கையாகும்.
இரண்டாவதாக, அந்தப் பகுதியில் சீனா
ஏற்கனவே பிங்கர் 8ல் இருந்து பிங்கர் 5 வரை 1999ல் இருந்த காலடிப் பாதையை 2000-ம்
ஆண்டு சாலையாக விரிவாக்கம் செய்துள்ளனர். ஆனால், இந்தியத் தரப்பில் பிங்கர் 3ல்
இருந்து பிங்கர் 5 வரை பாதை இல்லை. ஆகவே ஒப்பந்தத்தின் விளைவாக இந்தப் பகுதியில்
சீனாவின் ஆதிக்கம் தற்போது குறைக்கப் படும்.
பங்காங்ட்ஸோ ஏரியின் தெற்கு
கடற்கரையில் இந்தியப் படைகள் ஆகஸ்டு 29-30 தேதிகளில், சீனா சற்றும் எதிர்பாராத
வண்ணம், சுஷூல் பகுதியில் முக்கியமான இடங்களை கைவசப்படுத்தின. இவற்றில், அந்தப்
பகுதியை ஆதிக்கம் செலுத்தம் குருங் ஹில், மகர் ஹில், முக்பாரி, ரிஜாங் லா மற்றும்
ரெசின் லா ஆகிய மலை உச்சிகள் அடங்கும். அதன் பிறகு, இந்திய டாங்குகள் அந்த இடங்களை
அடைந்து போருக்கான தயார் நிலையை அடைந்தன.
அதனைத் தொடர்ந்து, சீனா தனது டி-56
டாங்குகளை அந்த மலைச் சரிவுகளில் நூறு அடி தூரத்தில் நமது படைகளுக்கு எதிரே
நிறுத்தின. இதைத் தொடர்ந்து எந்தக் கணமும் போர் வெடிக்கச் கூடிய அழுத்தம்
ஏற்பட்டது. அப்படியே போர் மூண்டாலும் இரு தரப்பும் அந்த கடினமான சூழ்நிலையில் போரைத்
தொடருவது மிகவும் கடினம். சீனர்கள், இந்த இழுபறி நிலையை சென்ற ஆண்டு மே மாதம்
துவக்கி இருந்தாலும், அங்கே நிலவும் கடுங்குளிரில் போரை நடத்தும் மன நிலையில்
தற்போது இல்லை என்று தோன்றுகிறது.
ஏனெனில், எட்டாவது, ஒன்பதாவது சுற்றுப்
பேச்சு வார்த்தை நடந்த போதே சீனத் தரப்பு, இரு தரப்பும் டாங்குகளை அங்கிருந்து
விலக்கினால் அதற்கு தயாராக இருப்பதாக கூறியது. ஆனால், அதற்கு ஈடாக இந்தியத் தரப்பு
பங்காங்ட்ஸோ வடக்கு கரையில் சீனா ஆக்கிரமித்து பகுதிகளிலிருந்து விலகி மே 2020க்கு
முந்தைய நிலைக்கு திரும்பவேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது. அதன்
விளைவாக ஜனவரி 24ந் தேதி, சீனா வாயளவில் அதற்கு ஒப்புதல் தெரிவித்தது.
அந்த ஒப்பந்தத்தம் எழுத்து மூலம்
வடிவாக்கப்பட்ட பின்பு, அதற்கு இந்தியா பிப்ரவரி 8ந் தேதி ஒப்புதல் தெரிவித்த
மறுநாளே, சீனாவும் அதற்கு தனது ஒப்புதலை தெரிவிக்க, ஒப்பந்தம் 10ம் தேதி
கையெழுத்தானதும், சீனாவின் 200 டாங்குகள் மோல்டோ தளத்திலிருந்து விலகி, 100 கி. மீ
தொலைவில் உள்ள ரூடாக் ராணுவ தளத்திற்கு திரும்பின. இது 12ந் தேதி துவங்கும் சீன
"எருது" புத்தாண்டின் துவக்கத்தை கொண்டாட ஏற்பட்ட அவசரம் என்று கருதப்படுகிறது.
இந்த விஷயத்தில் இந்திய டாங்குகள் 30 கி. மீ தூரத்தில் உள்ள பகுதிக்கு திரும்பி
உள்ளன.
ஒப்பந்தத்தை விளக்கிய பாதுகாப்பு
அமைச்சர், இது ஒரு துவக்கம் என்றும், இனி தொடர்ந்து சச்சரவுக்குரிய எல்லை நிலைகளான
டெப்சாங், பி. பி. 17 ஆகியவற்றைப் பற்றிய பேச்சு வார்த்தைகள் நடைபெறும் என்று தனது
அறிக்கையில் கூறினார்.
இந்திய-சீன உறவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட
பெரும் தாக்கங்கள், இந்திய போர்ப்படைகளுக்கு வரவேற்க தக்க வாய்ப்பை
ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த ராணுவ தண்டவாளங்கள்,
நவீன கன ரக பீரங்கிகள், ஆயுதங்கள், நவீன போர் விமானங்கள், ஆகியவை போர்க்கால
அடிப்படையில் இறக்குமதி செய்யப் பட்டுள்ளன.
நெடுங்காலமாக வாயளவில் பேசப்பட்டு வந்த
பாதுகாப்பு உற்பத்தி, நவீன மயமாக்கல், ஆய்வுகள் ஆகியவை விரைவாக செயலாக்கம்
அளிக்கப் பட்டு வருகின்றன. அதைத் தவிர, இந்தியாவின் முக்கியமான பல துறைகளில் சீனா
இறக்குமதி பொருட்கள் இன்றியமையாத ஆதிக்கம் செலுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது.
இத்தகைய வெளி நாட்டு இறக்குமதி வணிக ஆதிக்கத்தை குறைக்க, பிரதமர் மோடி "ஆத்ம
நிர்பர்" குறிக்கோளுக்கு தேசிய அளவில் செயல் படுத்த, முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது
வரவேற்கத்தக்கது.
[கர்னல் ஹரிஹரன், ராணுவம் நுண்ணறிவுப்
பிரிவில் தெற்காசிய மற்றும் தீவிரவாதத் துறைகளில் போர் முனை அனுபவம் பெற்றவர். ஈ
மெயில்: haridirect@gmail.com. இணைய தளம்: https://col.hariharan.info]
No comments:
Post a Comment