Wednesday, 18 April 2018

இலங்கையில் தொடரப்போகும் அமெரிக்கா, இந்தியா, சீனா பலப்பரீட்சை; கேர்ணல் ஹரிகரன் விசேட செவ்வி பகுதி -1


இந்திய இராணுவத்தின் ஓய்வுநிலை  புலனாய்வு நிபுணரும் தெற்காசியாவில் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்தவர்களுள்  ஒருவரும் எழுத்தாளருமான  கேர்ணல் ஆர்.ஹரிகரனை சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்தபோது, இலங்கை தீவில் காணப்படுகின்ற வல்லாதிக்க நாடுகளுக்கிடையிலான போட்டிகள், பூகோள அரசியல் நிலைமைகள், இந்திய அமைதிப்படையின் செயற்பாடுகள்,இலங்கை தேசிய இனப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர் கேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியின் முழுவடிவம் வருமாறு; 

கேள்வி:- சமகாலத்தில் இலங்கை, இந்தியா,சீனா ஆகிய நாடுகளுக்கிடையே­ காணப்படும் உறவுகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?


பதில்:- இந்தியா, இலங்கை, சீனா ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவுகளை தனித்தனியாக பார்க்க முடியாது. மூன்று நாடுகளுக்கும் இடையில் முக்கோண உறவுகளே காணப்படுகின்றன. 

உலக நாடுகள் அமெரிக்காவுடன் கூட்டிணைந்து உலக ஒழுங்கு முறையில் செயற்பட்டு வருகின்றன.அவ்வாறான நிலையில் சீனா தனது இராணுவ மற்றும் பணபலத்தினை உபயோகித்து அந்த உலக ஒழுங்குமுறையை மாற்றியமைக்க முயற்சிகளை எடுத்து வருகின்றது. 

இதற்கு சிறந்தவொரு உதாரணமே பிறிக்ஸ் அமைப்பாகும். சீனாவின் முன்னெடுப்பில் ரஷ்யா, பிரேசில், இந்தியா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் அதே குறிக்கோளுடன்  ஒத்துழைக்கிறார்கள். இருந்தாலும் இந்த நாடுகளிடத்தில் உலகளவில் முடிவுகளை எடுப்பதற்கு அதாவது தீர்மானிக்கின்ற சக்தி இன்னமும் போதியளவிலில்லை. 

ஆகவே இத்தகைய அமைப்பு உருவாகி இருப்பினும் இந்த அமைப்பிலுள்ள நாடுகளிடத்திலும் யார் முன்னிலை பெறுவது என்ற போட்டித்­தன்மை உள்ளது. ரஷ்யாவைப் பொறுத்தவரையில் அதற்கு அமெரிக்காவுடன் தான் பிரச்சினை. ஆகவே சீனா,இந்தியாவை கடந்து இந்த அமைப் பிற்கு தலைமை தாங்க வேண்டும் என்று கருதுகின்றது. 

இந்த நிலைமையில் தான் தெற்காசிய பிராந்தியத்தில் சீனாவின் பிரசன்னத்தினை கவனத்தில் கொள்ள வேண்டும். சீனாவின் தெற்காசிய பிரவேசத்தின் ஒரு பாகம் தான் இலங்கையில் சீனாவின் தோற்றம். 

இலங்கையும், இந்தியாவும் தொப்புள்கொடி உறவையும் கடந்து, பூகோள ரீதியாக ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் போன்றன. இவற்றில் எந்தவொன்றுக்காவது பாதுகாப்பு விளைவுகள் ஏற்பட்டால் அது நிச்சயமாக மற்றொன்றில் எதிரொலிக்கும்.  ஆகவே அதில் இந்தியா கவனமாக இருக்கும். இந்தியா மிகப்பெரும் ஜனநாயக நாடு. சீனாவைப் போன்று தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கமுடியாது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் பிரசன்னத்துக்கான சமநிலையை இந்தியா நிச்சயமாக கவனமாக பேணும். 

கேள்வி:- இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துச் செல்கின்றதாக கணிக்கப்படுகின்ற நிலையில் அந்த நிலைமை எதிர்காலத்தில் இந்திய பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகி விடுமெனக் கருதுகின்றீர்களா?

பதில்:- இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவே வலிமையான கடற்படையைக் கொண்ட நாடாகும். இந்தியா 50 வருடங்களுக்கு அதிகமாக விமானம் தாங்கி கப்பலை இயக்கி வருகின்றது. ஆனால் சீனா தற்போது தான் விமானம் தாங்கி கப்பலையே கட்டுகின்றது. ஆகவே யுத்தம் ஒன்று நிகழும் போது  அந்தக் கப்பலை இயக்குவதென்றால் ஆகக்குறைந்தது பத்து வருட அனுபவமாவது அவசியமாகும். ஆனால் சீனாவைப் பொறுத்தவரையில் தன்னை அண்மித்துள்ள கடற்பிராந்தியத்தில் தனது பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் உள்ளது. 

உலகளவில் அமெரிக்காவின் கடற்படை வலிமை வாய்ந்தது. அமெரிக்காவின் தோழமை நாடுகளான ஜப்பான் மற்றும் தென்கொரியாவின் உதவியுடன் தென்சீனக்கடல் ஊடாக அமெரிக்க கடற்படை பிரவேசிக்கலாம் என்ற அச்சம் சீனாவுக்கு உள்ளது. ஆகவே அந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவின் பிரவேசத்தினை அகற்ற வேண்டும் என்று சீனா கருதுகின்றதே தவிர தாக்குதல் தொடுக்க வேண்டும் என்று முனைப்பு காட்டவில்லை. 

இவ்வாறான சூழ்நிலையில்தான் இந்து சமுத்திரப் பெருங்கடலில் அம்பாந்தோட்டையில் சீனா காலடி பதித்துள்ளது. இந்த துறைமுகத்தினை சீனா இராணுவத்தளமாக்குமா? அல்லது சாதாரண கடல் வணிக தளமாகவே வைத்துக்­கொள்ளுமா என்று தற்போது விவாதிப்பதில் பயனில்லை. சீனாவுக்கு அவசியம் ஏற்பட்டால் அம்பாந்தோட்டையை இராணுவத்தளமாகவோ அல்லது கடற்படை தளமாகவோ உபயோகிக்கும். இலங்கை அரசாங்கம் சீனாவுடன் இதற்கான  புரிந்துணர்வு காணப்படுவதாக கூறுகின்றது. ஆனால் சீனாவுக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தினை பயன்படுத்த வேண்டிய சூழல் வருமாயின் யாருடைய அனுமதியையும் சீனா கோரப்போவதில்லை. 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடத்தில் சீனாவுக்கு அம்பாந்தோட்டை துறைமுக கட்டுமானத்தினை வழங்கியது தொடர்பில் ஒரு முறை கேள்வி எழுப்பினேன். அதன்போது, இந்தியாவுக்கு முதலில் அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணம் குறித்த திட்டவரவு அனுப்பி வைக்கப் பட்ட போதும் ஒரு வருடங்களாக பதில் கிடைக்காததன் காரணமாகவே சீனாவுக்கு வழங்கப்பட்டதாக என்னிடத்தில் கூறினார். அதன் பின்னர் மத்திய அரசாங்கத்திடம் தொடர்பு கொண்டபோது, பொருளாதார ரீதியாக நன்மைகள், இலாபங்கள்  குறைவாக உள்ளதன் காரணமாக அத்திட்டம் தொடர்பில் கரிசனை கொண்டிருக்கவில்லை என்று குறிப்பிட்டார்கள். 

அதே நேரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவுடன் நெருக்கமாக இருக்கின்ற விடயம் குறித்தும் நான் உரையாடிய போது, இந்தியா சகோதர நாடு, சீனா நட்பு நாடு என்று பதிலளித்தார். யுத்தத்தின் பின்னர் அவருடைய அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கு நிதி அவசியமாக இருந்ததால் தான் அவர் சீனாவுடன் நெருக்கமாக இருந்தார். அதன் ஊடாக நிதியைப் பெற்று யாரும் செய்யாத அபிவிருத்திகளை செய்ததாக காட்ட முற்பட்டார். 

தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை முன்பு ஒரு முறை சந்திக்க நேர்ந்தபோது, அம்பாந்தோட்டை துறைமுகத்தினை சீனாவுக்கு முழுமையாக வழங்கும் திட்டம் குறித்து உரையாடினேன். அதன்­போது அவர், அம்பாந்தோட்டையில் சீனாவின் பிரவேசம் உள்ளது என்று ஏன் அச்சம் கொள்கின்றீர்கள். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் நிர்மாணிக்கப்பட்டால் நான்கு மணி நேரத்தில் இந்தியப் படைகள் அம்பாந்தோட்டைக்கே சென்று விடலாம் அல்லவா? இதனை ஏன் ஜெயலலிதா (மறைந்த முதல்வர்) ஆதரிக்கின்றார் இல்லை? என்று கூறினார். அதுதான் யதார்த்தமாகும். 

உதாரணமாக, ஒரு காலத்தில் மாலைதீவில் ஆட்சி மாற்றத்திற்காக ஈழப்போராட்ட அமைப்பான புளொட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் போது அறுபது புளொட் போராளிகள் மாலைதீவுக்கு சென்றிருந்தார்கள். அந்த தகவல் இந்தியாவுக்கு கிடைத்தவுடன் உடனடியாக சுற்றி­வளைக்கப்பட்டு அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. 

அண்மையில் கூட மாலைதீவில் நெருக்கடிகள் ஏற்பட்டபோது இந்தியாவினால் அத்தகையதொரு முடிவுகளை எடுத்திருக்க முடியும். ஆனால் இந்தியா அதனைச் செய்யாது. காரணம், உலக ஒழுங்கு மாற்றமடைந்து விட்டது. இந்தியாவுக்கும் சீனாவுடன் நல்லுறவை பேண வேண்டியுள்ளது. அதே போன்று சீனாவுக்கும் இந்தியாவுடன் நல்லுறவை பேண வேண்டியுள்ளது. 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பிரச்சினைகள் தொடர்ந்து காணப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். ஆனாலும், கடந்த ஆண்டு சீனாவிற்கான இந்திய ஏற்றுமதியானது 41 சத­வீதமாக முன்னேற்றமடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் சந்தைப்படுத்தலுக்கான வாய்ப்­பினை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதே நேரம் இலங்கையினைப் பொறுத்தவரையில் முதலீடுகளைச் செய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. சந்தைப்படுத்தல் வசதிகளும் உள்ளன. ஆகவே தான் சீனாவும், இந்தியாவும் இலங்கையில் கரிசனை கொண்டிருக்கின்றன. 

அவ்வாறான நிலையில் இந்தியா, சீனாவுக்கு இடையே பலப்பரீட்சை நடந்து கொண்டேயிருக்கும். ஆனாலும் இரு நாடுகளின் தலைவர்களும் இந்த விடயத்தினை நன்கு அறிவார்கள்.அதனால் தான் பிரதமர் நரேந்திர மோடியும் சரி, சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங்கும் சரி இவ்வாறான விடயங்களை பற்றி அதிகமாக பகிரங்க கருத்துக்களை தெரிவிக்க மாட்டார்கள். இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

கேள்வி:- இலங்கைத் தீவில் காணப்படும் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகியவற்றுக்கிடையிலான போட்டிச் சூழலை இலங்கை அரசாங்கம் எவ்வாறு கையாளவேண்டும் என்று கருதுகின்றீர்கள்?

பதில்:- தனது மண்ணின் மீது நடை­பெ­று­கின்ற பலப்­ப­ரீட்­சையை இலங்­கையின் ஆட்­சி­யா­ளர்கள் அறி­யா­ம­லில்லை. யார் ஆட்­சிக்கு வந்­தாலும் அந்தச் சூழலை புரிந்து கொள்­வார்கள். 

சற்று பின்னோக்கி பார்த்தால், சீனாவுக்கு ஆதரவான ஜனாதிபதி என்று சொல்லப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் சீன நீர்மூழ்கி கப்பல் இலங்கைக்கு வந்திருந்தது. அதற்கான எதிர்ப்பினை இந்தியா பகிரங்கமாகவே தெரிவித்தது. அச்சமயத்தில் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ஷ டில்லிக்குச் சென்று விளககமளித்தார். ஆக, இலங்கையின் எந்த ஆட்சியாளர்களும் நிலைமைகளை புரிந்து­கொள்வார்கள். அதிலிருந்து அவர்களால் விடுபடமுடியாது. 

சீனாவும் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை முழுமையாக தன்னைச் சார்ந்து மாற்றுவதற்கு விரும்பாது. அவ்வாறு மாற்ற முற்­பட்டால் இந்தியாவின் பகைமை அதிகமாகிவிடும் என்ற அச்சம் சீனா­வுக்கு உள்ளது. இதனை விடவும் மற்றுமொரு விடயமும் உள்ளது. 

இந்தியப் பெருங்கடலில் புதியதொரு பாதுகாப்பு சூழல் உருவாகின்றது. அதாவது, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் கடற்படைகள் ஒருங்கிணைந்து செயற்படுவது எப்­படி என்பது பற்றி ஆலோசிக்கப் படுகின்றது. இந்த ஆலோசனையை மேலும் செயற்படுத்த அதிகமாக அமெரிக்கா விரும்பினாலும் சீனாவை எதற்கு வீணாக சீண்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியாவுக்கு சற்றுத் தயக்கம் உள்ளது. 

அதேநேரம் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான பாது­காப்பு ஒப்பந்தங்களை கவனத்தில் கொள்கின்றபோது, இந்தியாவிடம் குறைபாடாக உள்ள விடயங்களை சீர் செய்வதாகவே உள்ளன. அத்துடன் சீனாவுடன் இந்தியாவுக்கு போர் மூண்டால் அதற்கு தேவை­யான விமானங்களையும், ஆயுதங்களையும் அமெரிக்கா வழங்கும். இதுவொரு விடயமாக இருக்கையில், இந்தியப் பெருங்கடல் பிராந்தி­யத்தின் மேற்குப் பகுதியில் பிரான்ஸ் நாட்டின் ஈடுபாடு அதிகமாக உள்ளது. அங்கு அதன்  வலிமையான கடற்படை உள்ளதோடு இரண்டு தளங்கள் உள்ளன. பிரான்ஸ் ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் பின்னர் அந்த தளங்களை இந்தியா உபயோகிப் பதற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன. அதே போன்று பிரான்ஸ் கடற்படையும் இந்திய கடற்­படைதளங்களை உபயோகிக்க முடியும். 
இதே­போன்று இந்தியப் பெருங்கடலிலிருந்து வளைகுடா பிரியும் பகு­தியில் ஆபிரிக்காவின் நுழைவாயிலாக ஜிபுட்டி என்ற பகுதி காணப்படு­கின்றது. அங்கு சீனா தளம் அமைத்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஏற்கனவே அங்கு முகாம்கள் உள்ளன. பிரான்­ஸுக்கு அங்கு கடற்படைத்தளம் உள்ளது. அவ்வாறான நிலையில் இந்தியா தற்போது பிரான்ஸின் கடற்படைத்தளத்­தினை பயன்­படுத்துவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.  
இதே போன்று சீனா, பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்தில் கடற்படைத் தளத்தினை அமைக்கின்றது. இதனை ஈடுசெய்வதற்கு இந்­தியா ஈரானுடன் ஒப்பந்தம் செய்து 60கிலோ­மீற்றர் தொலைவில் உள்ள சாபஹார் துறைமுகத்தினை பலப்படுத்தும் அனுமதியைப் பெற்றுள்ளது. 

இந்த நிலைமைகளை யெல்லாம் இலங்கை ஆட்சியாளர்கள் அறியாம­லில்லை. அதே நேரத்தில் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் உள்ளன. இராணுவம், பாதுகாப்பு உட்பட பல விடயங்களில் அத்தகைய நெருக்கம் காணப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை இலங்கை பெறுவதன் காரணத்­தாலும் இவ்வாறான நெருக்கமான உறவுகள் காணப்படுகின்றன. 

ஆனால் தெற்காசிய வலயத்தில் மிக முக்கியமாக பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் நிகழவேண்டும். தற்போதைய சூழலில் இராணுவத்தின் ஆதிக்கம் மறைமுக ஆட்சியில் இருப்பதால் அந்த சூழல் சீனாவுக்கு வாய்ப்பாக உள்ளது. காரணம் சீனாவின் இராணுவம் நேரடியாக பாகிஸ்தான் இராணுவத்தினை கையாள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. ஆகவே அங்கு மாற்றம் நிகழ வேண்டும். 

மேலும் சீனாவிடம் காணப்படுகின்ற மிகப்பெரும் பலமான பணபலத்­திற்கான சமநிலைத் தன்மையும் உருவாக வேண்டியதாகின்றது.  இந்நி லையில் ஆபிரிக்க தலைவர்களைப் போல் அல்லாது இலங்கை தலை­வர்களுக்கு இந்த நிலைமைகளை எவ்வாறு கையாள முடியும் என்­பதை நன்கு அறிந்திருப்பார்கள் என நம்புகிறேன்.  இந்த பலப்பரீட்சை நிறைவடையாது தொடர்ந்து கொண்டிருந்தாலும் இலங்கை ஆட்சியா­ளர்கள் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.  
ஆர்.ராம் 

No comments: