Sunday, 28 June 2020

எல்லை மீறும் சீனாவின் இரட்டை வேடம்!


கர்னல் ஆர் ஹரிஹரன் | தினமலர் | 26-06-2020


பா லுக்கும் காவல், பூனைக்கும் தோழன்' என்று ஒரு பழமொழி உண்டு. அது லடாக் எல்லையில் இந்திய- - சீன ராணுவங்களுக்கு இடையே தொடரும் இழுபறியில், சீனாவின் நிலைப்பாட்டுக்கு மிகவும் பொருந்தும்.

லடாக் எல்லையில், கல்வான் பகுதியில், மே 15-ல், 20 இந்திய வீரர்களின் உயிரைக் குடித்த, சீன ராணுவத்துடன் நிகழ்ந்த கைகலப்புக்குப் பின், இந்த மாதம் ஜூன் 7ல் தொடர்ந்த உயர்மட்ட ராணுவ பேச்சில், இரு தரப்பும் தங்கள் படைகளை சர்ச்சைக்குரிய பகுதிகளிலிருந்து விலக்க ஒப்புக் கொண்டதாக செய்திகள் வெளியாகின.இரு தரப்பும் படைக்குவிப்பை விலக்கினரா என்பதை, மற்ற தரப்பு உறுதி செய்வதற்கான வழிமுறைகள் வகுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

ஆனால், அதற்கான அறிகுறிகள் எதுவும், இன்று வரை தென்படவில்லை.இந்திய மற்றும் சீன வெளியுறவு அமைச்சர்கள், 17-ல் தொலைபேசி மூலம் நடத்திய பேச்சில், இருநாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்ற நிலையைக் குறைக்க, வழிமுறைகளைக் கண்டறிய ஒப்புக் கொண்டனர். ஊடகச் செய்திகளின்படி, 22-ல் ராணுவத் தலைவர்கள் உயர்மட்ட பேச்சில், 15-ம் தேதிக்கு முன், சீனப் படைகள் எங்கிருந்தனவோ, அந்த இடத்திற்கே செல்லும்படி, இந்தியா வலியுறுத்தியது.

முக்கியமாக சீனப் படைகள் தற்போது நிலைகொண்டுள்ள, பாங்காங் ட்சோ ஏரியின் வடக்கு கரையில், சர்ச்சைக்குரிய, பிங்கர் 4 முதல், 8 வரையிலான பகுதியை, உடனே காலி செய்யுமாறு, இந்தியா கூறியது.மேலும் கிழக்கு லடாக் எல்லையில், முக்கிய பாதுகாப்பு இலக்குகளான கல்வான், கோக்ரா- ஹாட்ஸ்ப்ரிங், டெப்சாங் மற்றும் சுஷூல் ஆகிய பகுதிகளை அச்சுறுத்தும், சீன ராணுவப் படைக்குவிப்பை விலக்குமாறும், சீனாவுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், சீன ராணுவத்தின் நடத்தை, அதற்கு நேர் மாறாக உள்ளது. பன்னாட்டு செய்தி நிறுவனம், கடந்த, 22ல் வெளியிட்ட சாட்டிலைட் புகைப்படங்கள், கைகலப்பு நிகழ்ந்த கல்வான் பகுதியின் அருகே, சீனத் தளங்களிலும், படைக்குவிப்பிலும் எந்த மாற்றமும் இல்லை என்றும், போருக்கான தயார் நிலையில் அவை உள்ளதாகவும் கூறியுள்ளது.

கோக்ரா- ஹாட்ஸ்ப்ரிங், டெப்சாங் பகுதிகளிலும் படைக்குவிப்பில் எந்த மாற்றமும் இல்லை; பங்காங் ட்சோவிலும் அதே நிலைதான்.இதற்கு முக்கிய காரணம், சீன வெளியுறவுத் துறை, கல்வான் பள்ளத்தாக்குப் பகுதி சீனாவுக்கே சொந்தம் என்றும், மே 15-ல் நடந்த கைகலப்புக்கு, இந்தியப் படைகள் கல்வான் பகுதியில், எல்லையைக் கடந்து தாக்குதல் நடத்தியது தான் காரணம் என்றும் கூறி வருவதே ஆகும். இந்தியாவில் உள்ள சீன துாதர் சுன் வெய்டாங் அளித்த பேட்டியிலும், அதே நிலைப்பாட்டை மேற்கொண்டார்.

இந்திய அரசுக்கு அவர் அளித்த வேண்டுகோளில், கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா தற்போது உள்ள, திடமான நிலையைக் குலைக்க எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்தால், இந்தியாவுடன் சேர்ந்து தற்போதுள்ள நிலையைத் தக்க வைக்க, சீனா தயார் என்றும் கூறியுள்ளார்.இந்திய வெளியுறவுத் துறை செய்தியாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தற்போதைய இழுபறி நிலைக்கு அடிப்படை காரணமே, மேமாதத்திலிருந்து, சீனத் தரப்பு பெருமளவில் ராணுவத்தையும், ஆயுதங்களையும் எல்லையில் குவித்தது தான்' என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், புதிதாக கல்வான் பள்ளத் தாக்குக்கு சீனா சொந்தம் கொண்டாடுவதும் பதற்ற நிலை தொடரக் காரணம் என்றும் கூறியுள்ளார்.இது, 1993-ல் இந்திய- - சீன நாடுகள் செய்துள்ள ஒப்பந்தங்களுக்கு எதிரான செயல் என்றும், சீனாவின் செயல்களுக்குப் பிறகே, இந்தியா, வேறு வழியில்லாமல் தன் படைகளை அந்தப் பகுதிகளுக்கு அனுப்பியது என்றும் கூறியுள்ளார். தற்போது கல்வான் மற்றும் டெப்சாங் பகுதிகளில், இரு ராணுவங்களும் பெரும் அளவில் தொடர்ந்து தங்கி இருந்தாலும், இரு தரப்பும் மேற்கொண்டுள்ள ராணுவ மற்றும் வெளியுறவுத் துறைத் தொடர்புகள் நீடிப்பதாகவும் கூறியுள்ளார். கடந்த, 23ல் இரு நாடுகளின் வெளியுறவுத் துறை பிரதிநிதிகளிடையே, இந்திய - சீன எல்லை விவகார செயல் முறைக் கலந்தாய்வு நடந்தது, முக்கியமான முன்னேற்றம் என்றும் கூறியுள்ளார்.

இரு தரப்பிலும் போருக்கான ஆயத்தங்கள் தொடர்கின்றன. இந்தியத் தரப்பில் சுகாய் -30, மிக் -29 மற்றும் ஜாகுவார் போர் விமானங்கள், முன்னிலை விமான தளங்களில் செயல்பட தயார் நிலையில் நிறுத்தப் பட்டிருக்கின்றன. இந்திய - திபெத் எல்லை படைப் பிரிவுகள், ராணுவத்துக்கு உதவியாக இயங்க, அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியப் படைகள், லடாக் மட்டுமல்லாமல் எல்லா சீன எல்லைகளிலும், முன்னிலையில் நிறுத்தப் பட்டுள்ளன.இந்திய விமானப் படை மற்றும் இஸ்ரேலிலிருந்து பெற்ற ஹெரான் ட்ரோன்கள், எல்லையை, தொடர்ந்து வேவு பார்த்து வருகின்றன. சீனத் தரப்பில் ஏற்கனவே, பயிற்சி என்ற பெயரில், ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்ட படைப்பிரிவுகள், போர் பயிற்சியில் ஈடுபடும் பிரசார வீடியோ காட்சிகள், சீன இணைய தளங்களில் தொடர்ந்து தென்படுகின்றன.
மே 15ல் நிகழ்ந்த இந்திய - சீன கைகலப்பின் விபரங்கள், ஊடக ஆய்வாளர்கள் வாயிலாக முன்னுக்குப் பின் முரணான விளக்கங்கள் இருந்தாலும் வெளிவந்துள்ளன. அதன்படி சீனத் தரப்பு, மே மாதம் நடந்த பேச்சு வார்த்தைகளில் ஒப்புக் கொண்டபடி, கல்வான் பிபி 14 என்ற இந்தியப் பகுதியில், தன் படைகளை, மே 14-ல் வாபஸ் வாங்கியது. ஆனால் அதே பகுதியில் அடுத்த நாளே, மீண்டும் படை முகாமை அமைத்தது தான், மோதலுக்கு அடிப்படைக் காரணம் என்று தெரிகிறது. அமெரிக்க செய்தி நிறுவனம் அளித்த விபரப்படி, சீன தரப்பிலும் ஒரு படைப்பிரிவுத் தலைமை அதிகாரி உட்பட பலர், கைகலப்பில் இறந்ததாகத் தெரிகிறது. ஆனால் சீனா இதுவரை, அதிகாரப் பூர்வமாக தன் ராணுவ இழப்புகளைப் பற்றிய செய்தியை வெளியிடவில்லை.

அடுத்த முறை அத்தகைய மோதல் நிகழுமா? மோதல் நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறைவே. ஆனால், அத்தகைய மோதல் நிகழ்ந்தால், அது போராக மாறும் சூழ்நிலை அதிகமாகியுள்ளது. ஏனெனில், கல்வான் தாக்குதலில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்துக்குப் பின், இந்திய அரசு, எல்லையில் உள்ள பாதுகாப்பு படைகள், ஆயுதங்களை உபயோகப்படுத்துவதின் மீதான தடையை நீக்கியுள்ளது. எல்லைப் படைகள், சூழ்நிலைக்கேற்ப தேவையான ஆயுதங்களை உபயோகிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

இந்தியாவின் இந்த அறிவிப்பு, சீனாவுக்கு பெரும் எரிச்சல் மூட்டியுள்ளது. இந்தியாவின் இந்த முடிவு, 1996 மற்றும் 2005 கையெழுத்தான இந்திய- - சீன உடன்பாடுகளை மீறும் செயல் என்று, சீன வெளியுறவு அமைச்சரகம் சுட்டிக் காட்டியுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான, 'குளோபல் டைம்ஸ் இந்தியா'வில், எல்லை மோதல் நிகழ்ந்த பிறகு, வளர்ந்து வரும் சீன எதிர்ப்பின் அழுத்தத்தால், சீனா, இந்தியாவுடன் அமைதியை விரும்பினாலும், போர் மூளும் சூழல் உருவாவதாக எச்சரித்துள்ளது.

அத்தகைய போருக்கு, சீனப் படைகள் தயாராக இருக்க வேண்டும் என்றும், அவர்கள் இந்தியாவுக்கு தக்க பாடம் புகட்டுவர் என்றும் கூறியுள்ளது.சீன ராணுவம், படை மற்றும் ஆயுத பலம் மிக்கது. ஆனால், தற்போது தயார் நிலையில் உள்ள இந்திய ராணுவம், 1962-ல் இருந்த ராணுவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. உலகிலேயே உயர் மட்ட மலைப் பகுதிகளில், போர் அனுபவம் அதிகம் பெற்றுள்ளது, இந்திய ராணுவமே. ராணுவத்தில், ஒரு பழமொழி உண்டு... 'கையில் துப்பாக்கி இருந்தால் போதாது; அது யார் கையில் இருக்கிறது என்பது முக்கியம்' என்று!அதன்படி, இந்திய ராணுவம், போர்முனைகளில் புடம் போட்ட ரகம். சீனப் படைகளுக்கு, போர் அனுபவம் குறைவு.

இது சீனர்களுக்குத் தெரிந்தாலும், நமக்குப் புரிய வேண்டும்.நம்மில் பலர், நம்மை நாமே குறைத்து எடை போடுகிறோம். அதனால் தான், நான் போரை வேண்டாவிட்டாலும், போர் நேரிட்டால், தயக்கமில்லாமல் தயார் நிலையில் இருப்பது நல்லது என்று கூறுவேன்!

கர்னல் ஆர்.ஹரிஹரன் haridirect@gmail.com இவர், ராணுவ நுண்ணறிவுத் துறையில், 30 ஆண்டு அனுபவம் பெற்றவர். தெற்காசிய நாடுகள் மற்றும் சீனாவின் நிகழ்வுகளை ஆய்பவர்.






No comments: