கர்னல் ஆர் ஹரிஹரன்
ஒரு ஆஸ்திரேலிய முகநூல் வலைத்தளமான Focusthamil ஊடகவியலாளர் என்னிடம் நடத்த இருந்த நேர்கணலில், எனது
உபயோகத்துக்காக நான் தயாரித்த கேள்வி-பதில் குறிப்பீடுகளை கீழே காணலாம். கடந்த ஆகஸ்டு
9ந் தேதி நடந்த, அந்த வலைத்தள நேர்காணலில் நான் அளித்த பதிலில் சில வேறுபாடுகள் உள்ளன.
ஆனால் விடைகளின் அடிப்படை ஒன்றே. அந்த நேர்காணலை எனது முகநூலில் நீங்கள் காணலாம் அல்லது
கீழ் கண்ட இணைப்பை உபயோகிக்கலாம்
https://www.facebook.com/Focusthamil/videos/2092425757563308
1.
இந்திய இராணுவத்தின்
முன்னொள் தளபதியும், தற்போதைய இந்திய
வெளி விவகார இணை அமைச்சருமான ஜெனரல் வி. கே. சிங், ஒவ்வொரு முறையும் பிரபாகரனை பத்திரமாகத் தப்பிச் செல்ல அனுமதிக்குமாறு
உத்தரவு வழங்கப்பட்டதாகவும்
கூறியிருந்தொர். அந்த உத்தரவுகள் எங்கிருந்து
அல்லது யாரிடமிருந்து வ.ழங்கப்பட்டிருந்தது?
ஏன் இறுதியில் விடுதலை
புலிகளை இல்லாமல் செய்யும் முடிவுக்கு இந்தியா வர வேண்டியிருந்தது?
நான் இந்திய அமைதிப் படையின் தொடக்கத்திலிருந்து
கடைசியாக இலங்கையிலிருந்து வெளியேறிய வரை அதன் தலைமையகத்தில் (1987 முதல் 1990) பணியாற்றி
இருக்கிறேன். அந்த காலகட்டத்தில் நான் ஜெனரல் வி.கே. சிங்கை சந்தித்தது இல்லை. மேலும்
அப்போது, நீங்கள் கூறியபடி பிராபகரனை தப்பிச் செல்ல அனுமதிக்குமாறு உத்தரவு எதுவும்
எங்களுக்கு வரவில்லை, எங்கள் தலைமையும் அவ்வாறான உத்தரவு எதையும் அறிவிக்கவில்லை. அதற்கு
மாறாக, பிராபகரனைப் பிடிப்பவருக்கு அல்லது அவர் இருக்கும் இடம் பற்றிய துப்பு அளிப்பவருக்கு
ரூபாய் பத்து லட்சம் பரிசுத் தொகை அறிவித்திருந்தது. ஆகவே, இந்த கேள்விக்கு விடை காண
நீங்கள் ஜெனரல் வி கே சிங்கையே அணுக வேணும்.
“இறுதியில் விடுதலைப் புலிகளை இல்லாமல்
செய்ய” என்று நீங்கள் கூறுகிறீர்கள். இந்தியா எந்த கால கட்டத்தில் அத்தகைய முடிவெடுத்ததாக
நீங்கள் கூறுகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.
இந்தியாதான் புலிகளுக்கும் மற்றைய ஈழ விடுதலைப்
போராட்ட இயங்களுக்கும் புகலிடமும் ஆதரவும் 1983லிருந்து 1987 வரை அளித்தது. அந்த ஆதரவால்தான்
விடுதலைப் புலிகள் இயக்கம் வளர்ந்தது. இது மறுக்க முடியாத உண்மை.
விடுதலைப் புலிகள் இந்திய இலங்கை ஒப்பந்தப்படி
தம்மிடம் உள்ள ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்து, இடைக்கால அரசில் மற்ற இயக்கங்களைத் தவிர்த்தால்தான்
நாங்கள் பங்கேற்போம் என்று பிடிவாதம் பிடித்தனர். ஆகையினால்தான், அந்த சுமுகமான சூழ்நிலையை
உண்டாக்கும் இந்திய முயற்சி நடைமுறையாக்க முடியவில்லை. விடுதலைப் புலிகள் மற்ற ஈழ விடுதலை இயக்கங்களைத்
தாக்க ஆரம்பித்த பிறகுதான், விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்தியப் போர் துவங்கியது
என்பதை மறந்து விடக்கூடாது. மேலும் இந்திய படைகளை இலங்கையிலிருந்து வெளிக்கிளப்ப வேண்டும்
என்ற ஒரே குறிக்கோளுடன் விடுதலைப் புலிகள் தலைமை இலங்கை ஜனாதிபதி பிரேமதாசவுடன் கைகோத்து
அவரிடமிருந்து ஆயுதங்களைப் பெற்று, இந்தியாவுக்கு எதிராக இயங்கத் தயங்கவில்லை.
மேலும் இந்தியப் படைகளை இலங்கையிலிருந்து
விலக்கப் பட்ட பின்பும் தமிழ்நாட்டில் சரண் புகுந்த மற்ற இயக்க ஈழப் போராளிக் குழுத்தலைவர்களை,
தமிழ்நாட்டில் ஊடுருவிய விடுதலைப் புலிகள் கொன்றார்கள். அதைத் தொடர்ந்து, புலிகள் இந்திய
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியையும் கொன்றார்கள். மேலும் 1255 இந்தியப் போர்படையினர்
இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நடந்த போரில் கொல்லப் பட்டனர். இவ்வளவு நடந்த பிறகு,
இந்தியா புலிகள் இயக்கத்தை ஆதரிக்க வேண்டும் என்று எவ்வாறு நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?.
இந்தியா ஒரு நாடு, விடுதலைப் புலிகள் என்பது ஒரு இயக்கம். இந்த நிலைப்பாட்டை மறந்து,
இரண்டையும் ஈடுகட்டி விவாதம் செய்வதில் பயனில்லை.
2.
கடந்த 33 ஆண்டுகளில், பசுபிக் – இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளர்ந்து வரும்
சீனாவின் வலிமை, பாதுகாப்பு
சூழ்நிலயில் பெரும் மாற்றங்களைத் தோற்றுவித்துள்ளது. ஈழத்தமிழர்களுக்கு என ஒரு நாடு இருந்தால், அது இந்தியாவின் பாதுகாப்புக்கு
பலமானதொன்றாக இன்றைய சூழ்நிலையில் இருப்பதற்கான வாய்ப்புக்களை இழந்துவிட்டதென
கருதுகிறீர்களா?
இத்தகைய கற்பனைக் குதிரையில் பயணம் செய்யும்
கேள்விகளுக்கு நான் என்ன பதில் சொல்வது? ஒருங்கிணைந்த இலங்கையை கூறு போட்டால் அதனால்
எவ்வாறு இந்தியாவின் பாதுகாப்பு அதிகமாகும்? அதற்கு மாறாக, இந்தியாவின் பாதுகாப்பு
தலைவலிகள் அதிகரிக்கும். இந்தோ-பசிபிக் பாதுகாப்பு பூகோளத்தை சார்ந்தது, அதில் உள்ள
கூறுகள் எவ்வளவு ஆனாலும், ஒட்டு மொத்தமாக அதன் பாதுகாப்பை பூகோளத்தின் அடிப்படையே நிச்சயிக்கும்..
3.
இலங்கையின் போர்க்குற்றங்கள் மனித உரிமை விடயங்களை கையாளும் அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுளுடன் இந்தியா ஒரு முழுமையான
பங்களிப்பை வழங்க
முடியாதிருப்பதற்கான காரணமாக இந்திய அமைதிப்படை காலத்தில் நடை பெற்ற சம்பவங்களும் இருக்கிறதா? உதா; யாழ். வைத்தியசாலை படுகொலைகள், வல்வெட்டித்துறை படுகொலைகள்.
இல்லை. ஐ.நா. மனித உரிமை குழுவில் நடக்கும்
விவாதங்களில் இந்தியா எடுக்கும் நிலைப்பாடுகளுக்கு பல்வேறு அழுத்தங்கள் உள்ளன. அவற்றில்
இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அந்நிய நாடுகள் தலையீடு பற்றிய கொள்கை ஒரு முக்கிய
அங்கமாகும். ஏனெனில், அவ்வாறான தலையீடுகள் ஒரு நாட்டின் அடிப்படை சுதங்திரத்தை பாதிக்க
கூடாது என்று இந்தியா திடமாக நம்புகிறது. மேலும் அவ்வாறான தலையீடுகள், அந்நாட்டின்
அங்கீகாரத்துடன் நிகழ்ந்தால்தான் உண்மையான பயனுண்டு என்பது இந்தியாவின் அடிப்படை சித்தாந்தம்.
நீங்கள் குறிப்பிட்ட இரு சர்ச்சைக்கு உரிய சம்பவங்களும் துல்லியமாக விசாரிக்கப் பட்டிருக்க
வேண்டும் என்பது என் கருத்து. ஆனால் அத்தகைய முடிவு எடுக்கும் அதிகாரம் என் கையில்
இல்லை என்பதையும் நான் குறிப்பிட வேண்டும்.
4.
தமிழ் தேசிய இராணுவம் என இந்திய அமைதிப் படையினரால் உருவாக்கப்பட்ட அமைப்பில் பாடசாலை சிறுவர்கள் உள் வாங்கப்பட்டிருந்தார்கள். இது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
இந்த கேள்விக்கு, அப்போதைய வடகிழக்கு மாகாண
அரசே பதில் கூற வேண்டும், ஏனெனில் அந்த அரசின் ஆதரவுடன்தான் அந்த அமைப்பு உருவாக்கப்
பட்டது. இளம் சிறுவர்களை போர் படைகளில் ஈடுபடுத்துவது முற்றிலும் தவிர்க்கப் படவேண்டும்
என்பது எப்போதுமே மாறாத என் அடிப்படைக் கருத்து. அதைப் பற்றி இப்போது குரலெழுப்புவோர்,
அத்தகைய செயல்களில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைமைக்கும், மற்ற ஈழப்போர்
இயக்கங்களுக்கும் அப்போதே ஏன் எதிர்த்துக் குரல் எழுப்பவில்லை என்பது விடைகாணாத கேள்விக்
குறி.
5. ஸ்ரீலங்காவில் நடைபெற்றது ஒரு இனப்படுகொலை என சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை செய்யப் படுவதற்கான முயற்ச்சிகள் பல்பெறு தரப்புகளாலும் மேற்கொள்ள படுகின்றது. இதன் சாத்தியப்பாடுகள்,
இந்தியாவின் பங்களிப்புக்கள் எவ்வாறு இருக்க வேண்டும்
என்று கருதுகின்றீர்கள்?
பன்னாட்டு அரசியல் உயர்ந்த கொள்கைகளை விட
யதார்த்தமான ஒவ்வொரு நாடும் தனது நலன் என்ற அடிப்படையின் நடைமுறை பின்னணியிலேயே நடத்த
படுகின்றது. எந்த குற்றங்கள் சர்வதேச சர்வதேச குற்றமாக கருதப்பட்டு சர்வதேச நீதிமன்றத்தின்
முன்பு எடுக்கப் படவேண்டும் என்பதை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ‘வீடோ’ என்ற தடை உரிமை
உள்ள அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய ஐந்து நாடுகளின் பெரும்பான்மை
பக்க பலமே நிச்சயிக்கும். ஆகவே, இலங்கை இனப்படுகொலைகள் சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு
கொண்டுவர இந்த ஐந்து நாடுகளில் பெரும்பான்மையினர் மனது வைத்தால் உதவி தேவை. நடைமுறையில்
அத்தகைய குற்றங்கள் ருவாண்டா இனப்படுகொலைகள், செர்பியா குரோவாஷியா ஆகிய நாடுகள் போஸ்னியா
போரில் நடத்திய இனப்படு கொலைகள் மற்றும் லைபீரியா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி நடத்திய
கொலைகள் சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு விசாரிக்கப்பட்டன.
அவை யாவும் பல வருடங்கள், பல நாடுகள் ஐ.நா.வில்
இக்குற்றங்களை விவாதித்து விசாரணைகள் செய்த பின்பே நீதிமன்றத்துக்கு முன்பு விசாரணைக்கு
வந்தன. அரசியல் அழுத்தம் அதிகரிக்க குற்றம் புரிந்ததாக கருதப்பட்ட நாடுகளே அந்த நீதிமன்ற
விசாரணைகளுக்கு ஒத்துழைத்தன என்பது குறிப்பிடத் தக்கது. அத்தகைய விசாரணைக்கு சாதகமான சர்வதேச சூழ்நிலை இல்லை
என்பது என் கருத்து.
இந்தியா ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு
சாதாரண தாற்காலிக அங்கத்தினராக உள்ளது. ஆகவே இந்தியா இந்த போர் குற்றத்தை சர்வதேச அளவில்
விசாரிக்க எந்த அளவு உதவ முடியும் என்பது கேள்விக் குறி. ஆகவே பாதுகாப்பு கவுன்சிலில்
வீடோ தகுதி உள்ள நாடுகளிடையே இந்த விசாரணைக்கு ஒரு உந்துதல் அளிக்க வேண்டும் என்பது
என் கருத்து.
No comments:
Post a Comment