Wednesday, 29 July 2020

கோதபயாவின் மூன்று முகம்!

கர்னல் ஆர் ஹரிஹரன் | தினமலர் | 29-07-2020

https://m.dinamalar.com/detail.php?id=2584922

 

இலங்கையில், ஆக. 5ல், பார்லிமென்ட் தேர்தல் நடக்கவிருக்கிறது. முன் நடந்த தேர்தல்களிலிருந்து, இந்த தேர்தல் முற்றிலும் மாறுபட்டது.

முதல் காரணம், கொரோனா தாக்கத்தால், தேர்தல் தேதி ஏற்கனவே, இரண்டு முறை மாற்றப் பட்டது. அரசியல் கட்சிகள் நடத்தும் தேர்தல் கூட்டங்களுக்கும், வீதியோர சந்திப்புக்களுக்கும், தேர்தல் கமிஷன் பலத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்தல் நடத்தும் இடங்களில் அதிகாரிகளும், வாக்காளர்களும் கடைப்பிடிக்க வேண்டிய சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் போன்ற கட்டுப்பாடுகள், எவ்வாறு ஓட்டுப்பதிவை பாதிக்கும் என்பது கேள்விக் குறியாக உள்ளது.

இரண்டாவது, இலங்கை அரசியல் களத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ராஜபக்சே அரசியல் குடும்பத்தின், இலங்கை பொதுஜன முன்னணி கட்சி, நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளான, இலங்கை சுதந்திரா கட்சியையும், ஐக்கிய தேசிய கட்சியையும் ஓரங்கட்டி முன்னிலையில் நிற்கிறது. ராஜபக்சே கட்சியே, ஆட்சியை கைப்பற்றலாம் என்பதே, பலரின் எதிர்பார்ப்பு.

மூன்றாவது, அரசியலில் அதிகம் பங்கு பெறாத, கோதபய ராஜபக்சே, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், இந்த தேர்தல், அவர் எதிர் கொள்ளும் முக்கியமான அரசியல் சவாலாகும். இதுவே, அவரது அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்க போகிறது.

இலங்கை அரசியல் சட்டப்படி விகிதாசார ஓட்டளிப்பு முறையில், தேர்தல் நடத்தப்படும். ஒவ்வொரு வாக்காளருக்கும், இரண்டு ஓட்டுகள் உள்ளன. அதன்படி நாட்டில் உள்ள 162 லட்சத்துக்கு சற்று அதிகமான வாக்காளர்கள், 225- உறுப்பினர் கொண்ட பார்லிமென்டுக்கு, 196 உறுப்பினர்களை நேரடி ஓட்டளிப்பு மூலம் தேர்ந்தெடுப்பர்.

மீதி உள்ள 29 இடங்கள், வாக்காளர்கள் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக அளிக்கும் இரண்டாம் ஓட்டின் விகித அடிப்படையில், அரசியல் கட்சிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். கட்சிகள் ஏற்கனவே பட்டியலிட்டபடி, தமக்கு கிடைத்த இடங்களை நிரப்புவர்.


தேர்தல் குறிக்கோள்

இந்த தேர்தலில், அதிபர் கோதபய ராஜபக்சேயின் தேர்தல் குறிக்கோள் ஒன்றே; தன் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி கூட்டணி, ஒட்டு மொத்தமாக, மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் தான், அரசியல் சட்டத்தில் உள்ள, 19 மற்றும் 13ம் சட்டத் திருத்தங்களை அவர் விலக்க முடியும்.

இந்த, 19ம் சட்டத் திருத்தம், தன்னிச்சையாய் செயல்பட்டு வந்த, அதிபரின் செயல்முறை அதிகாரங்களை குறைத்து, அவற்றை பார்லிமென்டின் கட்டுப்பாட்டில் ஓரளவு கொண்டு வந்துள்ளது. இந்த திருத்தம், கடந்த இலங்கை அரசால் கொண்டு வரப்பட்டது. அதுபோல, 13ம் சட்டத் திருத்தம், சிறுபான்மையினருக்கு அதிகாரப் பங்கேற்பை அதிகரிக்க, மாநில கவுன்சில் அமைப்பை ஏற்படுத்தியது.

அது, 1987-ல், இந்தியா - -இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில், அப்போதைய அதிபர், ஜெயவர்த்தனேயால் உருவாக்கப்பட்டது. ஆகவே, கோதபயாவின் குறிக்கோள், வெற்றி பெற்றால், பலமான பார்லிமென்ட் பெரும் பான்மையின் உதவியுடன், ஜனாதிபதி இழந்த செயல் முறை அதிகாரங்களை மீட்கவும், மாநில கவுன்சில் அமைப்புகளை நீக்கிவிட்டு, கொழும்பு அரசின் கையை பலப்படுத்த, புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கவும் முயற்சி எடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

கோதபயாவின் அரசியல் முகம்

இப்போதைய அதிபர், இலங்கை ராணுவத்தில் கர்னலாக ஓய்வுபெற்ற, நந்தசேன கோதபயா, 71, மற்ற அரசியல் தலைவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர். ஏனெனில் அவர், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன், கட்சி அரசியலில் நாட்டம் காட்டவில்லை. ராணுவத்திலிருந்து விடுப்பு பெற்ற பின், அமெரிக்க குடிமகனாக மாறிய கோதபயா, அவர் அண்ணன் மகிந்தா, 2004-ல் அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்ட பின், நாடு திரும்பி, மகிந்தா அரசில், பாதுகாப்பு துறை செயலரானார்.


இப்போதைய அதிபர் கோதபயா, முந்தைய மகிந்தா ஆட்சியின் போது, பாதுகாப்பு துறை செயலராக செயல்பட்டார். அதனால், இலங்கை ராணுவம் நடத்திய, நான்காம் ஈழப்போரில் கண்ட வெற்றி, கோதபயாவுக்கு பெரும் புகழை அளித்தது. அதுவே, அதிபர் தேர்தலில், இலங்கையின் பெரும்பான்மை மக்களான, சிங்களர்கள் பேராதரவுடன் வெற்றி பெற காரணமாயிருந்தது.

கோதபயா ராஜபக்சே, அரசியல் குடும்பத்தைச் சேர்ந்திருந்தாலும், அரசியலில் திளைத்த அவரது மற்ற ராஜபக்சே சகோதரர்களை போல, அவருக்கு அரசியல் ஈடுபாடு இல்லை. ராஜபக்சே குடும்பத்தின் அரசியல் பிரவேசம், தந்தை, டான் ஆல்வின் ராஜபக்சே, 1947 பார்லிமென்ட் தேர்தலில் பெற்ற வெற்றியுடன் துவங்கியது. அவர் தொடர்ந்து, 18 ஆண்டுகள் பார்லிமென்ட் உறுப்பினராக பணியாற்றி, 1967ல் காலமானார். அவருடைய மூத்த மகன், சமல் ஜயந்த, 78, முன்னாள் அமைச்சராகவும், சபாநாயகராகவும் பணியாற்றியவர்.

அடுத்தவர், 75- வயதான மகிந்தாவின் அரசியல் பயணம், 1970-ல், இலங்கை சுதந்திரக் கட்சி சார்பில் பார்லிமென்ட் உறுப்பினராக ஆரம்பித்தது. அவர், இரு முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், மூன்றாம் முறையாக அதிபராக தேர்தலில் தோற்றாலும், இன்றும் இலங்கை அரசியலில் பலம் வாய்ந்த தலைவராக கருதப்படுகிறார்.

கோதபயாவின் தம்பி, பசில் ரோஹன, 69, நீண்ட காலமாக, அதாவது, 26 வயதிலிருந்தே அரசியலில் ஈடுபட்டு உள்ளார். இடையே, உட்பூசல் காரணமாக, இலங்கை சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, ஐக்கிய தேசிய கட்சியில் சேர்ந்தாலும், மகிந்தாவுக்கு உதவியாக எப்போதுமே செயல்பட்டவர். பத்து ஆண்டுகள் பார்லிமென்ட் உறுப்பினராகவும், மகிந்தா ஆட்சியில் அமைச்சராகவும் அனுபவம் பெற்றவர்.

தற்போது, மகிந்தா தலைமையில், இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் செயலராக உள்ளார். ராஜபக்சே குடும்ப அரசியலின் மூன்றாவது தலைமுறை, மகிந்தா ராஜபக்சேயின் மகன், நமல், பார்லிமென்ட் உறுப்பினராக, 2010-ல் தேர்ந்தெடுத்த பின் துவங்கியுள்ளது. கோதபயா, கடந்த ஆண்டு, அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்த பின் தான், தன் அமெரிக்க குடியுரிமையை விலக்க விண்ணப்பித்தார்.

அதிபராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், அவர் எடுத்த பல முடிவுகள், அவருக்கு அரசியல் தலைவர்களை விட, அவருடன் ஒத்துப் போகும் ராணுவ அதிகாரிகளிடமும், திறமையான அரசு ஊழியர்களிடமும், அதிக நம்பிக்கை உண்டு என்பதை காட்டுகின்றன.

கோதபயாவுக்கு நடைமுறை அரசியலிலோ அல்லது அதன் அங்கமான, கட்சி உட்பூசல்களிலோ, அதிக ஈடுபாடு கிடையாது. அவர் பேச்சு, அரசியல் முலாம் பூசப்படாமல், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று இருக்கும். இதனால், கூட்டணி அரசியல் பிரச்னைகளை சமாளிக்க, அதில் கைதேர்ந்த மகிந்தாவின் உதவி, கோதபயாவுக்கு எப்போதுமே தேவைப்படும் என்பதில் ஐயமில்லை. ஆகவே, கோதபயாவின் அரசியல் முகம், ராஜபக்சே குடும்ப அரசியல் முகத்தின் பிரதிபலிப்பே என்று கூறலாம். இருந்தாலும், செயலளவில், கோதபயா தன் தனித்தன்மையை காட்டி வருகிறார்.

தேரவாத புத்த முகம்

கோதபயாவின் இரண்டாம் முகம், தேரவாத புத்த மதம் சார்ந்தது. அதிபரின் பெயர் கொண்ட, அரசர் கோதபயா, மூன்றாம் நுாற்றாண்டில், அனுராதபுர அரசை, 13- ஆண்டுகள் ஆண்டவர். அவர் ஆட்சியின் போது, தேரவாத புத்தத்தை நிலை நாட்ட, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அவரின், தேரவாத கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்ட காரணத்துக்காக, 60 புத்த பிக்குக்களை நாடு கடத்தினார்.

இப்போதைய, அதிபர், கோதபயாவின் பதவியேற்பு விழா, அனுராதபுரத்தில் இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் அரசன், எல்லாளனை வீழ்த்திய சிங்கள அரசன், துட்டகெமுனு நிறுவிய ஸ்துாபியின் கீழ் நிகழ்ந்தது. அப்போது பேசிய கோதபயா, தன் வெற்றிக்கு, சிங்கள புத்த மக்கள் தந்த பெரும்பான்மை ஆதரவே காரணம் என்று குறிப்பிட்டார்.

அப்போது அவர், ஒளிவு, மறைவு இல்லாமல், தன் ஆழ்ந்த புத்த மத கலாசார பின்னணியை குறிப்பிட்டு, மற்ற மதங்களை மதித்தாலும், நாட்டின் அடிப்படையான, தேரவாத சிங்கள புத்த கலாசார பின்னணியை பின்பற்றப் போவதாக கூறினார். இதனால், அவருக்கு சிங்கள புத்த மதத்தினரின், பெரும்பான்மை ஆதரவு தொடர்ந்து வரும் என்பதில் சந்தேகமில்லை.

இருந்தாலும், கோதபயாவுடன் பழகிய பலரின் கருத்துபடி, அவர் இனவாதி அல்ல. அப்படி இருந்தாலும், புத்த மதத்தை முன்னிலைப் படுத்தியே அவர் ஆட்சி நடத்துவார் என்று, பெரும்பாலானோர் நம்புகின்றனர். இதற்கு அவர் எடுத்துள்ள பல முயற்சிகளை மேற்கோள் காட்டலாம்.

ராணுவ முகம்

கோதபயாவின் மூன்றாம் முகத்தை, ராணுவ முகம் என்று கூறலாம். அரசியல் மற்றும் லஞ்சம், ஊழல் ஆகியவற்றின் தாக்கத்தால், தடுமாறும் சிவில் நிர்வாகத்தின் மீது, கட்டுப்பாடான வழிமுறைகளுடன் இயங்கி வரும் ராணுவத்தினருக்கு அதிக மதிப்பு கிடையாது. கோதபயாவும் இதே எண்ணமுடையவர் என்று தோன்றுகிறது.ஏனெனில், கோதபயாவின் மூன்று முகங்களில், ராணுவ முகமே, அதிக முடிவுகளை எடுப்பதாக கூறலாம். அவர் ஆட்சிக்கு வந்த பின் எடுத்த முடிவுகளில், ராணுவ வழிமுறைகளின் தாக்கம் தெரிகிறது.

முக்கியமாக, தற்போது அவர் ஆணையின்படி, அரசின், 31 அங்கங்கள், பாதுகாப்புத் துறையின் செயலர், முன்னாள் ராணுவ ஜெனரல் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றில் காவல் துறை, எஸ்.ஐ.எஸ்., என்று கூறப்படும் அரசு நுண்ணறிவு சேவை, குடியேற்ற துறை, குடியுரிமை பதிவு துறை, தொலை தொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவை அடங்கும். சொல்லப் போனால், பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும், கிழக்கு இலங்கையில் புராதன புத்தமத சின்னங்களை பாதுகாக்க, அமைக்கப்பட்ட குழு கூட, ஒரு முன்னாள் ராணுவ ஜெனரலின் தலைமையில் அமைக்கப் பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாட்டுக்கான, தேசிய அளவில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார அமைப்புகளின் தலைமை மற்றும் நாட்டின் வளர்ச்சி பணிக்கான, மத்திய குழுவின் தலைமை ஆகியவற்றுக்கு, தற்போது பணிபுரியும் அல்லது முன்னாள், ராணுவ உயர் அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாக, ஜனநாயக அரசியலமைப்பை ஓரளவு ஓரங்கட்டிவிட்டு, அதிபர் கோதபயா ஆட்சி செய்வார் என்ற அரசியல் கருத்து நிலவுகிறது.

கோதபயாவின் மூன்று முக தேர்தல் பங்களிப்பு, எவ்வளவு துாரம், அவர் வெற்றிக்கு உதவும் என்பதை, ஆகஸ்டு 5ல் நடக்கவிருக்கும் தேர்தல் முடிவுகள் தெரிவிக்குமா என்பதற்கு விடை அளிப்பது எளிதல்ல. ஏனெனில், இலங்கை அரசியலில், தேர்தல் முடிவுகள் அரசியல் கட்சிகளின் நாடகத்தின் முதல் அங்கமாகும்!

கர்னல் ஆர்.ஹரிஹரன் ராணுவ நுண்ணறிவுத் துறையில், 30 ஆண்டு அனுபவம் பெற்றவர். தெற்காசிய நாடுகள் மற்றும் சீனாவின் நிகழ்வுகளை ஆய்பவர்.

 

 

 


Friday, 17 July 2020

இந்தியாவை நெருங்கும் சீன கடற்படை


கர்னல் ஆர் ஹரிஹரன் | தினமலர் | 17-07-2020

நம் நாட்டின் வட கோடியில் உள்ள, லடாக் எல்லையில், நான்கு இடங்களில் குவிக்கப்பட்டிருந்த சீன ராணுவப் படைகள் விலக்கிக் கொள்ளப்படும் என, வந்துள்ள செய்தி வரவேற்கத்தக்கது.

அது, சீனாவுடன் போர் மூளும் அபாயத்தை தற்காலிமாக தவிர்த்தாலும், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லைப் பிரச்னைகள் இன்னும் தீரவில்லை என்பது தான் உண்மை. ஆகவே நாம் விழிப்புடன் செயல்படுவது அவசியம். நம் கடல் எல்லைக்குள் அவ்வப்போது, சீன கப்பல்கள், அந்நாட்டின் போர் கப்பல்கள், ஆராய்ச்சி மற்றும் மீன்பிடி படகுகள் ஊடுருவி, நம் கடற்படையின் தயார் நிலையை அடிக்கடி சோதித்து வருகின்றன. இது, பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய சங்கதி.

இந்தியாவின் கடற்கரை, 7,516 கி.மீ., இதில் தீவுப்பகுதிகளான அந்தமான்- நிகோபார் மற்றும் லட்சத்தீவுகள் ஆகியவற்றின், 2,054 கி.மீ., கடற்கரையும் அடங்கும். சர்வதேச ஒப்பந்தப்படி, இந்தியாவின் கடல் எல்லையை ஒட்டிய, 2,172 மில்லியன் சதுர கி.மீ., கடல் பரப்பில் உள்ள கடல் வளத்துக்கும், கடலின் அடியில் உள்ள கனிமங்களுக்கும் இந்தியாவுக்கு முன்னுரிமை உண்டு. ஆகவே, கடல் வழியே நம் தீவுப்பகுதிகள் உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்புக்கு உண்டாகும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், நமக்கு, சொந்தமான கடல் வளங்களின் பாதுகாப்பதும் நம் கடற்படை மற்றும் கடலோர காவல் படைகளின் கடமையாகும்.

கடந்த மாதம், நம் கடற்படை தலைவர், அட்மிரல் கரம்பீர் சிங், சீன கடற்படையின் போர் கப்பல்கள் சில, நம் கடல் எல்லையிலிருந்து, 200 கடல் மைல் தொலைவு வரை உள்ள, இந்தியாவின், பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் அவ்வப்போது நுழைவதாகவும், அவற்றை நம் கடற்படை எச்சரித்து வெளியே அனுப்புவதாகவும் கூறி உள்ளார். இது புதிது அல்ல.கடந்த, 2017-ல் இருந்தே, ஏறக்குறைய, எட்டு சீன போர் கப்பல்களும், ஒரு நீர்மூழ்கி கப்பலும் தொடர்ந்து, நம் இந்திய பெருங்கடலில் உலவி வருகின்றன. நம் கடற்படை அவற்றை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பரில், அந்தமான் தீவுகளின் கடல் எல்லையை ஊடுருவிய சீன சர்வே கப்பலை நம் கடற்படை எச்சரித்து வெளியே அனுப்பியது. இந்திய போர்கப்பல்களும், கண்காணிப்பு விமானங்களும், இந்திய பெருங்கடலில் நெடுங்காலமாக தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. சீன போர் கப்பல்கள், 2008-லிருந்து, இந்திய பெருங்கடலில், சீன சரக்கு கப்பல்களை, கடல் கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்க, வங்காள விரிகுடாவில் துவங்கி, அரபிக்கடலின் மேற்கே உள்ள, ஏடன் வளைகுடா வரை ரோந்து பணியில் உலவி வருகின்றன. இதுவரை, 35 சீன போர் கப்பல் அணிகள் அந்தப் பணியில் பங்கெடுத்துள்ளன. ஆகவே, சீன கடற்படைக்கு இந்தியப் பெருங்கடல் பரிச்சயமானதே.

சீனாவுடன் ஒப்பந்தங்கள்


இந்தியாவின் கடல் எல்லையைச் சுற்றியுள்ள அண்டை நாடுகளில் சீனா வளர்ச்சிப்பணி என்ற பெயரில் அந்நாட்டுத் துறைமுகங்களை புதுப்பிக்க கடன் மற்றும் கட்டுமான உதவி செய்து வருகிறது. சீனாவின், 'முத்துச்சரம்' என்று அழைக்கப்படும், இந்த முயற்சியின் முத்துக்களில், பர்மாவின் மேற்கு கடற்கரையில் உள்ள, கியாக்பூ துவங்கி, வங்கதேசத்தின் கிழக்கு கோடியில் உள்ள சொனாடியா, இலங்கையில் அம்பந்தோட்டை மற்றும் பாகிஸ்தானில் குவாதார் ஆகியவை அடங்கும். இலங்கை, சீனாவிடம் பெற்ற கடனை ஈடுகட்ட அம்பந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு, 99- ஆண்டு குத்தகைக்கு அளித்துள்ளது. குவாதார் மற்றும் கியாக்பூ ஆகிய துறைமுகங்களின் கதியும் இதே நிலை தான்.

இந்த நாடுகளின் கடற்படைகளுக்கு சீனா குறைந்த விலையில் போர் கப்பல்களை அளித்துள்ளது. இவற்றில் பாகிஸ்தானுக்கு அளித்த, எட்டு நீர்மூழ்கி கப்பல்களும், வங்கதேசத்திற்கு விற்ற, இரண்டு நீர்மூழ்கி கப்பல்களும் அடங்கும். மேலும் பல போர் கப்பல்களையும், கடல்போருக்கான ஏவுகணைகளையும், பாகிஸ்தானுக்கு அளிக்க சீனாவுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. பாகிஸ்தான், வங்கதேசம், பர்மா, இலங்கை ஆகிய நாடுகளில் ரோந்துப் பணியில் ஈடுபடும் சீன போர் கப்பல்கள், அவ்வப்போது வந்து போகின்றன

ஆய்வாளர்கள் கணிப்பு.

மாலத்தீவில், சீனா, நான்கு மில்லியன் அமெரிக்க டாலருக்கு, 'பெய்துபிடோலு' என்ற தீவை, 2066 வரை குத்தகைக்கு எடுத்துள்ளது. அங்கே, சீனாவின் ஆளுமையில் நடந்த கடல் மீட்பு பணிகளின் விளைவாக, அந்த தீவின் பரப்பளவு, 38 ஆயிரம் சதுர கி.மீயிலிருந்து 1 லட்சம் சதுர கி.மீ ஆக வளர்ந்துள்ளது. அங்கே தற்போது, சீனா அமைத்து வரும் கட்டமைப்புகள் அது ராணுவ தளமாக பயன்படுத்தப்படலாம் என்பது ஆய்வாளர்கள் கணிப்பு. குவாதர் துறைமுகம் சீன கடற்படை தளமாக மாறி வருகிறது. இவற்றைத் தவிர, கிழக்கு ஆப்ரிக்காவில், சூயஸ் கால்வாயின் நுழைவுவாயிலில் ட்ஜூபூடி நாட்டில், சீனா 590 மில்லியன் டாலர் செலவில், சீனாவின் முதல் வெளிநாட்டு ராணுவ தளத்தை அமைத்துள்ளது. 2017ல் இருந்து இயங்கி வரும் இந்த தளத்தில், தற்போது விமானந்தாங்கி கப்பல்கள் உபயோகத்திற்கான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது, இந்திய பெருங்கடலில் சீனா தனது வளரும் அரசியல் செல்வாக்கையும், உடமைகளையும் பாதுகாக்க, சீன கடற்படையை உபயோகிக்க தயங்காது என்பதைக் காட்டுகிறது.

இந்தியா நடத்திய, பாகிஸ்தானில் உள்ள பாலாகோட் விமானத் தாக்குதலுக்கு பிறகு, சீனா - -பாகிஸ்தான் பாதுகாப்பு உறவுகள் மிகவும் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீன கடற்படைகள் ஒருங்கிணைந்த கடற்படைப் பயிற்சி மேற்கொண்டனர். கடந்த ஆண்டு, பாகிஸ்தானை அடுத்த, ஓமான் வளைகுடாவிலும், இந்திய பெருங்கடலிலும் சீனா, ரஷ்யா மற்றும் இரான் நாடுகளின் கடற்படைகள் இணைந்து, நான்கு நாள் கடற் பயிற்சி மேற்கொண்டனர்.

ஊடக செய்திகளின்படி, 2015ல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ ஆறு சீன, 'ஆய்வு' கப்பல்களும், 600 சீன மீன்பிடி விசைப்படகுகளும் இந்திய பெருங்கடலில் காணப்படுகின்றன. இத்தகைய ஆய்வுக்கப்பல்கள் கடலின் சலனத்தையும், கடலடியில் உள்ள கனிமவளங்களை கண்டுபிடிக்க உபயோகப்படுத்தப் படுகின்றன. சீன மீன்பிடி படகுகள் தேவைப்படும் போது 'மரைன் மிலிஷியா' என்று கூறப்படும் துணை கடற்படையாக செயல்படுகின்றன.

தென் சீனக்கடலில் சீன கடற்படை மற்ற அண்டை நாடுகளை அச்சுறுத்துவதற்கு உதவியாக அவை உபயோகிக்கப்பட்டுள்ளன. சீன கடற்படைக்கு தேவையான போது, அவை நம் பாதுகாப்பு மற்றும் முக்கிய அரசுப் பிரிவுகளின் இணையதளங்களை ஒட்டு கேட்கவும் உதவும். ஆகவே, இந்தியாவை சூழ்ந்துள்ள கடல் பகுதிகளில் சீன கப்பல்கள் நடமாட்டம் அதிகமாகி வருவதைப் பற்றி நாம் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

இந்திய பெருங்கடலில், தொன்றுதொட்டு, இந்தியாவின் பல்வேறு அரசர்கள், முக்கியமாக, சோழர் மற்றும் பல்லவ அரசுகள், தன் கடற்படைகளை உபயோகித்து தற்கால தாய்லாந்து, இந்தோனேஷியா வரை தன் செல்வாக்கை நிலை நாட்டினர். சொல்லப் போனால்,சோழர் கால கலாசார சின்னங்கள், சீனாவில் கூட கண்டறியப்பட்டுள்ளன. ஆகவே, இந்தியர்களுக்கு கடல் வழி வணிகமும் அதைக் காக்க கடற்படைகளின் இயக்கமும் கைவந்த கலையே. தற்போது, இந்திய பெருங்கடலில், சீன கடற்படையை எதிர்கொள்ளும் பலம் வாய்ந்தது, நம் இந்திய கடற்படை தான்.

நம் கடற்படை, 1612ம் ஆண்டு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் உடைமைகளை பாதுகாக்க, தனியார் படையாக ஆரம்பித்து, 1830ல், ஆங்கில காலனி ஆதிக்கத்தினரால் கடற்படையாக உருவாக்கப்பட்டது. அடுத்த, 250 ஆண்டுகளில், நம் கடற்படை பல போர்களில் ஈடுபட்டு, இன்று இந்திய பெருங்கடலில் வலிமை வாய்ந்த கடற்படையாக திகழ்கிறது. புவியியல் பார்வையில், இந்தியாவின் பாதுகாப்பு, இந்திய பெருங்கடல் நாடுகளான இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகியவற்றின் பாதுகாப்புடன் ஒருங்கிணைந்தது. ஆகவே, இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுகள் ஆகிய நாடுகளோடு கடல்வழி பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியா முக்கிய பங்கு

அதன்படி, நம் கடற்படையும் அந்நாட்டு கடற்படைகளும் இணைந்து கடல்வளப் பாதுகாப்புக்கு ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், இந்தியப் பெருங்கடல் நாடுகளான ஓமன், மோரிஸ் மற்றும் செய்ஷெல்ஸ் ஆகியவற்றின் பாதுகாப்பில் இந்தியா முக்கிய பங்கு ஆற்றி வருகிறது. இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்களின்படி, அந்த நாடுகளின் தளங்களை, நம் கடற்படை உபயோகிக்கலாம். இதில் பிரான்சுக்கு சொந்தமான, ட்ஜிபூடி ராணுவதளமும் அடங்கும்.இத்தகைய சூழலில், நம் அண்டை நாடுகளில் கடந்த பத்து ஆண்டுகளில் சீனா வலிமையாக காலுன்றியுள்ளது. இது தவிர்க்க முடியாதது என்றாலும் இந்த நாடுகளில் நாம் சீனாவின் செயல்பாடுகளை கூர்ந்து கவனிப்பது மிக அவசியம்.

முக்கியமாக, இலங்கை -சீனா பன்முனை உறவுகள் பெருமளவில் வளர்ந்துள்ளன. முக்கியமாக, மகிந்த ராஜபக்ச அதிபராயிருந்த கால கட்டத்தில் இலங்கையின் பாதுகாப்பைத் தவிர, அரசியல், பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிப பணிகளிலும் சீனாவின் பங்கு அதிகமாயிற்று. இலங்கையில், கொழும்பு கன்டெய்னர் துறைமுகமும், அம்பந்தோட்டை துறைமுகமும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளன. தற்போது, இலங்கை அதிபர், கோட்டாபய ராஜபக்ச ஆட்சியிலும், சீன ஆதிக்கம் எவ்வளவு வளர்கிறது என்பதை இந்தியா தொடர்ந்து கவனித்து வருகிறது.

மாலத்தீவிலும் இந்தியாவின் செல்வாக்கை குறைக்க சீனா எடுத்துள்ள முயற்சிகள் ஓரளவு வெற்றி கண்டுள்ளன. இந்தியா -- பசிபிக் கடற்பகுதிகளில் இதுவரை ஆதிக்கம் செய்து வந்த அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளைத் தவிர இந்தியாவுக்கும், சீனாவின் பெருகி வரும் படைப்பலம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, அவை ,'குவாட்' என்று அழைக்கப்படும் நான்முக பாதுகாப்பு வட்டத்தை அமைத்துள்ளன. அதில் பங்கு பெறும் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்து பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்தி வருகின்றன. குவாட் அமைப்பில், இந்தியாவுக்கு முக்கியமான பங்கு உள்ளது. அதற்கு காரணம், வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள, 572 தீவுகளை கொண்ட அந்தமான் நிகோபார் தீவுப்பகுதி, பர்மாவிலிருந்து, 22 கடல் மைல் துாரத்திலும், தெற்கில், இந்தோனேஷியா, 90 கடல் மைல் துாரத்திலும் உள்ளதாகும்.

உலகின், 60 விழுக்காடு வணிக கப்பல்கள், மலாக்கா ஜலசந்தி வழியே கிழக்காசிய நாடுகளையும், சீனா, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளையும் அடைய இந்த நீர்வழியை பயன்படுத்துகின்றன. ஆகவே தான், அந்தமான் நிகோபார் தீவுகளை இந்தியாவின் மூழ்கடிக்க முடியாத விமானம் தாங்கி கப்பல் என்று கடற்போர் நிபுணர்கள் கூறுகின்றனர். கண்காணிப்பில் இருந்து தப்ப முடியாதுஆகவே, அந்தமான் தீவுகளில் உள்ள நம் முப்படைதளம், சீன கப்பல்கள் இந்திய பெருங்கடலில் உபயோகிக்கும் நுழைவுவாயிலான மலாக்கா ஜலசந்தியையும், இந்தோனேஷியாவில் உள்ள ஜலசந்திகளையும் தொடர்ந்து கண்காணிக்க முடிகிறது. இதற்காகவே, இந்தியா, அமெரிக்காவின், பி - -81 அதிநவீன கண்காணிப்பு விமானங்களை வாங்கியுள்ளது. ஆகவே, இந்தியாவை அணுகும் சீன கப்பல்கள் எளிதில் நம் கண்காணிப்பில் இருந்து தப்ப முடியாது.

சீனாவின் தற்போதைய கடற்படை, 1949 ஏப்ரலில், சொற்பமான சிறு கப்பல்களுடன் உருவாயிற்று. அதுவரை உருப்படியான கடற்படை கிடையாது. அதன் பிறகு, 20 ஆண்டுகளில் சோவியத் யூனியன் உதவியுடன், சீன கடற்படை புதுமை பெற்றது. சோவியத் நாடு அதற்கான போர் கப்பல்களையும், படையினர் பயிற்சியையும் அளித்தது.கடந்த, 2008 வரை சீனாவின் குறிக்கோள் தன் உரிமையாக கருதும் தைவான் நாட்டை கைப்பற்றுவதாகும். ஆகவே, அதற்கேற்றது போல் கடற்படை உருவாக்கப்பட்டிருந்தது.சீனாவின் பொருளாதாரம் மற்றும் வணிக வளர்ச்சி உலக அளவில் பெரும் தாக்கம் ஏற்படுத்தவே, 2012-ல், சீனாவின் தலைமையை, அதிபர் ஷி ஜின்பிங் ஏற்ற பிறகு அந்த நாட்டின் ஆசை உலக அளவில் சீனாவை முன்னளவில் நிறுத்துவதாக மாறியது.

கடல் வலிமையில் இரண்டாம் இடம்

ஆகவே, கடற்படை பெருமளவில் விரிவுபடுத்தப்பட்டு, தற்போது சீனா உலகளவில் கடல் வலிமையில் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது என்று கூறலாம். சீன கடற்படை பலம் பெருக, தென் சீனக்கடலை தன் முழு ஆதிக்கத்தில் கொண்டு வரும் முயற்சியில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஜப்பான், தைவான் மற்றும் சிறிய அண்டை நாடுகளான வியட்நாம், பிலிபைன்ஸ், புரூனை, ஆகியவற்றுக்கு சொந்தமான கடல் பகுதிகளை, சீனா, சொந்தம் கொண்டாடி அவ்வப்போது சீன போர் கப்பல்கள் பயமுறுத்தி வருகின்றன. தென் சீன கடலில் சர்ச்சைக்குரிய குட்டித்தீவுகளை ஆக்கிரமித்து அவற்றை விரிவாக்கம் செய்துள்ளது. 'குளோபல் பயர் பவர்' என்ற, நாடுகளின் ராணுவத்திறன் மதிப்பீட்டு நிறுவனத்தின்படி தற்போது, சீன கடற்படை,777 கப்பல்களையும், 594 விமானங்களையும் கொண்ட படையாகும்.

ஆனால், அவற்றில் கடல் போருக்கு தகுதியானவை இரண்டு விமானம் தாங்கி கப்பல்கள், 36 நாசகாரிகள், 52 போர்கப்பல்கள் மற்றும் 50 சிறிய, 'கார்வெட்' ரக போர் கப்பல்கள், 220 எல்லை பாதுகாப்பு படகுகள், 74 நீர்மூழ்கிகள் அடங்கும். அத்துடன், இந்திய கடற்படையை ஒப்பிட்டால் அது சீன கடற்படையின், நாலில் ஒரு பகுதியே. ஏனெனில், அது தெற்காசியாவில் இந்திய பெருங்கடலின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது. நம் கடற்படையிடம், மொத்தம், 295 கப்பல்கள் உள்ளன; அவற்றில் ஒன்று, விமானந்தாங்கி கப்பல், 10 நாசகாரிகள், 13 போர்கப்பல்கள், 17 நீர்முழ்கிகள், 19 கார்வேட் ரக சிறிய கப்பல்கள், 139 எல்லைப் பாதுகாப்பு படகுகள் அடங்கும். சீனாவுடன் ஒப்பிட்டால், இது சிறியதாகவே தோன்றும்.

ஆனால், சீன கடற்படைக்கு தென்சீன கடலில் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, தைவான் ஆகிய நாடுகளின் அதிநவீன வலிமையான படைகளை ஈடுகட்ட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகவே, இந்தியப் பெருங்கடலில் ஒரே நேரத்தில் சீனா ஈடுபடுத்தக் கூடிய போர் கப்பல்கள் குறைவாகவே இருக்கும். மேலும், சீன கடற்படையின் குறைபாடு, அதன் மிகவும் குறைந்த கடற்போர் அனுபவமாகும். அதனிடம், இரண்டு விமானந்தாங்கி கப்பல்கள் இருந்தாலும் அவற்றுக்கு போர் பயிற்சி அனுபவம் கிடையாது.

ஆனால், இந்தியா, 50 ஆண்டுகளுக்கு மேலாக, விமானந்தாங்கி மற்றும் நாசகாரி போர்க் கப்பல்களை இயக்கி வருகிறது. அவை, 1965 மற்றும், 1971 போரில் நம் வெற்றிக்கு மகத்தான சேவை புரிந்தன. 1971-ல், நம் கடற்படை சாகசமாக நடத்திய, கராச்சி துறைமுக தாக்குதல், பாக்., கடற்படையை தடுமாற வைத்தது. அந்தப்போரில், மொத்தமாக, பாக்., கடற்படையின், இரண்டு நாசகாரிகள், 1 நீர்மூழ்கி கப்பல், 3 ரோந்து படகுகள் மற்றும் 7 சிறிய போர் கப்பல்களை நம் கடற்படை அழித்தது. ஆகவே, இந்திய பெருங்கடலில் ஊடுருவும் ஒவ்வொரு சீன போர்கப்பலும் இந்திய கடற்படையின் கண்ணில் படாமல் தப்ப வேண்டும் என்ற குறிக்கோளுடன் தான் செயல்படும்!




சீனாவை நம்பலாமா? சீனா பின்வாங்குகிறதா? | CHINA | INDIA | COL HARIRAHAN |...

இந்தியா சீனா போர் வருமா? இந்தியா சீனா போர் 2020 | India China Border

Thursday, 9 July 2020

இந்தியாவுக்கு எதிராக சீனா-பாகிஸ்தான் வியூகம்


​​கர்னல் ஆர் ஹரிஹரன் | தினமலர் | 09-07-2020

பிரதமர் மோடி, லடாக் எல்லைப் பகுதிக்கு மேற்கொண்ட திடீர் பயணம், இந்தியாவின், சீன உறவில், ஒரு புதிய திருப்பு முனையை காட்டுகிறது. பிரதமர், திருக்குறளை மேற்கோள் காட்டி, போருக்கு தயாராக நிற்கும் நம் முன்னணி ராணுவ வீரர்களை பாராட்டி பேசியது, அவர்களை மிகவும் உற்சாகப்படுத்தி இருக்கும். அது, பிரதமரின் லடாக் எல்லைப் பயணத்துக்கு ஒரு காரணம் என்றாலும், பிரதமரின் நெருப்பு தெறிக்கும் பேச்சு, சீனாவுக்கு விடுத்த எச்சரிக்கை என்பது, அதை விட முக்கியமானது.

பிரதமர் மோடியின் லடாக் பேச்சில், அவர் சீனாவின் பெயரை எடுக்கா விட்டாலும், அதன் தாக்கத்தை, சீனத் தலைமை உணர்ந்ததை, அதன் பின் நடந்த, இரு தரப்பு பேச்சின் சுமுக முடிவே காட்டுகிறது. சீனப் படைகள் எல்லையிலிருந்து விலக்கப்பட்டாலும், நாம் தயார் நிலையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்த சம்பவத்துக்கு பின், சீனாவின் வாக்குறுதிகளை நம்பி, அரசு முடிவெடுக்கும் காலம் கடந்து விட்டது.

தற்போது சீனா, பாகிஸ்தானுடன் கைகோர்த்து, இந்திய எதிர்ப்பு வியூகத்தை அமைத்து வருகிறது. அது, நம் பாதுகாப்பு சூழ்நிலையில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தலாம். அவ்வாறு இரு நாடுகளும், ஒரே நேரத்தில் இரு முனை தாக்குதல் நடத்தினால், இந்தியாவால் அதை சமாளிப்பது எளிதல்ல.

பாதுகாப்பு உறவு

ஏனெனில், தெற்காசியாவில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக பலம் வாய்ந்த நாடு பாகிஸ்தான். மேலும் அது, அணு ஆயுத நாடுகளில் ஒன்று; சீனாவுடன் நெருங்கிய பாதுகாப்பு உறவு கொண்ட நாடு.பிரதமர் மோடி, லடாக் பயணம் மேற்கொண்ட அதே சமயத்தில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடன் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, இந்திய எல்லை சூழ்நிலை பற்றி கலந்துரையாடினார்.

பாக்., ஊடகங்களின்படி, அந்த நேரத்தில் குரேஷி, இந்தியாவின் பகைமை உணர்வு, ஆக்கிரமிப்பை விரிவாக்கும் கொள்கை, தற்போது அந்தப் பகுதியில் நிலவும் சமாதான சூழ்நிலைக்கு அச்சுறுத்தலாக உள்ள அம்சங்கள் பற்றி, கருத்து பரிமாற்றம் செய்து கொண்டார். குரேஷியின் பேச்சில், காஷ்மீரில் இந்தியா தொடர்ந்து நடத்தும் மனித உரிமை மீறல்கள் மற்றும் எல்லையைக் கடந்து நடத்தும் தாக்குதல்களில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது பற்றி குறிப்பிட்டு இருந்தாலும், பாகிஸ்தான் அமைதி காப்பதாக கூறினார்.

ஒப்பந்தத்தில் கையெழுத்து

அண்மையில் கிடைத்த ஊடகச் செய்திகள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் எல்லைப் பகுதியில், பாகிஸ்தான், 20 ஆயிரம் வீரர்களை குவித்துள்ளதாக கூறுகின்றன. மேலும், அதே பகுதியில் உள்ள, 'ஸ்கார்டு' விமான தளத்தை, சீன விமானப்படை உபயோகிப் பதாகவும் கூறுகின்றன. ஸ்கார்டு விமான தளத்தை, சீன விமானப்படை, இந்தியாவுக்கு எதிரான போரின்போது உபயோகித்தால், திபெத்தில் சீன போர் விமானங்கள் எதிர் கொள்ளும் பல பிரச்னைகளை தவிர்க்கலாம்.

மேலும், இந்தியப் படைகளை, பல முனைகளில் இருந்து போர் விமானங்களால் தாக்க உதவும். இந்த செய்திகளை, 'இந்தியாவின் பொய் பிரசாரம்' என்று பாகிஸ்தான் முற்றிலும் மறுத்தாலும், இந்திய எதிர்ப்பு வியூகத்தால், எத்தகைய போர் முனை விளைவுகளை, இந்தியா எதிர் கொள்ளும் என்பதை சுட்டிக் காட்டுகிறது. அவற்றை எதிர் கொள்ளத் தேவையான முயற்சிகளை, இந்திய தளபதிகள் திட்டமிட்டு இருப்பர்.

இரு யூனியன் பிரதேசங்களாக, ஜம்மு - காஷ்மீர் பிரிக்கப்பட்ட பிறகு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் எதிர்நோக்கும் பல பிரச்னைகளிலிருந்து மக்களை திசை திருப்ப, அந்த விவகாரத்தை உபயோகித்து வருகிறார். சர்வதேச அளவில், ஐ.நா., அமைப்புகளில், காஷ்மீரில் இந்தியா மனித உரிமைகளை மீறுவதாகவும், அடக்குமுறையை அவிழ்த்து விட்டு, அப்பாவி மக்களை கொல்வதாகவும், பாகிஸ்தான் கூறி வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஐ.நா., மனித உரிமை
கவுன்சிலில், பாகிஸ்தான், இதே காரணம் காட்டி, இந்தியாவை எதிர்த்து ஒரு கண்டன தீர்மானத்தை கொண்டு வர மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது; அந்த முயற்சிக்கு, சீனா உதவியது.

கடந்த ஆண்டு, ஆகஸ்டு மாதம், சீன மிலிட்டரி கமிஷனின் உதவித் தலைவரான ஜெனரல் ஷூ ஜ்யூலியாங், பாகிஸ்தான் விஜயம் செய்த போது, சீனாவுடன் பாதுகாப்பு உறவை மேலும் பலப்படுத்தவும், பாகிஸ்தானின் போர்த்திறனை அதிகமாக்கவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அப்போது அவருடன், பாக்., ராணுவத் தலைவரான ஜெனரல் பாஜ்வா நடத்திய பேச்சுகளில், ஜம்மு, காஷ்மீரின் தற்போதைய சூழ்நிலையும் அடங்கும்.

இந்தியா - சீன உறவுகள், லடாக் எல்லையில் பதற்ற நிலையில் இருக்கும் போது, பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்கு சந்தை வளாகத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான, பலுாச் விடுதலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்; அதில், 11 பேர் இறந்தனர். இந்த தாக்குதலில், இந்தியாவுக்கு பங்குள்ளது என, பிரதமர் இம்ரான் கான், உடனே அலறி விட்டார். ஐ.நா., பாதுகாப்பு சபையில், இந்த தாக்குதலை கண்டித்து, அதற்கு இந்தியாவை, மறைமுகமாக காரணம் காட்டும் தீர்மானத்தை கொண்டு வர பாகிஸ்தான் முயற்சித்தது. அதற்கு சீனா உதவியது.
காரணம் காட்டல்
அது, அமெரிக்க எதிர்ப்பால் தோற்றாலும், சீனா - -பாகிஸ்தான் உறவு எவ்வளவு நெருக்கம் அடைந்துள்ளது என்பதை காட்டுகிறது. நம் நாட்டின் எல்லையில் உள்ள லடாக்கில் உருவான பதற்ற நிலை தொடரும் போது, காஷ்மீரில் அமைதியைக் குலைக்க, பாகிஸ்தான் ஆதரவுடன் லஷ்கர் மற்றும் அல்- - பதர் பயங்கரவாத அமைப்புகள் செய்யும் முயற்சிகள் அதிகமாகியுள்ளன. இவற்றில், இந்த ஆண்டின் முதல், ஆறு மாதங்களில், 123 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதைக் காரணம் காட்டி, 'இந்தியாவின் புல்வாமாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் லஷ்கர் பயங்கரவாத கேந்திரமான, பாலாகோட் மீது நடத்திய விமானத் தாக்குதல் போல, இன்னொரு தாக்குதலை இந்தியா தொடுக்கலாம்' என, பாக்., ராணுவத் தலைவர் ஜெனரல் பாஜ்வா, தொடர்ந்து கூறி வருகிறார். இது, எல்லையில், பாக்., படைகளை குவிக்க காரணம் காட்டுவதாக தோன்றுகிறது.

இரும்பை விட வலிமையானது

பாகிஸ்தான் - சீனா உறவுகள், 1950ல் தோன்றினாலும், அவை விரிவடைந்தது, 1962-ல் நடந்த, இந்தியா - -சீனா போருக்குப் பிறகே. இரு நாடுகளுக்கும் கலாசாரம், மொழி, அரசியல் அமைப்பு, ஆளுமை என எல்லா வகையிலும் வேற்றுமைகள் இருந்தாலும், அவர்களை ஒருங்கிணைப்பது, 'இந்திய எதிர்ப்பு' என்ற பசையே. கடந்த, 2010 டிசம்பரில், சீன பிரதமர் வென் ஜியா பாவ், பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய பிறகு, பாகிஸ்தான் பிரதமர், ரியாஸ் கனி நன்றி கூறும் போது, 'சீனா -- பாகிஸ்தான் உறவை, மலைகளை விட உயர்ந்தது; கடலை விட ஆழ்ந்தது; இரும்பை விட வலிமையானது; தேனை விட இனிப்பானது' என, வர்ணித்தார்.
சீன பிரதமர் லீ கேகியாங், 'உங்களுக்கு சீனா மீது அன்பிருந்தால், பாகிஸ்தான் மீதும் அன்பு உள்ளது என்பது விளங்கும்' என, இரு நாடுகளிடையே நிலவும் நெருங்கிய உறவை விளக்கியுள்ளார். கடந்த, 1972-ல் தொடங்கிய, சீனா - பாகிஸ்தான் ராணுவ உறவு, நாளடைவில் வளர்ந்து, பாகிஸ்தானின் படை பலத்தை வளர்த்துள்ளது. இவற்றில் முக்கியமானவை:-

1. அணு ஆயுதம்; பாகிஸ்தான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க, சீனா மறைமுகமாக உதவி வருகிறது. அதற்கு தேவையான ஏவுகணைப் பாகங்கள், செயலிகள், அணுகுண்டு வடிவமைப்புக்கான தேவைகள் மற்றும் யுரேனியம் போன்றவற்றை அளித்து உதவியது.

2. 'ஜே.எப்-17' ரக போர் விமானத்தை, பாகிஸ்தானில் வடிவமைத்து, தயாரிக்க பெருமளவில் சீனா உதவியுள்ளது. இதுவே, பாகிஸ்தானின் முன்னணி போர் விமானமாகும். இது, அமெரிக்காவின், 'எப்-16' விமானத்துக்கு ஈடானது என்று பாகிஸ்தான் கூறுகிறது. ஆனால், இந்தியாவிடம் உள்ள, 'சுகாய் -30' விமானத்துக்கு இது ஈடாகாது.

3. பல ராக்கெட்டுகளை ஒரு நேரத்தில் ஏவக்கூடிய, 'ஏ-௧00' போர்க் கலன். இது, போர்முனையில் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் இயல்புடையது. இதற்கு இணையாக, இந்தியாவிடம், 'பி.எம்., 30' போர்க்கலன் உள்ளது.

4. 'வி.டி -1ஏ டாங்கி'கள், அல் கலீத் என, பாகிஸ்தானால் அழைக்கப்படுகிறது. இந்த டாங்கியை, சீனாவும், பாகிஸ்தானும் சேர்ந்து உருவாக்கியுள்ளன. இது, இந்தியாவின், 'டி--72' டாங்கியை தாக்கக் கூடியது என்றாலும், இந்தியாவின் முக்கிய பலமான, 'டி--90' டாங்கிக்கு ஈடு கொடுக்க முடியாது.

5. 'எச்.க்யு-16' எனப்படும், தரையிலிருந்து விமானத்தைத் தாக்கும் ஏவுகணையை, சீனாவிடமிருந்து பாகிஸ்தான் பெற்றுள்ளது.

இவ்வாறு, சீனாவும், பாகிஸ்தானும், இந்தியாவுக்கு எதிராக கூட்டணி சேர்ந்துள்ளன. எனினும், இவை எல்லாம், இந்திய வீரர்களின் மன திடம், தேசபக்தி முன் ஒன்றும் செய்ய இயலாது!

கர்னல் ஆர்.ஹரிஹரன்
haridirect@gmail.com





Monday, 6 July 2020

Sri Lanka election gig

Col R Hariharan |30-6-2020| Sri Lanka Perspectives June 2020 |                        South Asia Security Trends, July 2020 | www.security-risks.com

Election contretemps

The much debated and delayed Sri Lanka parliamentary election is now scheduled to be held on August 5.  After missing two dates set earlier for the election, after the disposal of eight fundamental rights cases, the Election Commission (EC) announcement came with a lot of conditions on conduct of campaigning as well as the elections, thanks to the Covid-19 pandemic.

Each general election has its own flavor; but never before Sri Lanka had to conduct an election when the administration was fighting a global pandemic threatening the country. This makes the present election extraordinary because the Covid-19 pandemic has dislocated normal life and queered the pitch of usual election narratives of political parties.

However, the gods seem to be favouring President Gotabaya Rajapaksa as the Covid pandemic is showing signs of being tamed. The virus strike rate started falling by end of May and as on June 30, it stands at 2042 cases with only 10 deaths, according to WHO statistics. This is a record any nation can be proud of; and it comes in handy to boost the election prospects of the President’s Sri Lanka Podujana Peramuna (SLPP). Yet another good news for the public was the lifting of the curfew imposed to contain the pandemic from March 20 onwards; the day-long curfew had continued for more than a month, before the timings were modified to night times in most of the areas. 

The election will test the ability of the Election Commission (EC) and the administration to conduct it as per the health guidelines to control the spread of the virus.

A total of 7,452 candidates are in the fray for a seat in the 225-member parliament. Members to the parliament are elected by proportional representation for five-year term. Out of the 225 members, 196 will be elected from 22 multi-member electoral districts, while the remaining 29 MPs will be elected from National Lists of their political parties and independent groups based on the proportion of their share in the national vote.

There are over 16.263 million voters eligible to participate in the election as against 15.04 million eligible voters in the 2015 parliamentary election. In the 2015 election 77.6 percent voters participated. However, strict public health restrictions in place both during the campaign period and the conduct of elections could adversely affect the voter percentage.

As in other South Asian countries, election campaigns are colourful in Sri Lanka also with lots of public participation. However, the Covid pandemic seems to have dampened the mood so far. Health guidelines have restricted major election rallies to one for a district.  Participation in public limits meetings to 100 persons. Social distancing norms are applicable to seating at meetings for both the audience and speakers. Before the meeting is organized health official has to be given three day notice. Moreover, participants even in small gatherings are required to provide their names, addresses and phone numbers. This is likely to discourage active public participation in campaign meetings. So political parties will have to innovatively use social media for campaigning. The UNP has already launched its social media campaign. Prime Minister Mahinda Rajapaksa has already flagged off the Sri Lanka Podujana Peramuna (SLPP) political campaign. According to the party, President Gotabaya Rajapaksa would be joining the campaign from July 3.

No dearth of rhetoric

In spite of all the limitations imposed by health guidelines on the election campaign, there seems to be no dearth of electoral rhetoric, many of them are sensational, while a few them are made only for shock effect. 

A typical example is the political maelstorm triggered by former minister and ex- LTTE Eastern Commander “Col” Vinayagamoorthy Muralitharan alias Karuna Amman’s flippant statement at a political rally in Ampara on June 19. He boasted that he had massacred 2000-3000 Sri Lanka soldiers in one night in Elephant Pass responding in response to an opposition leader’s remark that Karuna was more dangerous than Corona virus. Two CID teams were sent to Ampara and Batticaloa to gather more information about Karuna’s “claim” as though they had suddenly discovered his LTTE antecedent, his role in LTTE operations and in establishing in Eastern Province on a firm footing. The CID recorded his statement for seven and a half hours. In the slanging match that followed, Karuna’s statement in an interview alleging that opposition leader Sajith Premadasa’s father President Ranasinga Premadasa had given the LTTE 5000 rifles and one crore rounds of ammunition, targeting the UNP, was typical election rhetoric.

UN Human Rights Council added its penny’s worth to the Karuna controversy by tweeting "We note that #Karuna, former LTTE commander & Government minister, is being questioned for alleged past crimes. He should also be investigated for wholesale recruitment of child soldiers, a crime under int’l law. Accountability should apply to everyone in Sri Lanka."


New narrative in Tamil politics?


With the UNP a divided house, there are clear indications that the Tamil National Alliance (TNA), which is the largest group of Tamil parties, is changing its strategy to do business with President Gotabaya Rajapaksa, who has come favoured the Sinhala Buddhist majority in his actions.  Nothing illustrates the President’s action better than the appointment of an all Sinhala “task force composed of members of Buddhist clergy and the military to report on Archaeological Heritage Management in Tamil and Muslim majority Eastern Province.

TNA spokesman MA Sumanthiran said last week in Batticaloa that they will support the government if it takes up constitutional reform. His logic is “The President is considered a war hero and if he supports a new Constitution, the South will not oppose him. Though Sumanthiran, articulate in Sinhala, was targeted by hardliners as a traitor after he distanced himself with Prabhakaran’s terrorist methods, the Global Tamil Forum (GTF) came out in his support. TNA supremo R Sampanthan’s congratulatory message to Prime Minister Mahinda Rajapaksa on his completion of 50 years in active politics, also struck a conciliatory note. Describing Mahinda as a Man of the People, the octogenarian Tamil leader urged him to spearhead the move for a new constitution. "Sri Lanka as a Country faces serious unresolved problems. The country direly needs a new Constitution, the supreme Law of the country….A strong Leader with the support of the people is required to fulfil this urgent and compulsory need. Hon. Mahinda Rajapaksa is undoubtedly in that position. Hon. Mahinda Rajapaksa should rise to greater heights by undertaking and accomplishing that task. This should raise him to the level of a statesman and give him not merely national but international recognition and stature. He can be assured of our fullest support in this matter.”

The rival Tamil Makkal Tesiya Kuttani (TMTK) led by former Chief Minister CV Wigneswaran seems to have taken cue from the TNA and written a letter to the President seeking the release of 91 Tamil political prisoners. The former CM is said to have hinted of his readiness to talk to the President, after the elections on “national question”, according to well known Sri Lanka analyst Sathiyamoorthy.

But a new constitution by itself is no panacea for Tamils, as Federalism is a “no go” area for President Rajapaksa. But there are a host of other doables like the repeal of the Prevention of Terrorism Act, release of Tamil political prisoners and bringing to a closure of the vexing issue of forcibly disappeared persons if the Tamil parties manage to improve their working relations with the President and the PM. This is more easily said than done, as lack of unity is a unique feature of Tamil politics in Sri Lanka.  

Col R Hariharan, a retired MI officer, served as the head of Intelligence of the Indian Peace Keeping Force in Sri Lanka from 1987 to 90. He is associated with the Chennai Centre for China Studies and South Asia Analysis Group Email: haridirect@gmail.com Blog:: https://col.hariharan.info

Friday, 3 July 2020

சீனாவின் 6 போர் தந்திரங்கள்!


கர்னல் ஆர் ஹரிஹரன் | தினமலர் | 03-07-2020



ஜப்பான் பாதுகாப்புத் துறை, 2019ல் வெளியிட்டுள்ள, பாதுகாப்பு வெள்ளை அறிக்கைப்படி, சீனாவின் அரசியல் சித்தாந்தப்படி, ராணுவப் படைகளால் மட்டும் போர் தொடுக்கப்படுவதல்ல என்று கூறுகிறது. சீனா அரசியல் மற்றும் பாதுகாப்பு சார்ந்த மூன்று வகையான போர்களை நடத்துவதை நம்புகிறது.

இவற்றில் ஊடகப்போர், உளவியல் போர் மற்றும் சட்ட ரீதியான போர் ஆகியவை அடங்கும். இந்தியாவின் லடாக் பகுதியில், சீனாவுடன் போர் மூளும் சூழ்நிலையை பற்றிய செய்திகளை, உலக ஊடகங்களிலும், சமூக வலை தளங்களிலும், ஊடகங்களிலும் ஆராய்ந்தால், சீனா ஏற்கனவே இத்தகைய ஆயுதமில்லாத போரை, திட்டமிட்டு நடத்தி வருகிறது என்று தோன்றுகிறது. அடையாளம் தெரியாத வலைதளங்கள், மக்களிடையே பொய்யான செய்திகளையும், வதந்திகளையும் பரப்பி வருகின்றன.

அண்மையில் வெளி வந்த ஒரு செய்தியின்படி, 'சைனா டெய்லி' என்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஊடக அமைப்பு, அமெரிக்காவில் கடந்த நான்குஆண்டுகளில், ஒட்டு மொத்தமாக, 190 லட்சம் அமெரிக்க டாலர் பணத்தை, அமெரிக்க ஊடகங்களுக்கு விளம்பரங்களுக்காகவும், சைனா டெய்லியை அச்சிட்டு, இணைப்பாக வெளியிடவும் அளித்துள்ளது. ஒரு வேளை, இதனால் தான் அமெரிக்க முன்னணி பத்திரிகைகளில், அமெரிக்க அதிபர் டிரம்பின் சீனக் கொள்கை பற்றியும், இந்தியாவின் உள்நாட்டு நடப்பில், அரசுக்கு எதிரான கட்டுரைகளையும் தொடர்ந்து வெளியிடப் படுகின்றனவா என்ற கேள்வி எழுவது இயற்கையே.

கடந்த, 1962ல், சீனா - இந்தியா போர் நடந்தது. 50 ஆண்டுகள் கழிந்த பின், நவம்பர் 5, 2012ல் வெளியான, அமெரிக்காவின், 'நியூஸ் வீக்' பத்திரிகையில், பிரபல இந்திய வெளியுறவு ஆய்வாளரான, பிரம்ம சலானி, 1962 போரில், சீனா உபயோகித்த, ஆறு அடிப்படை தத்துவங்களை, தற்காலப் போர் சூழ்நிலைக்கு ஏற்ப விளக்கியுள்ளார். கீழ்காணும் இந்த, ஆறு அடிப்படைத் தத்துவங்கள், நம் லடாக்கில், தற்போது நிகழும் இழுபறியில், சீனா, இந்தியாவிடம் ஏன் இவ்வளவு மெத்தனம் காட்டுகிறது; அதன் உள்நோக்கம் என்ன என்பதை புரிந்து கொள்ள உதவும்.

1. எதிர்பாராத தாக்குதல்

2,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, சீன ராணுவக் கலையின் குரு எனக் கருதப்படும், சுன் ட்ஜூ, போரை நடத்தாமலே வெற்றி பெறுவதே மகத்தானது என்று கூறியுள்ளார். அந்த தத்துவத்தின் குறிக்கோள், போரில் வெற்றி பெற, தீவிர ராணுவத் தாக்குதல்கள் தவிர, அரசியல் மற்றும் உளவியல் தாக்கங்களையும் உபயோகிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்
சீனா, 1962 போரை இந்தியா எதிர்பாராத விதத்தில் துவக்கி, அதே முறையில் முடித்தது. அதையே, சீனா, வியட்நாமுடன், 1979ல் நடத்திய போரில் பின்பற்றியது.

2. முதலில் தாக்குதல்

இது, அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படும் போர் அல்ல. மாறாக, அதன் குறிக்கோள், எதிரிக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதே. சீனப் பிரதமர் சூ என் லாய், இந்தியாவை எதிர்த்து, 1962லும், சீன அதிபர் டெங் ஷியாங் பிங், 1979ல் வியட்நாமை எதிர்த்து நடத்திய போர்கள், 'பாடம் புகட்டவே' நடத்தியதாக கூறினர்.

3. சரியான தருணத்துக்கு காத்திரு


காத்திருந்து, சங்கடமான தருணத்தை தேர்வு செய்து, எதிரியை தடுமாற வைப்பது. உலகின் முழு பார்வையும், 1962ல், அமெரிக்கா - கியூபா சச்சரவில் இருந்த போது, சீனா, இந்தியாவைத் தாக்கி, கலக்கமான உலக சூழ்நிலையை தன் தாக்கத்துக்காக உபயோகித்தது. தற்போதும் கொரோனா வைரஸ் தாக்குதலில், இந்தியாவும், மற்ற நாடுகளும், தத்தளிக்கும் போது லடாக் எல்லையில் ஊடுருவி, பாதுகாப்பு சூழ்நிலையில் அழுத்தம் ஏற்படுத்துவதும், இதே கோட்பாட்டின் அடிப்படையே.

4. ஒருமித்த கவனத்துடன் அதிரடி தாக்குதல்

போரில் உடனுக்குடன் பலன் கிடைக்க வேண்டும். ஆகவே, ஒருமித்து அதிரடியாக செயல்பட வேண்டும். 1949ல் இருந்து, சீன ராணுவம், இதே வழிமுறையை பின்பற்றுகிறது; 1962 போரிலும் இதே உத்தியைப் பயன்படுத்தியது. சீனா, 1962 போரை இந்தியா எதிர்பாராத விதத்தில் துவக்கி, அதே முறையில் முடித்தது. அதையே, சீனா, வியட்நாமுடன், 1979ல் நடத்திய போரில் பின்பற்றியது.

5. கூர்ந்தறிதல்

சீனா, எப்போதுமே தாக்குதலை, பாதுகாப்பு செயலாக காட்டிக் கொள்ளும். அமெரிக்க ராணுவத் தலைமையகம், 'பென்டகன்' 2010ல் அமெரிக்க கீழ் சபைக்கு அளித்த ஒரு அறிக்கையில், 'சீன ராணுவத்தின் தற்கால போர்களில், பல முறை, சீனத் தலைவர்கள், தாக்குதலை, போரைத் தவிர்க்கும் தற்காப்பு நடவடிக்கையாக கூறியுள்ளனர்' என்று கூறியுள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, 1962ல் இந்தியா மீதான தாக்குதல், 1969ல், சோவியத் யூனியனுடன் நிகழ்த்திய எல்லைப் போர், 1979ல், வியட்நாம் மீது நடத்திய தாக்குதல் ஆகியவை அடங்கும்.

சீனா எப்போதுமே தாக்குதலை, 'தற்காப்புக்கான எதிர் தாக்குதல்' என்று கூறி வருகிறது. சீன ஊடகங்களும், சீன வெளியுறவுத் தொடர்பாளரும், அண்மையில் லடாக் எல்லையில் நடந்த மோதலுக்கு இதே வண்ணம் பூசியதை பார்த்திருக்கி
றோம்.

6. துணிச்சல்



சீனப் போர் தத்துவத்தில், துணிச்சல் ஒரு அடிப்படை அங்கமாகும். அந்நாட்டின் முன்னாள் அதிபர் மா சே துங், போர்களில் பல முறை, இடர்களைப் பற்றி கவலை இல்லாமல் துணிச்சலுடன் செயல்பட்டார். அது போலவே, எதிர்மறை விளைவுகளையும், சோவியத் யூனியன் தலையிடும் ஆபத்தையும் கண்டு கொள்ளாமல், முன்னாள் அதிபர் டெங் ஷியாவ் பிங், வியட்நாம் மீது போர் தொடுத்தார்.
இவ்வாறு ஒவ்வொரு முறையும், அவர்கள் துணிச்சலாக செயல்பட்டு வெற்றி பெற்றனர். அந்தப் பின்னணியை பின்பற்றி, வலிமை வாய்ந்த சீனா, தற்போதும் அவ்வாறு செயல்படலாம்.

இந்த, ஆறு உண்மைகளும், 1962 போரை, அலசியதில் கிடைத்தவை. ஆனால், வலிமை வாய்ந்த சீனாவின் போர்முனைப் போக்கை நிர்ணயிக்க, இன்றும் இவை உதவுபவை என்றே கருதுகிறேன்.

அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன், காங்கிரசுக்கு அளித்த, 2019 சீன ராணுவத்தின் முன்னேற்றம் பற்றிய அறிக்கையில், 21ம் நுாற்றாண்டின் முதல் இரு தசாப்தங்களில், சீனா பெரும் வளர்ச்சி கண்டு, அனைத்தையும் உள்ளடக்கிய நாட்டின் சக்தியை பெருக்கிஉள்ளது. ஆகவே, வரும் தசாப்தங்களில் சீனா பலம் வாய்ந்த, செல்வ வளமுள்ள நாடாக வளரும் குறிக்கோளுடன், உலகத் தரம் வாய்ந்த ராணுவத்தின் உதவியுடன், இந்திய - பசிபிக் கடல் பகுதியில் முதன்மை நாடாக திகழும் முயற்சியில் ஈடுபடும் என்று கூறியுள்ளது. அதற்குத் தடையாகக் கூடிய, ஒரே ஆசிய நாடு இந்தியா தான். ஆகவே, 'பணிந்து போனால் நண்பனாய் இரு; இல்லையேல் எதிரியாவாய்' என்று சீனா அதட்டலுடன் செயல்படுமா என்ற கேள்விக்கு விடை காண்பது அவசியம்!

கர்னல் ஆர்.ஹரிஹரன் haridirect@gmail.com இவர், ராணுவ நுண்ணறிவுத் துறையில், 30 ஆண்டு அனுபவம் பெற்றவர். தெற்காசிய நாடுகள் மற்றும் சீனாவின்நிகழ்வுகளை ஆய்பவர்.
                                                              




Thursday, 2 July 2020

சீன படைகள் ஏன் வித்தியாசமானவை?


கர்னல் ஆர் ஹரிஹரன் | தினமலர் | 01-07-2020

பலர் அடிக்கடி என்னிடம் கேட்கும் கேள்வி, 'சீன ராணுவம் நம்ம ராணுவத்தை விட ரொம்ப சக்தி வாய்ந்ததா சார்...' என, பலரும் என்னிடம் கேட்பது வழக்கம். அவர்களுக்கு நான், என் பாணியில், 'சீனா, வெங்காயம் என்றால், நாம், வெள்ளைப்பூண்டு' என, பதிலளிப்பேன். பல்வேறு நாடுகளின் போர்த்திறன் மதிப்பீட்டு நிறுவனமான, 'குளோபல் பயர் பவர்' நடப்பு, 2020ல் -வெளியிட்ட, 138 உலக ராணுவங்களின் மதிப்பீட்டில், சீன ராணுவம், மூன்றாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, முதல் இடத்திலும், ரஷ்யா, இரண்டாம் இடத்திலும் உள்ளன.

நம் இந்தியா, சீனாவை அடுத்து, நான்காவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. அந்த ஆய்வு நிறுவனம், நாடுகளின் போர்த்திறன் மதிப்பீட்டை, ராணுவத்தின் படைகளின் எண்ணிக்கை, போர் விமானங்கள், போர் கப்பல்கள், அணு ஆயுதங்கள், போர்க்கலன்கள் மற்றும் ஆயுதங்களின் அடிப்படையில் மட்டுமே செய்வதில்லை

மூன்றில் ஒரு பங்கு தான் அதிகம்

அவற்றைத் தவிர, அந்த நாட்டின் மனிதவளம், முப்படை பலம், இயற்கை வளம், 'லாஜிஸ்டிக்ஸ்' என்று கூறப்படும், ஏற்பாட்டியல், பொருளாதாரம் மற்றும் புவியியல் சார்ந்த, 50 கூறுகளை கருத்தில் கொண்டு மதிப்பீடு செய்கிறது. குளோபல் பயர் பவர் மதிப்பீட்டின் படி, சீன முப்படைகளின் எண்ணிக்கை, 21.83 லட்சம்; இது, இந்தியாவின் முப்படை பலமான, 14.83 லட்சத்தை விட, மூன்றில் ஒரு பங்கு தான் அதிகமாகும். ஆனால், சீன ராணுவப் படைகள், 14 அண்டை நாடுகளை ஒட்டிய, உலகிலேயே மிக நீளமான, 22 ஆயிரத்து, 117 கி.மீ., எல்லையையும் மற்றும் ஏழு நாடுகளுடன் ஆன கடல் எல்லையையும் பாதுகாக்கின்றன.

இதற்கு மாறாக, நம் இந்திய ராணுவப் படைகள், ஒன்பது அண்டை நாடுகளுடன், 15 ஆயிரத்து, 200 கி.மீ., எல்லையையும், ஏழு நாடுகளுடன் ஆன கடல் எல்லையையும் பாதுகாக்கின்றன. ஆகவே, இரு நாடுகளும் தமது பாதுகாப்புத் தேவைக்கு ஏற்ப, படைகளை உருவாக்கியுள்ளன. இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் அணு ஆயுதங்களை நிலம், கடல் மற்றும் வானில் இயங்கக்கூடிய ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தும் சக்தி உடையவை. இந்தியாவின், 'பிரம்மோஸ்-' ஏவுகணை, கடல் அலைகளின் மேல் தாவிச் செல்லும், 'க்ரூய்ஸ்' ரக ஏவுகணை 500 கி.மீ., பாயக்கூடியது.

இது, உலக அளவில் வலிமை வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. சீனா உருவாக்கிய, டி.-எப்., 26 தரைவழி ஏவுகணை, 5,000 கி.மீ., பாயக் கூடியது. இந்த இரு ஏவுகணைகளின் உருவகமே, இரு நாடுகளின் மாறுபட்ட குறிக்கோள்களை காட்டுகின்றன. இந்தியாவின் குறிக்கோள், தன் செல்வாக்குள்ள தெற்காசியப் பகுதியையும், அதைச் சார்ந்த இந்தியப் பெருங்கடலையும் பாதுகாப்பதாகும். அதற்கேற்ப, பிரம்மோஸ் ஏவுகணையை உருவாக்கியுள்ளது.

சரித்திரம் கூறும் உண்மை

ஆனால், சீனாவின் ஆசையோ உலகிலேயே மிகப் பலம் வாய்ந்த நாடாக முன்னேற வேண்டும் என்பதாகும். அதனால், சீனாவிலிருந்து இன்னொரு கண்டத்தை தாக்கக் கூடிய, டி.எப்., 26 ஏவுகணையை உருவாக்கியுள்ளது. இத்தகைய மதிப்பீடுகளில் உள்ள படைகளின் எண்ணிக்கை அல்லது ஆயுத பலம் மட்டுமே போரில், ஒரு நாட்டின் வெற்றி அல்லது தோல்வியை நிர்ணயிப்பதில்லை. போர்க் களத்தில் குறித்த இலக்குளை அடைய எவ்வாறு ராணுவம் செயல்பட்டது என்பதே, போரின் வெற்றி, தோல்வியை நிச்சயிக்கும். இதற்கு பல்வேறு உதாரணங்கள் உண்டு. சிறிய வளரும் நாடான, வடக்கு வியட்நாம், உலகின் வலிமை வாய்ந்த அமெரிக்க ராணுவத்தை தோற்கடித்தது. இது, சரித்திரம் கூறும் உண்மை. ஆனால், சீன ராணுவத்தை குறைத்து எடை போடக்கூடாது. ஏனெனில், மற்ற ஜனநாயக நாட்டு ராணுவங்களைப் போல அல்லாமல், முப்படைகளையும் கொண்ட, 'மக்கள் விடுதலைப் படை' என்ற சீன ராணுவத்தின் பெயரே, அதன் தனித்தன்மையை காட்டுகிறது. மக்கள் விடுதலைப் படையின் சரித்திரம், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியோடு ஒருங்கிணைந்தது.

சீனாவில், கம்யூனிஸ்ட் கட்சியின் எதேச்சதிகார அரசை நிறுவ நடந்த உள்நாட்டுப் போரில், கொரில்லாப் படையாக, 1927-ல் தோன்றிய இந்த படை, இன்று, உலகில் மிகவும் வலிமை வாய்ந்த ராணுவமாக வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த ராணுவம், இன்று வரை, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் போர்வாளாக செயல்படுகிறது. சீன ராணுவத்தில் பலர் கம்யூனிஸ்ட் கட்சியின்
அங்கத்தினர்களாவர். தேசிய மக்கள் காங்கிரஸ் என்று கூறப்படும் சீன பார்லிமென்டில், மக்கள் விடுதலைப் படையை சேர்ந்த, 268 பேர் அங்கம் வகிக்கின்றனர்.


ஆகவே, சீனாவின் கம்யூனிஸ்ட் அரசு எடுக்கும் முடிவுகளில், மக்கள் விடுதலைப் படையின் பெரும் பங்குண்டு. அந்நாட்டின் அதிபர், ஸி ஜின்பிங், ஆளும் கட்சியின் மத்திய செயற்குழுத் தலைமையைத் தவிர, சீன ராணுவகட்டுப்பாட்டு மையமான, மத்திய ராணுவ கமிஷனுக்கும் தலைவர் ஆவார்.


தற்போது, பாதுகாப்பு முடிவுகளை எடுக்கவும், அதற்கு ஏற்றது போல, மற்ற அரசு அங்கங்கள் பாதுகாப்பு தேவைகளுக்கு ஏற்ப செயலாக்கவும், அதிபர் ஸி கையில் அதிகாரம் உள்ளது.இதற்கு முற்றிலும் மாறாக, இந்திய ஜனாதிபதி பெயரளவில் முப்படைகளின் தலைவர் என்றாலும், அவர் பிரதமரின் விருப்பத்துக்கு இணங்கவே, பாதுகாப்பு மற்றும் முப்படைகள் சார்ந்த முடிவுகள் எடுப்பது நம் ஜனநாயக மரபு. ஆகவே, மக்கள் விடுதலை படையின் பிரமாண்ட வளர்ச்சியை, நம் ராணுவத்தின் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்ப்பது தவறு. ஏனெனில், இரு நாடுகளும் மிகப்பெரிய ஆசிய நாடுகள் தான் என்றாலும், அவற்றின் அரசியல், கலாசாரம், சரித்திரம் மற்றும் அரசியல் சட்டங்கள் வெவ்வேறானவை.

அடிப்படை போர் கோட்பாடுகள்

ஆகவே, இரு நாடுகளும், தங்கள் நாட்டின் பாதுகாப்பு தேவைகளைக் கருத்தில் கொண்டு, அதற்கு ஏற்றவாறு தம் படைகளை உருவாக்கிஉள்ளன. உலக ராணுவங்கள், தங்கள் நாட்டு பாதுகாப்புத் தேவைகளை யும் போர் அனுபவங்களையும் ஆய்ந்து, ராணுவத்தின் அடிப்படை போர் கோட்பாடுகளை உருவாக்குகின்றன. உதாரணமாக, இந்திய ராணுவத்தின் போர் கோட்பாடுகள், ஏறத்தாழ, 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட, ஆங்கில காலனி அரசின் அனுபவ ரீதியாக வழிவந்தவை. இந்தியாவும்மற்ற ராணுவங்களைப் போல், அவற்றில் மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப, புதிய மாற்றங்களை செய்துள்ளது. ஆனால், சீனாவின் மக்கள் விடுதலைப் படையின் போர் கோட்பாடுகள், அதன் கட்சியுடன் இணைந்த பின்னணி சார்ந்ததாகும்!- சீனாவின் வியூகம், நாளை!

கர்னல் ஆர்.ஹரிஹரன் haridirect@gmail.comஇவர், ராணுவ நுண்ணறிவுத் துறையில், 30 ஆண்டு அனுபவம் பெற்றவர். தெற்காசிய நாடுகள் மற்றும் சீனாவின் நிகழ்வுகளை ஆய்பவர்.