Monday, 5 May 2025

பஹல்காம் தாக்குதல் இனி என்ன நடக்கும்?

 


கர்னல் ஆர். ஹரிஹரன்

Published on: 05 May 2025, 11:58 am

https://www.andhimazhai.com/special-section/special-stories/pahalgam-attack-what-will-happen-next

 

பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீரின் பாகிஸ்தான் வசம் உள்ள பகுதியின் நடைமுறை எல்லை (லைன் ஆஃப் கண்ட்ரோல்) வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்துவது ஒன்றும் புதிதல்ல. கடந்த 25 ஆண்டுகளில் அத்தகைய 12,037 மோதல்களில் 22,415 பேர் கொல்லப்பட்டதாக தெற்காசிய பயங்கரவாத விவரங்கள் தரும் வலைதளமான https://satp.org கூறுகிறது. கொல்லப்பட்டவர்களில் 4,980 பேர் அப்பாவி மக்கள் இறந்தவர்களில் பெரும்பாலோர் (12,390) தீவிரவாதிகளே,

பஹல்காமின் அருகே கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடந்த தாக்குதலில் பங்கு பெற்ற நான்கு அல்லது ஐந்து தீவிரவாதிகள் அங்கே கூடியுள்ள சுற்றுலாப் பயணிகளில் இந்து ஆண்களைத் தேர்வு செய்து சுட்டுத்தள்ளி உள்ளார்கள். அவர்கள் ஆயுதத்தைப் பறிக்க முயன்ற ஒரு முஸ்லீம் இளைஞனையும் வீழ்த்தி உள்ளார்கள். பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பா (எல்.இ.டி)யின் கீழ் காஷ்மீரில் இயங்கி வரும் “தி ரெசிஸ்ட்டன்ஸ் ஃபிரன்ட்” என்ற இயக்கத்தை சார்ந்த மூவர் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டதாக போலீசார் கூறுகின்றனர். இவர்களில் ஒருவர் பாகிஸ்தானியர். அப்பாவி மக்களைக் குறிவைத்த இந்த தாக்குதல், பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

நடைமுறை எல்லையில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள பஹல்காமில் சுற்றுலாவரும் மக்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்த பட்டதன் குறிக்கோள் என்ன? இந்த தாக்குதல் மூலம் பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவம் என்ன செய்தி சொல்ல விரும்புகிறது?

2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு விசேஷ அந்தஸ்து அளிக்கும் 370 – வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, தீவிரவாத தாக்குதல்கள் குறைந்து வருகின்றன. முக்கியமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் தாக்குதல்கள் பாதியாக குறைந்தது மட்டும் அல்லாமல் அவற்றின் தீவிரமும் குறைந்துள்ளது. அதனால் அங்கே சுற்றுலா வர்த்தகம் குறிப்பிடத்தக்க எழுச்சி அடைந்துள்ளது. உதாரணமாக, 2023 ஆம் ஆண்டில், முன்னெப்போதும் காணாத வளர்ச்சியாக 2.11 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் இப்பகுதியில் சுற்றுலாவின் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 15.13% ஆக வளர்ந்து வருகிறது.

பாகிஸ்தானின் இந்திய கொள்கையின் அடிப்படையே ஜம்மு காஷ்மீரை இந்தியாவின் ஆதிக்கத்திலிந்து மீட்டு எடுப்பதாகும். ஆகவேதான் இந்தியாவுடன் நடந்த நான்கு போர்களில் பாகிஸ்தான் மூன்று முறை காஷ்மீரை மையப்படுத்தியது. ஆகவே அங்கே முன்னேறிவரும் பொருளாதார வளர்ச்சி தீவிரவாதத்தை நீர்த்துப் போகச்செய்வதால், பாகிஸ்தான் அதைத் தடுக்கவே சுற்றுலா பயணிகளின் மீது தாக்குதலை நடத்தியுள்ளது.

இரண்டாவதாக, பாகிஸ்தானில் உள்ள பி.எல்.ஏ என்று கூறப்படும் பலூச் விடுதலை ராணுவப் போராளிகள் அண்மையில் பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து தமது தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். கடந்த மார்ச் மாதம் 11-ஆம் தேதி குவெட்டாவிலிருந்து பெஷாவருக்கு 380 பயணிகளுடன் பயணித்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் என்ற ரயிலை அவர்கள் கடத்தினார்கள். பாகிஸ்தான் ராணுவம் அணுகுவதற்கு கடினமாக இருந்த ஒரு மலைப்பகுதியில் அதை நிறுத்தினார்கள். பலூச் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் அல்லது பணயக்கைதிகள் தூக்கிலிடப்படுவார்கள் என்று அந்த அமைப்பு 48 மணி நேர இறுதி எச்சரிக்கை விடுத்தது. இந்த தாக்குதல் பாக் ராணுவத்தின் இயலாமையை உலகுக்கு எடுத்து காட்டியது. இந்த கடத்தலில் இந்தியா பலூச் தீவிரவாதிகளுக்கு உதவியதாக பாக் ராணுவம் நம்புகிறது. 

பாகிஸ்தானின் ராணுவத் தலைமைத் தளபதி (COAS) ஜெனரல் சையத் அசிம் முனீர், பஹல்காம் தாக்குதலுக்கு முன்னாலும் பின்னாலும் பேசுகையில் பாகிஸ்தான் பிரிவினைக்கு அடிப்படையான இரு நாடுகள் கோட்பாட்டை எழுப்பி உள்ளார். " முஸ்லிம்களும் இந்துக்களும் ஒன்று அல்ல, இரண்டு தனித்தனி நாடுகள் என்ற அடிப்படை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது இருநாடுகள் கோட்பாடு. மதம், பழக்கவழக்கங்கள், மரபுகள், சிந்தனை மற்றும் அபிலாஷைகள் – உள்பட்ட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் முஸ்லிம்கள் இந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள்" என்று பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் (PMA) நடந்த பயிற்சி அணிவகுப்பில் உரையாற்றும் போது அவர் கூறினார். இந்த மனப்பான்மையின் பிரதிபலிப்பே இத்தாக்குதலில் தீவிரவாதிகள் இந்துக்களை தனிமைப் படுத்தி கொன்றது என்று கொள்ளலாமா என்ற ஐயம் ஏற்படுகிறது.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து அவர் பேசுகையில் "நமது முன்னோர்கள் பாகிஸ்தானை உருவாக்க மகத்தான தியாகங்களைச் செய்தனர். அதை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும்," என்று அவர் கூறியது இந்த பிரச்சினையை எளிதில் முடிக்க பாகிஸ்தான் தயாராக இல்லை எனக் காட்டுகிறது. இந்தியா தொடர்பான முடிவுகளி பாகிஸ்தானில் ராணுவமே எடுக்கும். ஆகவே இந்திய-பாகிஸ்தான் தீவிரவாதப் போர், ராணுவப் போராக மாறும் அபாயம் அதிகமாகி வருகிறது என்றே கொள்ளலாம்.

இந்திய பிரதமர் மோடி இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு அழிக்கப் படுவார்கள் என்று கூறியுள்ளார். மற்றும் இந்தியா சர்வதேச நாடுகளுக்கு பாகிஸ்தானில் மையம் கொண்டுள்ள தீவிரவாதத்தை எதிர்த்து தனது நிலைப்பாட்டை விளக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. 1960-இல் பாகிஸ்தானுடன் கையொப்பமான சிந்து நதி தண்ணீர் பங்கீடு ஒப்பந்தத்தை தாற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஆகவே தற்போது, இந்தியா போரில் ஈடுபடாமல் மாற்று வழிகளில் பாகிஸ்தான் மீது அழுத்தம் கொடுக்க விரும்புகிறது என்று கொள்ளலாம். இதனால் பயன் உண்டா என்பது சந்தேகமே; ஏனெனில் 26 நவம்பர் மும்பை தீவிரவாத தாக்குதல் தொடர்பாகவே கூட பாகிஸ்தான் இதுவரை திருப்தியான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் போர் விளையுமா என்ற வினாவுக்கு விடை காண்பது அவ்வளவு எளிதில்லை.



No comments: