கர்னல் ரமணி ஹரிஹரன்
இந்தத் தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்தது “ஏன் எழுதுகிறார்கள்”
கட்டுரைதான். ஒருவகையில் இது அவர் தன்னுள் பல நாட்கள் விடை காணாமல் கேட்டு வந்த
கேள்வியின் தேடல் என்றே தோன்றுகிறது. ஆரம்ப காலத்தில் நான் தமிழில் எழுதத்
தொடங்கி, தற்போது போர்க்கலை, நுண்ணாய்வு மற்றும் வெளியுறவு சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை
ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன். ஆகவே நான் ஏன் எழுதுகிறேன் என்ற கேள்வி எனக்குள்
தோன்றி விடை காணாமல் அவ்வப்போது உலாவுகிறது. எழுத்தாளர்கள் ஏன் அப்படி தனக்கென ஏற்படுத்திக்
கொண்ட தனி வக்கிரத்துடன் எழுதுகிறார்கள் என்ற கேள்வியை எனது தமயனாரிடம்
கேட்டிருக்கிறேன்.
புதுமைப் பித்தன் கதைகளை நான் விரும்பி வாசிப்பேன். ஒரு முறை புதுமைப்பித்தன்
கதைகளை இருவரும் விமரிசத்த போது, அவர் எழுத்தின் தனித்தன்மைக்குக் காரணம் தனது
வாழ்க்கையில் சந்தித்த அழுத்தங்களே என்று நான் சார்வாகனிடம் கூறினேன். அதற்கு அவர்
“ஏன் எழுதுகிறார்கள்” என்ற கட்டுரையில் கூறிய சில கருத்துக்களை என்னிடம் சொன்னார்.
ஒரு எழுத்தாளன். மனதில் பிறக்கும் எழுத்தை வெளிக்கொண்டு வந்த பிறகே அவன் மனம்
நிம்மதி அடைகிறான், அதுவும் ஒரு முக்கிய காரணம் என்று அவர் கூறியது எனக்கு
நினைவுக்கு வருகிறது.
எழுத்தின் இந்தப் பிரசவ வேதனையை எழுத்தாளர்கள் எல்லோரும் எப்போதாவது
அனுபவித்திருப்பார்கள் என நம்புகிறேன். “ஏன் எழுதுகிறார்கள்” என்ற கேள்விக்கு
எடுத்த முயற்சி அனுபவமே சார்வாகன் தனது கட்டுரையின் முடிவில் கொசிராக இணைக்கப்பட்ட
ஹரி ஸ்ரீநிவாசன்-சார்வாகன் பேட்டிகாணல். இது சுயவிமரிசனமாக, நையாண்டித்தனத்தோடு
அவருக்கே உரித்தான, கேலியான ‘சினிகல்’ நடையில் காணலாம். அவருடன் தான் பழகிய சில
எழுத்தாளர்களைப் பற்றிய அவர் கருத்துக்களின் சாயல் அந்த சுய விமரிசனத்தில் உள்ளன என
எனக்குத் தோன்றுகிறது.
இந்தத் தொகுப்பில் ‘தகுதி, தரம், திறமை’ என்ற கட்டுரையை அவர் ஸர்ஜன்
என்ற பெயரில் எழுதினார். அதில் அவர் நமது நாடு தன் முழுத்திறன் படைத்தவர்களை
உபயோகிக்காமல் வீணடிப்பதின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளதைக் காணலாம்.
தரக்குறைவான பொருட்களையும், செயல் பாடுகளையும் நமக்கு நாமே உள்வாங்கி, நமது வாழ்வு
முறைகளையும் திறனையும் பாழாக்குகிறோம் என்ற கருத்து நம்மை யோசிக்க வைக்கிறது. இக்கட்டுரையில்
மற்ற மதங்களைப் போல் அல்லாமல், ஒன்றே குலம் என்ற கருத்தை செயலாக்கமாகக் கொண்ட ஜைன
மதத்தை மேற்கோள் கூறியிருப்பது அவருக்கு அம்மதத்தின் தத்துவ ஆய்வில் இருந்த ஈடுபாட்டைக்
காட்டுகிறது. மீண்டும் மதங்களைப் பற்றிய தத்துவ ஆய்வு “பிடுங்கிகளும்
பூஞ்சக்காளான்களும்” என்ற விசித்திரமான பெயர் கொண்ட கட்டுரையிலும் தோன்றுகிறது.
சார்வாகனின் “பகலில் உலாவும் ஆவிகள்” என்னைப் போன்ற சாதராண ஆத்மாக்களுக்காக
எழுதப்பட்டதா? தெரியவில்லை. அதன் கருத்துக்களின் முழு ஆழத்தை மூன்று முறை
படித்தும் நான் இன்னமும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் அவர் எழுதிய
“கலைப் படைப்புக்கள் மறதிக்கடலை கடக்க அனாதிகாலமாய் நித்துவத்தை நாடிக்
கொண்டிருக்கும் மனிதர்களால் கட்டப் பட்டிருக்கும் மகா சேது” என்ற கருத்தைப்
படித்தபின், நான் ஏன் பிறந்தேன், நான் நித்துவத்தை நாடுகிறேனா என்ற கேள்விகள் என்
நிம்மதியைக் குலைக்கின்றன. அறிவு ஜீவகள் அல்லாத என்னைப் போன்ற சாதரண மனிதனர்கள்
மீதும் சார்வாகன் எழுத்துக்கள் ஏற்படுத்தும் தாக்கத்துக்கு இதுவே ஒரு நல்ல
உதாரணம்.
அமெரிக்காவிலே அடிமைகளாய் விற்கப்பட்ட ஆப்ரிக்க மக்கள் தங்களுடைய
சொந்த நாடுகளில் உள்ள தங்கள் “வேர்களை” தேடுவதைப் பற்றிக் கேள்விப்
பட்டிருக்கிறோம். அதைப் போல எங்கள் குடும்ப வரலாற்றுத் தலைமுறைகளைத் தேடுவது
சார்வாகனுக்கு ஒரு பொழுது போக்காக இருந்தது. அதன் வடிவே “எனக்கு முன்னால்” என்ற
கட்டுரை. அதில் எங்கள் குடும்பம் தோன்றிய பில்லுவலசை கிராமத்தை அவர் தேடி, அந்தப்
பெயர் எப்படித் தோன்றியது என்ற ஆராய்ச்சி செய்ததைக் கூறியுள்ளார்.
இக்கட்டுரைத் தொகுதியில் சோய்ந்து போன நமது மனக்குதிரைகளைத் தட்டி
ஊக்குவிக்க இன்னமும் பல கட்டுரைகள் உள்ளன. சார்வாகனின் எழுத்துக்களை ரசித்தவர்களைச்
சிந்திக்க வைக்கும் நூல் இது. அதற்கு இவற்றை தொகுத்து வெளியிட்ட பா. ரவிக்கு நாம்
நன்றி சொல்ல வேண்டும்.
No comments:
Post a Comment