Monday, 22 June 2020

நேபாள எல்லையில் ஏன் இந்தத் தொல்லை?



கர்னல் ஆர் ஹரிஹரன் | தினமலர் | ஞாயிறு 21-06-2020

லடாக்கில் இந்திய - சீன எல்லைப் பகுதியில், மே 15 இரவு நடந்த மோதலில், 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த பின், போர் மூளும் அபாய சூழ்நிலை இன்னமும் முற்றும் விலகவில்லை. பேச்சுவார்த்தை உயர்மட்டத்தில் தொடர்ந்தாலும், இந்தியப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு தனக்கே சொந்தம் என்று சீனா தொடர்ந்து கூறுவதால், பிரச்னை எளிதாக முடிவதாகத் தெரியவில்லை.

இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவுடன் தொப்புள் கொடி உறவு கொண்ட நாடான நேபாளம், இந்திய - நேபாள உறவில் ஒரு புதிய நெருக்கடியை தோற்றுவித்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில், 372 சதுர கி.மீ., அளவு கொண்ட லிபுலேக் - காலாபானி - லிம்பியதாரா பகுதியை, நேபாளத்தின் வடமேற்கு கோணத்தின் பகுதியாக காட்டும் வரைபடத்தை, பார்லிமென்ட் ஏகமனதாக அங்கீகரித்துள்ளது; அதற்கான சட்டத் திருத்தமும் செய்யப்பட்டுள்ளது. இது, நேபாளத்தை ஆளும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரதமர், கே.பி.ஷர்மா ஒளி முன்னின்று எடுத்த முயற்சியின் விளைவாகும்.

கரும்புள்ளி

இந்திய - சீன எல்லையில், மோதல் ஏற்பட்டு, போர் அபாயச் சூழ்நிலை நிலவும்போது, இந்தியாவின் மீது அழுத்தங்கள் அதிகரிக்கும். இந்த எல்லைப் பிரச்னையை நேபாள பிரதமர் ஷர்மா ஒளி, சீனாவுக்கு ஆதரவாக எடுத்துள்ளாரா? இந்திய - நேபாள எல்லையை ஒட்டுமொத்தமாக வரையறுக்க இரு நாடுகளும், 1981ல் ஒருங்கிணைந்த ஒரு செயற்குழுவை உருவாக்கின. அந்தக் குழு, 2007ல் காலாபானி மற்றும் சிஸ்தா என்ற இரு எல்லைப் பகுதிகளைத் தவிர, மற்ற எல்லைப் பகுதிகளைக் காட்டும் வரைபடத்தை தயார் செய்துள்ளது. ஆனால், இரு நாடுகளும் அதை ஒப்புக் கொண்டதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இன்னமும் செய்யவில்லை.ஆகவே தான், காலாபானி எல்லைப் பிரச்னை அவ்வப்போது இந்திய - நேபாள உறவை தொடர்ந்து பாதிக்கும் ஒரு கரும்புள்ளி என்று கூறலாம். கடந்த, 200 ஆண்டுகளுக்கு மேலாகவே ஒட்டு மொத்தமாக காலாபானி என்று அழைக்கப்படும் லிபுலேக் - காலாபானி - லிம்பியதாரா பகுதி, இந்திய ஆளுமையின் கீழ் இருந்து வருகிறது.

இந்தியாவில், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் ஆரம்ப காலத்தில் நிகழ்ந்த, முதலாம் ஆங்கில - நேபாள போரில், நேபாளம் தோல்வி அடைந்தது.அதைத் தொடர்ந்து, 1816ம் ஆண்டு மார்ச் மாதம் நேபாளம், இந்தியாவை ஆண்ட ஆங்கில அரசுடன் கையெழுத்திட்ட சுகாலி ஒப்பந்தத்திற்கு பின், ஒட்டுமொத்தமாக காலாபானி என்று அழைக்கப்படும் பகுதி, இந்தியாவின் ஆளுமையின் கீழ் வந்தது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், நேபாள எல்லையான காலாபானி நதியின் கிழக்கே உள்ள பகுதிகள் நேபாளத்துக்கு சொந்தமானவை.

நேபாளத்தின் வாதத்தின் அடிப்படையே காலாபானி நதியின் மூலத்தை, ஆங்கிலேயர் காலத்து வரைபடங்களில் லிம்பியதாராவில் காட்டாமல், தவறாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து திபெத்தில் உள்ள கைலாச - மானசரோவர் செல்லும் யாத்திரிகர்கள், பல ஆண்டுகளாக இந்தப் பாதையை உபயோகித்து வந்தனர்.திபெத் எல்லையில் உள்ள லிபுலேக் கணவாயைக் கடந்து தான், மானசரோவர் வழியாக அவர்கள் கைலாசம் செல்வர். இந்த வழியே தான் திபெத்துடன், இந்திய மற்றும் நேபாள வணிகமும் நெடுங்காலமாக நடத்தப்பட்டு வருகிறது.இந்த வணிகத்தை ஊக்குவிக்க, 2015ல் இந்தியாவும், சீனாவும் லிபுலேக் கணவாய் வழியாக நடக்கும் வணிகத்துக்காக ஒப்பந்தம் செய்தபோது, நேபாள பார்லிமென்ட், அது நேபாளத்துக்கு சொந்தமான பகுதி என்று கூறி, அந்த ஒப்பந்தத்தை எதிர்த்தது; இந்திய எல்லைப் படைகளை அங்கிருந்து விலக்குமாறு கேட்டுக் கொண்டது.

விசேஷமானது

யாத்திரிகர் பயணிக்க வசதியாக, எல்லையோரமாக லிபுலேக் கணவாய்க்கு புதிய பாதையை இந்தியா துவக்கிய, 10 நாட்களுக்குப் பின், அதற்கு நேபாளத்தின் எதிர்ப்பு வலுத்தது. அங்கே நேபாள அரசு நேபாள எல்லைப் போலீஸ் படையை அனுப்பியுள்ளது.அதைத் தொடர்ந்து, நேபாள ஜனாதிபதி பித்யாதேவி பண்டாரி, நேபாள எல்லையில் புதிதாக, 500 எல்லைச் சாவடிகளைத் துவக்குவதாக, அரசின் வருடாந்திரக் கொள்கையில் அறிவித்துள்ளார்.

அவற்றில், 1 டஜன் சாவடிகள் மட்டுமே சீன எல்லையில் ஏற்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோலவே, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு - காஷ்மீர், லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்களாக வரையுறுத்த பின், சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் அந்த மாறுதலைக் காட்டும் புதிய வரைபடத்தை, இந்தியா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இந்த வரைபடத்தில், காலாபானி பகுதி இந்தியாவின் பகுதியாக காட்டியிருப்பதற்கு, நேபாளம் தன் எதிர்ப்பை வெளியுறவு அமைச்சகம் வாயிலாகத் தெரிவித்தது. இதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர், புதிய வரைபடத்தில் நேபாள எல்லையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.சரித்திரத்தாலும், கலாசாரத்தாலும், மதத்தாலும் ஒருங்கிணைந்த இந்திய -- நேபாள உறவு விசேஷமானது.

அதற்கேற்றதுபோல், 1950ல் இரு நாடுகளும் கையெழுத்திட்ட உடன்படிக்கை படி, நேபாள மக்களுக்கு இந்தியாவில் பயணிக்கவும், தங்கு தடையின்றி கல்வியகங்களிலும் இந்திய அரசாங்க வேலை உள்ளிட்டவற்றிலும் பங்கு பெற வழிவகுத்தது. ஏறக்குறைய, 60 லட்சம்அதற்கேற்றதுபோல், 1950ல் இரு நாடுகளும் கையெழுத்திட்ட உடன்படிக்கை படி, நேபாள மக்களுக்கு இந்தியாவில் பயணிக்கவும், தங்கு தடையின்றி கல்வியகங்களிலும் இந்திய அரசாங்க வேலை உள்ளிட்டவற்றிலும் பங்கு பெற வழிவகுத்தது. ஏறக்குறைய, 60 லட்சம் நேபாளிகள் இந்தியாவில் பணியாற்றுகின்றனர். அதுபோலவே, ஆறு லட்சம் இந்தியர்கள் நேபாளத்தில் பணியாற்றுகின்றனர். இந்திய ராணுவப் படைகளில், 40 ஆயிரம் நேபாளிகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்திய ராணுவத்திலிருந்து விடுப்பு பெற்ற, 80 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்கள் நம் நாடு எதிர்கொண்ட போர்களில் காட்டிய வீரமும், செய்த தியாகங்களும் ஈடு இணையில்லாதது.


இவர்களைத் தவிர, ராணுவத்தில் பணியாற்றிய 11 ஆயிரம் வீரர்களின் விதவைகளும், அசாம் ரைபிள் படையில் பணியாற்றிய, 12 ஆயிரம் வீரர்களும் நேபாளத்தில் வசிக்கின்றனர். அவர்களுக்கு இந்தியா ஆண்டு ஒன்றுக்கு, 12 பில்லியன் டாலர் விடுப்புத்தொகை அளிக்கிறது. இது, நேபாளத்தின் வெளிநாட்டு வருமானத்தில் ஏறக்குறைய ஐந்தில் ஒரு பகுதியாகும். இரு நாடுகளுக்கும் இடையே பலத்த வணிக உறவுகள் உள்ளன. இரு நாட்டு வணிகத்தின் மதிப்பு, 2018 - 19ல், 5 லட்சத்து, 47 ஆயிரத்து, 858 கோடி ரூபாயை எட்டியுள்ளது.

நேபாளத்தின் வணிகத்தில் இந்திய முதலீடு, 100ல், 40 பங்காகும். நேபாளத்தின் உதவிக்காக, 2019 - 20 பட்ஜெட்டில், 1,200 கோடி ரூபாயை இந்தியா ஒதுக்கியுள்ளது. அதைத் தவிர இந்தியா, 1.65 பில்லியன் டாலர், நேபாளத்தில் நிலநடுக்கம் காரணமாக அழிந்த சாலைகளை அமைக்க வளர்ச்சிப் பணிக்கு ஒதுக்கியுள்ளது.அப்படி இருந்தும், ஏன் இந்தியாவை எதிர்த்து காழ்ப்புணர்ச்சி நேபாளத்தில் அதிகரிக்கிறது. இதற்கு அரசியல் மற்றும் கலாசாரப் பின்னணி உள்ளது.

நேபாளத்தில் மன்னராட்சி முடிந்த பின், குடியுரிமைச் சட்டம் வரையறுக்க, எட்டு ஆண்டுகளுக்கு மேலாகின. கடந்த, 2015ல் வரையறுக்கப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில், அதிருப்தி கொண்ட இந்தியாவை ஒட்டிய தென்பகுதியில் வசிக்கும் தாரு, ஜன்ஜாதி மற்றும் மாதேசி என்ற சிறுபான்மை மக்கள், இந்திய எல்லையிலிருந்து வரும் அத்தியாவசியப் பொருட்களை தடுத்து நிறுத்தினர். இதனால், நேபாளத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட, இந்தியாவின் மீது காழ்ப்புணர்ச்சியும் பெருகியது.அப்போது துவங்கிய இந்திய எதிர்ப்புணர்ச்சியை, தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறார், நேபாள பிரதமர் ஷர்மா ஒளி. அந்தச் சூழ்நிலையை சீனா பயன்படுத்தி, நேபாளத்துடனான தொடர்பை வலுப்படுத்தியது.

சந்தேகம்

ஊடகங்களின்படி, நேபாளத்தில் உள்ள சீன துாதர், நேபாளத்தின் ஆட்சியில் உள்ள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உட்பூசலில் தலையிட்டு, தீர்வு கண்டு உதவியதாகத் தெரிகிறது.தற்போது பிரதமர் ஷர்மா ஒளியின் சீனாவுக்கு சாதகமான செயல்களுக்கு, பெரும்பான்மை நேபாள மக்கள் ஆதரவு தருவரா என்பது சந்தேகமே. இத்தகைய சூழ்நிலையில் இந்திய மக்கள், நேபாள எதிர்ப்பு கூச்சல்களை எழுப்பாமல், தொடர்ந்து சீனாவின் திரைமறைவுச் சூழ்ச்சிகளை புரிந்து, நோபாளத்தின் நல்லிணக்கத்தை இழக்காமல் செயல்படுவது அவசியம். விரைவில், நேபாள - இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் உயர்மட்டத்தில் தொடர்பு கொண்டு, பரிவுடன் பிரச்னைகளைத் தீர்க்க வழிகோலுவர் என்பது நிச்சயம்.

கர்னல் ஆர்.ஹரிஹரன் ராணுவ நுண்ணறிவுத் துறையில், 30 ஆண்டு அனுபவம் பெற்றவர். தெற்காசிய நாடுகள் மற்றும் சீனாவின் நிகழ்வுகளை ஆய்பவர். haridirect@gmail.com



No comments: