Sunday, 14 June 2020

இந்திய-சீன எல்லை இழுபறி முடிந்ததா இல்லையா?


 கர்னல் ஆர் ஹரிஹரன்

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக லடாக்-திபெத் எல்லையில் இந்தியப் படையினருக்கும் சீன ராணுவத்தினருக்கும் இடையே தொடர்ந்து வந்த போர் மூளும் பதட்ட நிலை, படிப்படியாக வரும் நாட்களில் குறைந்து வரும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. 

இரு நாட்டின் ராணுவங்களின் தென் திபெத் - லடாக் பகுதிகளுக்கான ராணுவத் தலைவர்கள் எல்லையில் சுஷூல்-மோடோ என்ற இடத்தில் நேரடியாக சென்ற வாரம் சந்தித்து பல மணி நேரங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தொடர்ந்து இருநாடுகளின் அந்தப் பகுதி ராணுவத் தளபதிகளின் இடையே ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தைகள்  மே 13-ந் தேதி முடிந்தாலும், பிரச்சினை தீரவில்லை. பேச்சுவார்த்தைகள் இன்னமும் தொடரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஆகவே இதுவரை நடத்திய பேச்சு வார்த்தைகளின் பயனாக இரு நாட்டு ராணுவங்களும் போர் மூளக்கூடிய அபாயத்தைத் தாற்காலிகமாக தவிர்க்க எல்லையில் நான்கு இடங்களில் நேர்-எதிராக நின்ற இரு நாட்டின் படைகளும் எல்லையிலிருந்து 2-3 கி. மீ. பின்னே தள்ளி நிற்கிறார்கள்.  ஆனால் இந்தியவுக்கு சொந்தமான பங்காங் ட்சோ ஏரியின் வடக்குக் கரையில் சீன ஆக்கிரமிப்பில் உள்ள ஒரு பாதியிலிருந்து படைகளை பின்னெடுக்க சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த தீராத சிக்கல் இம்முறை தொடர்ந்த உயர் மட்டப் பேச்சு வார்த்தைகளில் தீர்ந்தாலும், சீனா இந்திய எல்லையில் இன்னொரு பிரச்சினையை உண்டாக்காது என்ற நிச்சயம்  கிடையாது. ஏனெனில் சீனாவின் பேச்சுக்கும் செயல் பாட்டுக்கும் பெரும் இடைவெளி எப்போதுமே உண்டு என்று இந்தியாவின் கடந்த கால அனுபவம் சொல்கிறது.  

இந்திய ராணுவம் லடாக் பகுதியில் மட்டும் அல்லாமல் வடகிழக்கு எல்லையில் சிக்கிம் மற்றும் அருணாசல் பகுதிகளில் போருக்கான முன்னிலை அணிகளை அவர்களுக்கு வரையறுக்கப்பட்ட இடங்களில் தயார் நிலையில் வைத்துள்ளது. லடாக்கில் மட்டும் 12000 இந்தியப் படைகள் குவிந்துள்ளனர். அதுபோலவே சீனப்படைகளும் தயார் நிலையில் உள்ளனர். இரு நாட்டு விமானப் படைகளும் முன்னெச்சரிகை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஆகவே இரு தரப்பிலும் போர்மூளும் ஆபத்து ஒரளவு கிடப்பில் போடப்பட்டாலும், போர் மூண்டால் அதை உடனடியாக எதிர் கொள்ளும் தயார் நிலையில்  போர்ப்படைகள் உள்ளன என்பதே யதார்த்தம்.  இது எல்லையில் நிலவிய பதட்ட நிலை இதுவரை முழுமையாகத்  தீர்க்கப் படவில்லை என்பதையே காட்டுகிறது.  

இந்திய சீன வெளியுறவு அமைப்புக்களும் எல்லைச் சிக்கலைப் பற்றிய தற்போதைய தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர். சீன வெளியுறவத் தொடர்பாளர் "என்னால் கூற முடிந்தது, இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் ராணுவ அமைப்புகள் எல்லைப் பிரச்சினை சம்பந்தமாக தொடர்பை நீடித்து வருகின்றனர்" என்று கூறியுள்ளார். அவர் எல்லையில் பதட்ட நிலை தீர்ந்தது என்பதைத் தெளிவாகக் கூறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இந்தியாவைப் பொருத்தவரை, சீனாவின் அடிப்படை எண்ணம் அதிபர் ஷூ ஜிங்பிங் சீனாவின் பொருளாதார மற்றும் படைப்பலச் செல்வாக்கை உலக அளிவில் பரப்ப மேற்கொண்டிருக்கும் முயற்சிகளுக்கு இந்தியா தடையாய் இருக்க கூடாது  ன்பதே. இதற்காக, தெற்காசியாவிலும் இந்தியப் பெருங்கடலிலும் சீனா எடுத்திருக்கும் முயற்சிகளை ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், இந்தியா சார்ந்த இரு சீனக் குறிக்கோள்கள் தெளிவாகின்றன.

ஒன்று – இந்திய - சீன பொருளாதார மற்றும் வியாபார உறவுகளுக்கு குந்தகம் விளைவிக்காமல், இந்தியாவுடன் எல்லைப் பிரச்சினைக்கு முடிவு காணாமால், எல்லையில் அவ்வப்போது இழுபறி நிலையை உண்டாக்கி இந்தியப்  படைகளை முடக்கி வைப்பது;  இது இந்தியாவுக்கு எதிரான சீன-பாகிஸ்தான் பாதுகாப்பு வளையத்துக்கு மறைமுகமாக ஆதாயம் தரும்.

இரண்டு – இந்தோ பசிபிக் என்று கூறப்படும் கிழக்கு மற்றும் தெற்காசியப் பகுதிளிலும், இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் இந்தியாவின் கலாச்சார, பொருளாதார, மற்றும் பாதுகாப்புத் திறனைக் குறைக்க அதன் அண்டை நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தை அதிகரித்தல்.  

இதற்கு உதாரணங்களாக அண்மையில் நடந்த இரு நிகழ்வுகளைக் கூறலாம். இந்திய-சீன எல்லை இழுபறியும், கொரோனா வைரஸ்  அழுத்தம் அதிகரிக்கும்  சூழ்நிலையில் பாகிஸ்தானில் உள்ள சீன தூதரக ஊடகத் தொடர்பாளர் வாங் ஷியாங் ஃபென் ஒரு ட்விட்டர் பதிவு செய்துள்ளார்.  அது இந்திய-சீன எல்லைப் பிரச்சினையின் பின்னணியில் சீனாவின் மற்றொரு முகத்தை காட்டுகிறது. அதில் அவர் இந்தியா “தன்னிச்சையாக” காஷ்மீரின் நிலைப்பாட்டை மாற்ற எடுத்த முடிவும் [இந்தியா சென்ற ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்ததையும் அந்த மாநிலத்துக்கு விசேஷ சலுகை அளித்த அரசியல் சட்டப் பிரிவு 370 நீக்கியதையும் குறிப்பிட்டு], அதைத் தொடர்ந்து “அப்பகுதியில் நிலவும் பதட்ட நிலை” சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் ஆளுமைக்கு சவாலாக உள்ளன என்று கூறியுள்ளார். மேலும் இதனால் சீன-இந்திய உறவும் மற்றும் இந்திய-பாகிஸ்தான் உறவும் பாதிக்கப் பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இரண்டாவதாக, இந்திய-சீன எல்லை இழுபறி உச்ச நிலையில் உள்ள போது இந்தியாவுடன் விசேஷ நேச உறவு கொண்ட நேபாளப் பிரதமர் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்திய-நேபாள எல்லைப் பிரச்சினையைத் தட்டி  எழுப்பியுள்ளார். இப்பிரச்சினையில் நேபாளத்தின் வட மேற்கு முனையில் மகா-காளி நதியின் போக்கே இந்திய, சீன நேபாள முச்சந்தி எல்லையை நிச்சயிக்கிறது. அந்தப் பகுதி வழியாக கைலாஸ்  மானசரோவர் யாத்திரிகர் எளிதாக பயணிக்க இந்தியா சாலை அமைத்துள்ளது நேபாளத்துக்குத் தெரியும். இந்தியா அதைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று ஏற்கனவே கூறியுள்ளது. இருந்த போதிலும் நேபாளப் பிரதமர் ஓளி நேபாளச்சட்ட அமைப்பில் நாட்டின் வரைபடத்தில் இப்பகுதியை இணைக்க சட்டத் திருத்த மசோதாவை நேபாள் பாராளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளார். இதனால் நேபாளப் பிரதமர் இந்தப் பிரச்சினையைத் தற்போது எழுப்பியதன் உள் நோக்கம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. நேபாளத்​​தில் ஆளும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சீனாவுக்கும் நெருங்கிய உறவு உள்ளது என்று‌ம் அதன் உட்கட்சிப் பூசலில் சீனா தூதர் தலையிட்டு  பேசியதாகவு‌ம் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. ஏற்கனவே பாதுகாப்பு உள்பட நேபாளம் சீனாவுடனான பன்முக உறவுகளைப் பலப்படுத்தியுள்ள சூழ்நிலையில் வருங்காலத்தில் இந்திய-நேபாள உறவில் இதன் தாக்கம் வெளிப்படலாம்.

இந்த இரு நிகழ்வுகள், இந்திய எல்லைப் பிரச்சினையில் இந்தியாவின் அண்டை நாடுகளையும் ஈடுபடுத்தும் சீனாவின் முயற்சி என்றே தோன்றுகிறது.  சீனாவின் இத்தகைய முயற்சிகளால் இந்தியப் பாதுகாப்பு மட்டுமல்லாமல் வெளியுறவு, பொருளாதார வளர்ச்சி மற்றும் பன்னாட்டு வணிகம் ஆகிய துறைகளிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும்.  

ஆகவே இந்திய-சீன எல்லை இழுபறி முடிந்ததா என்ற கேள்விக்கு, விடையளிக்க இந்திய எல்லைப் பிரச்சினை தீர்க்க சீனா தயாரா என்ற பதில் கேள்வி கேட்கலாம். அதற்கான சர்வதேச சூழ்நிலை தற்போது இல்லை என்றே தோன்றுகிறது.

இந்திய சீன எல்லைப் பிரச்சினையை தினத்தந்தியில் 1960-ல் தொடங்கி பல தசாப்தங்கள் வெளியிடப்பட்ட கன்னித் தீவு கார்டூன் சீரியலுக்கு ஒப்பிடலாம். கன்னித்தீவின் கதாநாயகி ஒவ்வொரு நாளும் திடீர் அபாயங்களை சந்திப்பாள். அது போல நமது எல்லைப் பிரச்சினையும் அவ்வப்போது சீனா தோற்றுவிக்கும் புதுப்புது அழுத்தங்களை தொடர்ந்து எதிர் கொள்ளும் என்பது என் அனுமானம்.

அதை சமாளிக்க ஒவ்வொரு இந்தியனும் உட்பூசலையும் கட்சி அரசியலையும் மறந்து ஒருங்கிணை வேண்டும். இதை நமது தலைவர்கள் புரிந்து கொள்வார்களா என்பது கேள்விக்குறியே.

கர்னல் ஹரிஹரன் முன்னாள் ராணுவ நுண்ணறிவுத் துறையில் பணியாற்றியவர். தற்போது சென்னை சீன ஆய்வு மையத்தில் பங்கேற்பவர்.

No comments: