Thursday, 27 May 2021

இந்தியா-சீனா-இலங்கை உறவுகள் – கேள்வியும், பதிலும்

கர்னல் ஆர் ஹரிஹரன் | மே 27, 2021

(ஒரு இலங்கை ஊடக நேர்காணலுக்கு நான் உபயோகித்த குறிப்புகளை கீழே காணலாம்.}

1. இலங்கையில் சீன முதலீடுகளின் அதிகரிப்பை பிராந்திய வல்லரசாக இருக்கும் இந்தியா எப்படி பார்க்கும்?

இலங்கையில் மட்டுமல்ல, தெற்காசிய நாடுகள் எல்லாவற்றிலும் சீன முதலீடுகளும், அதன் உடமைகளும் பல மடங்கு அதிகரித்துள்ளன. இதன் முக்கிய காரணம் சீனாவின் ஈடு இணை இல்லாத பண பலம். அதை பொருளாதார அடிப்படையில் இந்தியா எதிர் கொள்ள முடியாது. ஆகவேதான், இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, சீனாவின் அதிகரிக்கும் ஆளுமையைக் கண்டு கவலை கொள்ளும் மற்ற நாடுகளுடன் ஒருங்கிணைந்து முதலீடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இலங்கையில் இந்திய-ஜப்பான் கூட்டாக திரிகோணமலையில் மேற்கொள்ள இருக்கும் வளர்ச்சி திட்டம் இதற்கு ஒரு உதாரணம் என்று கூறலாம். 

2. கிழக்கு முனையத்திற்கு உள்நாட்டு எதிர்ப்பு காரணம் காட்டப்பட்டது. ஆனால், பல எதிர்ப்புக்களை மீறி Port City சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை எப்படி பார்க்கின்றீர்கள்?

இது இலங்கை அரசு மேற்கொள்ளும் முடிவுகளில் சீனாவின் கை ஓங்கி இருப்பதை காட்டுகிறது. இதன் காரணம் ராஜபக்ச குடும்பத்தினர் சீனாவிடம் காட்டும் கரிசனத்தை, இந்தியாவிடம் காட்ட தயாராக இல்லை என்பதே. எனது பார்வையில், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா புதிதாக உருவாக்கியுள்ள குவாட் அமைப்புக்கு, இலங்கை ஈடுபாடு காட்டக்கூடாது என்பதற்கு சீனா இலங்கை அரசின் மீது அளிக்கும் பன்முனை அழுத்தங்களுக்கு போர்ட் சிடி முடிவு ஒரு முன்னுதாரணம். இத்தகைய சீன அழுத்தங்களை வருங்காலத்தில் இலங்கை மக்கள் மேலும் எதிர் கொள்ளுவார்கள் என்பது என் கணிப்பு.  

3. இலங்கையில் விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் சீனாவின் ஆதிக்கம் இருக்கவில்லை. புலிகளின் அழிவுக்கு இந்தியாவும் உழைத்தது. இவை எல்லாம் இந்திய இராஜதந்திரத்தின் தோல்வியாக பார்க்கப்படுகின்றது? அது சரியா?

இந்தக் கேள்வி இந்தியாவின் மீது உள்ள காழ்புணர்ச்சி  சரித்திரத்தை எப்படி மாற்றப் பார்க்கிறது என்பதற்கு ஒரு உதாரணம்.  முதலாவது, 2009ல் சீனா உலக அளவில் ஒரு வல்லரசாகவில்லை. ஆகவே அப்போது, இலங்கையில அதற்கு தற்போதுள்ள அளவு ஈடுபாடு கிடையாது. 

இப்போது நான் சரித்திரம் கண்ட உண்மைகளை உங்களுக்கு அளிக்கிறேன். 

விடுதலைப் புலிகள் இந்தியாவில் புகலிடம் கண்டு பலம் வாய்ந்த அமைப்பாக இலங்கை திரும்பியது மறுக்க முடியாத உண்மை.

இந்தியப்படையை இலங்கையிலிருந்து வெளிக்கிளப்ப புலிகள் அதுவரை விரோதியாக பாவித்த பிரேமதாசவுடன் கைகோத்தது உண்மை.

இந்தியப் படைகள் நாடு திரும்பிய பிறகு இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை வெடிகுண்டு தாக்குதலில் புலிகள் கொன்றது உலகமே அறிந்த உண்மை. 

அதற்கு பிறகு இந்தியா புலிகளை அழிக்க எந்த பெருமுயற்சியும் எடுக்கவில்லை. 2019ம் ஆண்டு ஈழப் போரில் புலிகள் அழிவுக்கு இலங்கைக்கு சீனா ஆயுதங்களை பெருமளவில் உதவியது முக்கிய காரணம். 

இந்த சரித்திரத்தை படிக்காத விரும்பாமல், திரித்து பார்ப்பவர்களுக்கு நான் ஒன்றுதான் சொல்வேன். இலங்கைத் தமிழர்களின் விடிவுகாலம் இன்னும் நெருங்கவில்லை என்று தெரிகிறது . 

4. இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் உருவாக்கப்பட்ட 13 ஆம் திருத்தத்தினை இலங்கை நடைமுறைபடுத்தவில்லை. அது ஒரு அதிகார பரவலாக்கம். தற்போது Port City க்கு அதிகார பகிர்வையே கொடுத்திருக்கின்றார்கள். இதன் மூலம் இந்தியாவை இலங்கை மதிக்கவில்லை என எடுத்து​ ​கொள்ளலாமா? 

இந்தக் கேள்விக்கு நான் ஏற்கனவே கேள்வி 2க்கு அளித்த பதிலைப் பார்க்கவும். ​​இரண்டு தனித்தனி விடயல்களு​க்கு முடிச்சு போடுவது அரசியல். ​​

5. தமிழர்கள் சமஷ்டியை கோருகின்ற போது இந்தியா 13 யை பேசுவது என்பது சுயநலமா இல்லை தமிழர் நலமா?

இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு. இலங்கையில் வாழும் தமிழர்களை விட, இந்தியாவில் பல மடங்கு அதிகமான தமிழர்கள் வாழ்கிறார்கள். இந்திய ஜனநாயகம் எப்போதுமே தனது நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கவே எல்லா முடிவுகளையும் எடுக்கிறது. 13ம் சட்ட திருத்தம் தமிழர்களுக்கு சில அடிப்படை உரிமைகளை அளிக்கிறது. அதை செயலாக்க, தமிழர் நலம் பேசுவோர், இந்தியாவை குற்றம் காண்பதை விட்டுவிட்டு, முயற்சி மேற்கொள்ள வேண்டும். 

6. ஈழம் உருவாக இந்தியா விரும்பாததுக்கு தமிழ்நாடு இந்தியாவிருந்து பிரியும் எனும் பயமா காரணம்?

நீங்கள் தமிழ்நாடு பிரிவினை என்ற வெத்து வேட்டை போட்டு, பயமா என்று கேட்கிறீர்கள். இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எடுத்து படியுங்கள். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையே ஒருங்கிணைந்த இலங்கை. 

7. இந்திய இராணுவம் இலங்கையில் தமிழர்கள் மீது நடாத்திய படுகொலைகள், பாலியல் நடத்தைகள் மற்றும் யுத்த மீறல்களுக்கு பரிகாரம் என்ன?

இதற்கு நீங்கள்தான் விடை அளிக்கவேண்டும். ஏனெனில், அது நீங்கள் என்ன பரிகாரம் தேடுகிறீர்கள், அதைப் பெற என்ன முயற்சி எடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்ததாகும். ஆனால் அந்த கால கட்டத்தில் யுத்த மனித உரிமை மீறல்கள் அரசியல் முக்கியத்துவம் அளிக்கப் படவில்லை என்பது உண்மை. 

போரிலும் சமாதான காலங்களிலும், மனித உரிமை மீறல்கள் ராணுவத்தின் அடிப்படைக் கட்டுப்பாடுகளை மீரும் செயல். ஆகவே ராணுவங்கள் மனித உரிமை மீறல்களை அனுமதிக்க கூடாது. தற்போது இந்திய ராணுவத் தலைமை அகத்தில் அத்தகைய குற்றங்களை விசாரிக்க தனிப் பிரிவை அமைத்துள்ளது. இதை இலங்கையும் செய்ய வேண்டும்.

8. இந்திய இராணுவம் இலங்கைக்கு அமைதி காக்கும் படையாக வரும்போது தமிழர்கள் வரவேற்றார்கள். பின் அவர்கள் மீது படுகொலை செய்ய காரணம் என்ன?

இதற்கு விடைகாண, நீங்கள் இந்தியப்படை மீது போர் தடுத்த தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை அணுக வேண்டும்.

 8. மாத்தையா, பிரபாகரன், கிட்டு, வரதராஐபெருமாள், சிறிசபாரட்ணம் தொடர்பில் உங்கள் பார்வை எத்தகையது?

அவர்கள் எல்லோரும் தனி ஈழம் அமைக்க தமது வழிமுறையில் பாடுபட்டவர்கள். 

9. அமைதி படைப்பிரிவின் புலனாய்வு பொறுப்பிலிருந்த உங்களுக்கு இந்திய படைகளின் போக்கு எதிர்காலத்தை கேள்விக்கு உட்படுத்த போகின்றது என்று அறிந்திருக்கவில்லையா?

நுண்ணறிவுப் பிரிவு எதிர் காலத்தில் என்ன நடக்கப் போவது என்பதைக் கண்டறிய ஆரூடம் பார்ப்பதற்கு அமைக்கப் பட்டதல்ல. அது போருக்கு தோவையான உத்திகளை உருவாக்க அமைக்கப் பட்டுள்ளது. போருக்கு என்ன தேவையோ அதை மட்டுமே செய்யும்.

 

 

 


No comments: