கேணல் ஆர் ஹரிஹரன்
| வீரகேசரி | 11 மே 2025
https://www.virakesari.lk/article/214451
ஜே.வி.பி என்று பொதுவாக அறியப்படும் இடதுசாரி கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன (மக்கள் விடுதலை
முன்னணி) சிங்கள தேசியவாதத்தை முன் வைத்து
இரு முறை மார்க்கசீயவாத ஆயுதப்புரட்சி செய்து
இலங்கையின் சரித்திரத்தில் தனக்கென தனி இடத்தை பெற்றது. அதன் பின்னர்,
2014ல் இருந்து அநுர குமார திசாநாயக்க (ஏ.கே.டி) தலைமையில் ஜே.வி.பி ஆயுதப் புரட்சியை கைவிட்டு தனது மார்க்கசிய
கொள்கைகளை நடைமுறை அரசியலுக்கு ஏற்ப புதுப்பித்து ஜனநாயக அரசியலில் நுழைந்தது. அதற்கு ஏற்ப, ஜேவிபி
தலைமையில் தொழிலாளர் சங்கங்கள் மற்றும் சிறிய இடதுசாரி கட்சிகள் ஆகியவை ஒருங்கிணைந்து
21 அங்கத்தினர் கொண்ட தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் அரசியல் வியூகம் செயல்பட்டு
வந்தது.
ஆனால் இலங்கை தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியால் முன்னணி கட்சிகளான ஐக்கிய தேசிய
கட்சி, இலங்கை விடுதலை கட்சி மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆரம்பித்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி
ஆகியவற்றுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. உதாரணமாக, 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த
ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சார்பில் போட்டியிட்ட ஏ.கே.டி. மொத்த வாக்குகளில்
3.16 சதவிகதமே பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.
இத்தகைய அரசியல் சூழலில் அநுர குமார திசாநாயக்க கடந்த ஆண்டு செப்டம்பர் 21-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் 55.89
சதவிகிதம் வாக்குகள் பெற்று வியக்கத் தக்க
வெற்றி கண்டார். இடதுசாரி குறிக்கோளுடன் இயங்கும் கட்சியை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக
தேர்ந்தெடுக்கப் படுவது இதுவே முதன் முறையாகும்.
இடதுசாரி அரசியல் ஆணை அந்நாட்டில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? இது இலங்கையில்
மட்டும் அல்லாமல், இந்திய துணைக் கண்ட அரசியலில் ஈடுபாடுள்ள அனைவரும் எதிர் கொள்ளும்
ஒரு கேள்வியாகும்.
இலங்கையின் தற்கால அரசியலே அதற்கு விடை அளிப்பது போல, ஜனாதிபதி தேர்தல் வெற்றியை
தொடர்ந்து, நவம்பர் 14, 2024-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஜேவிபி தலைமையில் போட்டி
இட்ட தேசிய மக்கள் சக்தி கூட்டணி 61.56 சத விகிதம் வாக்குகளை பெற்று, 159 ஆசனங்களை
கைப்பற்றியது. அதை தொடர்ந்து தேசிய மக்கள் சக்தி முதன் முறையாக அரசை அமைத்துள்ளது.
அதற்கு முந்தைய நாடாளுமன்ற தேர்தலில்3.8 சத விகித வாக்குகளே பெற்ற தேசிய மக்கள் சக்தி
எவ்வாறு ஏ.கே.டி தலைமையில் இத்தகைய மகத்தான செல்வாக்கை மக்களிடம் பெற்றது? இடதுசாரி
அரசு இலங்கையின் தடுமாறும் பொருளாதாரத்தை சீர்தூக்க இயலுமா? ஏ.கே.டி தலைமையில் அரசு
தான் பெற்ற செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ளுமா?
இத்தகைய கேள்விகளுக்கு விடைகாண இலங்கையின் புலம் பெயர்ந்த (தற்போது கனடாவில் வசிக்கும்)
அனுபவம் மிக்க பத்திரிகையாளரான டேவிட் பியூவெல் சபாபதி (டி.பி.எஸ்) ஜெயராஜ் இலங்கை ஆங்கில நாடேளுகளில் பல கட்டுரைகளை எழுதி
வருகிறார். அவற்றை தமிழில் மொழிபெயர்த்து மூத்த
தமிழ் பத்திரிகையாளரும் தினக்குரல் பத்திரிகை பிரதம ஆசிரியருமான வீரகத்தி தனபாலசிங்கம்
இலங்கையின் முன்னணி தமிழ் நாடேளான வீரகேசரியில் பிரசுரித்தார்.
தனபாலசிங்கம் அவற்றில் ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பை “அரசியல் அதிகாரத்தின் வர்க்க
மாற்றம்” என்ற தலைப்பில் புத்தகமாக குமரன் புத்தக இல்லம் பிரசுரமாக இந்தியாவிலும் இலங்கையிலும்
வெளியிட்டுள்ளார்.
இந்த புத்தகத்தில் உள்ள முதல் கட்டுரை “அநுர திசாநாயக்க இலங்கை வானில் ‘இடதுசாரி
நட்சத்திரம்” ஏ.கே.டியின் எளிய குடும்ப பின்னணியையும், ஜே.வி.பியில் அவரது அரசியல்
பிரவேசத்தையும் புரிந்து கொள்ள உதவுகிறது. ஆனால், இந்த கட்டுரையின் தலைப்பின் படி அநுரவின்
வெற்றியை சீனாவில் மாசேதுங் தோன்றியதற்கு ஈடாக பார்க்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
கடந்த காலங்களில் ‘இந்திய எதிரி’, ‘தமிழர் எதிரி’,‘மார்க்கசீய பயங்கரவாதி’ ஆகிய
மகுடங்களை ஏ.கே.டிக்கு எதிரிகள் சூட்டியுள்ளார்கள். ஆனால், கடந்த ஏழு மாதங்களில் சமயோசித
அரசியலுக்கு எடுத்துக்காட்டாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி (Executive President) பதவியில்
ஏ,கே.டி செயல்பட்டு வருகிறார். இருந்தாலும் ஜெயராஜ் அளித்துள்ள ‘இலங்கையின் மாசேதுங்’
மகுடம் ஏ.கே.டி-க்கு பொருந்துமா என்பதை இலங்கை மக்கள்தான் வருங்கால தேர்வுகளில் முடிவு
செய்ய வேண்டும். ஏனெனில், இலங்கை அரசியல் சரித்திரத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்திய
தலைவர்கள் தற்போது காணாமல் போயிருக்கிறார்கள் என்பதே யதார்த்தம். இதற்கு கோத்தாபய ராஜபக்ச
முக்கிய உதாரணமாக திகழ்கிறார்.
இரண்டாம் கட்டுரை ஜே.வி.பி-யில் அநுரவின் வளர்ச்சியைப் பற்றியது. ஜே.வி.பி 1980-90
காலகட்ட கிளர்ச்சியின் போது ரணசிங்க பிரேமதாசா அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு ஜே.வி.பியின்
தலைவர்களை அழித்த போது சோமவன்ச அமரசிங்க தலைமையில் அநுர எவ்வாறு ஜேவிபியை மீண்டும்
உயிர்ப்பிக்க செயல்பட்டார் என விளக்குகிறது. இதில் சோமவன்சவின் தலைமையில் ஏ.கே.டி யதார்த்த
வாதியாக செயல்பட்டதற்கு உதாரணங்கள் உள்ளன.
கட்டுரைகள் மூன்றும் நான்கும் ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின்
வளர்ச்சியில் ஏ.கே.டியின் பங்கை விரிவிக்கின்றன. முக்கியமாக 2014-ல் ஜே.வி.பியின் தலைவராக
அநுர தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தலைமையில் ஜே.வி.பி 2015 எதிர்கொண்ட ஜனாதிபதி மற்றும்
பாராளுமன்ற தேர்தல்களில் மகிந்த ராஜபக்ச தோல்வியுற அநுர எவ்வாறு செயல்பட்டார் என்பதை
புரிந்து கொள்ள உதவுகிறது.
ஐந்தாம் கட்டுரை தலைப்புக்கு ஏற்றபடி 2024 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி காணலாம் என்பதை
அநுர எவ்வாறு உணர்ந்தார் என விளக்குகிறது. ஜே.வி.பியில் உள்ள அநுர எதிர்ப்பின் பின்னணியையும்
ஜே.வி.பி-தேசிய மக்கள் சக்தி உறவுகளில் அந்த காலகட்டத்தில் இருந்த உரசல்களையும் புரிந்து
கொள்ள இந்த கட்டுரைகள் உதவும். எவ்வாறு பாசில் ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
அடிப்படை செயல்பாடுகளை தேசிய மக்கள் சக்தி உணர்ந்து கொண்டு அடிப்படை பலத்தை வளர்த்துக்
கொண்டது என்பதையும் அறியலாம். ஆறாம் கட்டுரை அறகலய கிளர்ச்சிக்கு பின் விக்கிரம சிங்க
இடைக்கால அதிபர் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காலத்தில் அநுர தலைமையில் ஜேவிபி-தேசிய
மக்கள் சக்தி கூட்டணி எப்படி மக்களை தனது பக்கம் திசை திருப்ப செயற்பட்டது என்பதை விளக்குகிறது.
என்னை பொருத்தவரை, இந்த புத்தகத்தில் வடக்கு மாகாணத்தில் அநுரவுக்கு அளித்த தமிழர்
ஆதரவை அலசும் கட்டுரைகளான 7 மற்றும் 9 மிக
முக்கியமானவை. அவை தேசிய மக்கள் சக்தி சற்றும் எதிர்பாராத விதமாக பாராளுமன்றத்தில்
மூன்று ஆசனங்களை கைப்பற்றியதை புரிந்து கொள்ள உதவுகிறது. அதுபோலவே கட்டுரை 8 கிழக்கு
மாகாணத்தில் தமிழரசு கட்சியின் வெற்றியை விமர்சிக்கிறது.
இந்த புத்தகத்தை உலகெங்கும் வாழும் தமிழர்கள் படித்து தெளிவு பெறுவர் என்று நம்புகிறேன்.
ஏனெனில் அவர்கள்தான் இலங்கைத் தமிழர்கள் உய்த்து வர உதவுகிறார்கள். இலங்கையிலும் தெற்காசிய
உபகண்டத்திலும் அரசியல் மற்றும் சர்வதேச சூழ்நிலைகள் மாறிவருகின்றன. இத்தகைய சூழலில்,
இலங்கையில் ஏற்பட்டுள் மாற்றங்களை உணர இப்புத்தகம் மிகவும் உதவும் என்பதில் ஐயமில்லை.
No comments:
Post a Comment