Friday, 17 July 2020

இந்தியாவை நெருங்கும் சீன கடற்படை


கர்னல் ஆர் ஹரிஹரன் | தினமலர் | 17-07-2020

நம் நாட்டின் வட கோடியில் உள்ள, லடாக் எல்லையில், நான்கு இடங்களில் குவிக்கப்பட்டிருந்த சீன ராணுவப் படைகள் விலக்கிக் கொள்ளப்படும் என, வந்துள்ள செய்தி வரவேற்கத்தக்கது.

அது, சீனாவுடன் போர் மூளும் அபாயத்தை தற்காலிமாக தவிர்த்தாலும், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லைப் பிரச்னைகள் இன்னும் தீரவில்லை என்பது தான் உண்மை. ஆகவே நாம் விழிப்புடன் செயல்படுவது அவசியம். நம் கடல் எல்லைக்குள் அவ்வப்போது, சீன கப்பல்கள், அந்நாட்டின் போர் கப்பல்கள், ஆராய்ச்சி மற்றும் மீன்பிடி படகுகள் ஊடுருவி, நம் கடற்படையின் தயார் நிலையை அடிக்கடி சோதித்து வருகின்றன. இது, பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய சங்கதி.

இந்தியாவின் கடற்கரை, 7,516 கி.மீ., இதில் தீவுப்பகுதிகளான அந்தமான்- நிகோபார் மற்றும் லட்சத்தீவுகள் ஆகியவற்றின், 2,054 கி.மீ., கடற்கரையும் அடங்கும். சர்வதேச ஒப்பந்தப்படி, இந்தியாவின் கடல் எல்லையை ஒட்டிய, 2,172 மில்லியன் சதுர கி.மீ., கடல் பரப்பில் உள்ள கடல் வளத்துக்கும், கடலின் அடியில் உள்ள கனிமங்களுக்கும் இந்தியாவுக்கு முன்னுரிமை உண்டு. ஆகவே, கடல் வழியே நம் தீவுப்பகுதிகள் உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்புக்கு உண்டாகும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், நமக்கு, சொந்தமான கடல் வளங்களின் பாதுகாப்பதும் நம் கடற்படை மற்றும் கடலோர காவல் படைகளின் கடமையாகும்.

கடந்த மாதம், நம் கடற்படை தலைவர், அட்மிரல் கரம்பீர் சிங், சீன கடற்படையின் போர் கப்பல்கள் சில, நம் கடல் எல்லையிலிருந்து, 200 கடல் மைல் தொலைவு வரை உள்ள, இந்தியாவின், பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் அவ்வப்போது நுழைவதாகவும், அவற்றை நம் கடற்படை எச்சரித்து வெளியே அனுப்புவதாகவும் கூறி உள்ளார். இது புதிது அல்ல.கடந்த, 2017-ல் இருந்தே, ஏறக்குறைய, எட்டு சீன போர் கப்பல்களும், ஒரு நீர்மூழ்கி கப்பலும் தொடர்ந்து, நம் இந்திய பெருங்கடலில் உலவி வருகின்றன. நம் கடற்படை அவற்றை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பரில், அந்தமான் தீவுகளின் கடல் எல்லையை ஊடுருவிய சீன சர்வே கப்பலை நம் கடற்படை எச்சரித்து வெளியே அனுப்பியது. இந்திய போர்கப்பல்களும், கண்காணிப்பு விமானங்களும், இந்திய பெருங்கடலில் நெடுங்காலமாக தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. சீன போர் கப்பல்கள், 2008-லிருந்து, இந்திய பெருங்கடலில், சீன சரக்கு கப்பல்களை, கடல் கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்க, வங்காள விரிகுடாவில் துவங்கி, அரபிக்கடலின் மேற்கே உள்ள, ஏடன் வளைகுடா வரை ரோந்து பணியில் உலவி வருகின்றன. இதுவரை, 35 சீன போர் கப்பல் அணிகள் அந்தப் பணியில் பங்கெடுத்துள்ளன. ஆகவே, சீன கடற்படைக்கு இந்தியப் பெருங்கடல் பரிச்சயமானதே.

சீனாவுடன் ஒப்பந்தங்கள்


இந்தியாவின் கடல் எல்லையைச் சுற்றியுள்ள அண்டை நாடுகளில் சீனா வளர்ச்சிப்பணி என்ற பெயரில் அந்நாட்டுத் துறைமுகங்களை புதுப்பிக்க கடன் மற்றும் கட்டுமான உதவி செய்து வருகிறது. சீனாவின், 'முத்துச்சரம்' என்று அழைக்கப்படும், இந்த முயற்சியின் முத்துக்களில், பர்மாவின் மேற்கு கடற்கரையில் உள்ள, கியாக்பூ துவங்கி, வங்கதேசத்தின் கிழக்கு கோடியில் உள்ள சொனாடியா, இலங்கையில் அம்பந்தோட்டை மற்றும் பாகிஸ்தானில் குவாதார் ஆகியவை அடங்கும். இலங்கை, சீனாவிடம் பெற்ற கடனை ஈடுகட்ட அம்பந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு, 99- ஆண்டு குத்தகைக்கு அளித்துள்ளது. குவாதார் மற்றும் கியாக்பூ ஆகிய துறைமுகங்களின் கதியும் இதே நிலை தான்.

இந்த நாடுகளின் கடற்படைகளுக்கு சீனா குறைந்த விலையில் போர் கப்பல்களை அளித்துள்ளது. இவற்றில் பாகிஸ்தானுக்கு அளித்த, எட்டு நீர்மூழ்கி கப்பல்களும், வங்கதேசத்திற்கு விற்ற, இரண்டு நீர்மூழ்கி கப்பல்களும் அடங்கும். மேலும் பல போர் கப்பல்களையும், கடல்போருக்கான ஏவுகணைகளையும், பாகிஸ்தானுக்கு அளிக்க சீனாவுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. பாகிஸ்தான், வங்கதேசம், பர்மா, இலங்கை ஆகிய நாடுகளில் ரோந்துப் பணியில் ஈடுபடும் சீன போர் கப்பல்கள், அவ்வப்போது வந்து போகின்றன

ஆய்வாளர்கள் கணிப்பு.

மாலத்தீவில், சீனா, நான்கு மில்லியன் அமெரிக்க டாலருக்கு, 'பெய்துபிடோலு' என்ற தீவை, 2066 வரை குத்தகைக்கு எடுத்துள்ளது. அங்கே, சீனாவின் ஆளுமையில் நடந்த கடல் மீட்பு பணிகளின் விளைவாக, அந்த தீவின் பரப்பளவு, 38 ஆயிரம் சதுர கி.மீயிலிருந்து 1 லட்சம் சதுர கி.மீ ஆக வளர்ந்துள்ளது. அங்கே தற்போது, சீனா அமைத்து வரும் கட்டமைப்புகள் அது ராணுவ தளமாக பயன்படுத்தப்படலாம் என்பது ஆய்வாளர்கள் கணிப்பு. குவாதர் துறைமுகம் சீன கடற்படை தளமாக மாறி வருகிறது. இவற்றைத் தவிர, கிழக்கு ஆப்ரிக்காவில், சூயஸ் கால்வாயின் நுழைவுவாயிலில் ட்ஜூபூடி நாட்டில், சீனா 590 மில்லியன் டாலர் செலவில், சீனாவின் முதல் வெளிநாட்டு ராணுவ தளத்தை அமைத்துள்ளது. 2017ல் இருந்து இயங்கி வரும் இந்த தளத்தில், தற்போது விமானந்தாங்கி கப்பல்கள் உபயோகத்திற்கான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது, இந்திய பெருங்கடலில் சீனா தனது வளரும் அரசியல் செல்வாக்கையும், உடமைகளையும் பாதுகாக்க, சீன கடற்படையை உபயோகிக்க தயங்காது என்பதைக் காட்டுகிறது.

இந்தியா நடத்திய, பாகிஸ்தானில் உள்ள பாலாகோட் விமானத் தாக்குதலுக்கு பிறகு, சீனா - -பாகிஸ்தான் பாதுகாப்பு உறவுகள் மிகவும் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீன கடற்படைகள் ஒருங்கிணைந்த கடற்படைப் பயிற்சி மேற்கொண்டனர். கடந்த ஆண்டு, பாகிஸ்தானை அடுத்த, ஓமான் வளைகுடாவிலும், இந்திய பெருங்கடலிலும் சீனா, ரஷ்யா மற்றும் இரான் நாடுகளின் கடற்படைகள் இணைந்து, நான்கு நாள் கடற் பயிற்சி மேற்கொண்டனர்.

ஊடக செய்திகளின்படி, 2015ல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ ஆறு சீன, 'ஆய்வு' கப்பல்களும், 600 சீன மீன்பிடி விசைப்படகுகளும் இந்திய பெருங்கடலில் காணப்படுகின்றன. இத்தகைய ஆய்வுக்கப்பல்கள் கடலின் சலனத்தையும், கடலடியில் உள்ள கனிமவளங்களை கண்டுபிடிக்க உபயோகப்படுத்தப் படுகின்றன. சீன மீன்பிடி படகுகள் தேவைப்படும் போது 'மரைன் மிலிஷியா' என்று கூறப்படும் துணை கடற்படையாக செயல்படுகின்றன.

தென் சீனக்கடலில் சீன கடற்படை மற்ற அண்டை நாடுகளை அச்சுறுத்துவதற்கு உதவியாக அவை உபயோகிக்கப்பட்டுள்ளன. சீன கடற்படைக்கு தேவையான போது, அவை நம் பாதுகாப்பு மற்றும் முக்கிய அரசுப் பிரிவுகளின் இணையதளங்களை ஒட்டு கேட்கவும் உதவும். ஆகவே, இந்தியாவை சூழ்ந்துள்ள கடல் பகுதிகளில் சீன கப்பல்கள் நடமாட்டம் அதிகமாகி வருவதைப் பற்றி நாம் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

இந்திய பெருங்கடலில், தொன்றுதொட்டு, இந்தியாவின் பல்வேறு அரசர்கள், முக்கியமாக, சோழர் மற்றும் பல்லவ அரசுகள், தன் கடற்படைகளை உபயோகித்து தற்கால தாய்லாந்து, இந்தோனேஷியா வரை தன் செல்வாக்கை நிலை நாட்டினர். சொல்லப் போனால்,சோழர் கால கலாசார சின்னங்கள், சீனாவில் கூட கண்டறியப்பட்டுள்ளன. ஆகவே, இந்தியர்களுக்கு கடல் வழி வணிகமும் அதைக் காக்க கடற்படைகளின் இயக்கமும் கைவந்த கலையே. தற்போது, இந்திய பெருங்கடலில், சீன கடற்படையை எதிர்கொள்ளும் பலம் வாய்ந்தது, நம் இந்திய கடற்படை தான்.

நம் கடற்படை, 1612ம் ஆண்டு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் உடைமைகளை பாதுகாக்க, தனியார் படையாக ஆரம்பித்து, 1830ல், ஆங்கில காலனி ஆதிக்கத்தினரால் கடற்படையாக உருவாக்கப்பட்டது. அடுத்த, 250 ஆண்டுகளில், நம் கடற்படை பல போர்களில் ஈடுபட்டு, இன்று இந்திய பெருங்கடலில் வலிமை வாய்ந்த கடற்படையாக திகழ்கிறது. புவியியல் பார்வையில், இந்தியாவின் பாதுகாப்பு, இந்திய பெருங்கடல் நாடுகளான இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகியவற்றின் பாதுகாப்புடன் ஒருங்கிணைந்தது. ஆகவே, இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுகள் ஆகிய நாடுகளோடு கடல்வழி பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியா முக்கிய பங்கு

அதன்படி, நம் கடற்படையும் அந்நாட்டு கடற்படைகளும் இணைந்து கடல்வளப் பாதுகாப்புக்கு ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், இந்தியப் பெருங்கடல் நாடுகளான ஓமன், மோரிஸ் மற்றும் செய்ஷெல்ஸ் ஆகியவற்றின் பாதுகாப்பில் இந்தியா முக்கிய பங்கு ஆற்றி வருகிறது. இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்களின்படி, அந்த நாடுகளின் தளங்களை, நம் கடற்படை உபயோகிக்கலாம். இதில் பிரான்சுக்கு சொந்தமான, ட்ஜிபூடி ராணுவதளமும் அடங்கும்.இத்தகைய சூழலில், நம் அண்டை நாடுகளில் கடந்த பத்து ஆண்டுகளில் சீனா வலிமையாக காலுன்றியுள்ளது. இது தவிர்க்க முடியாதது என்றாலும் இந்த நாடுகளில் நாம் சீனாவின் செயல்பாடுகளை கூர்ந்து கவனிப்பது மிக அவசியம்.

முக்கியமாக, இலங்கை -சீனா பன்முனை உறவுகள் பெருமளவில் வளர்ந்துள்ளன. முக்கியமாக, மகிந்த ராஜபக்ச அதிபராயிருந்த கால கட்டத்தில் இலங்கையின் பாதுகாப்பைத் தவிர, அரசியல், பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிப பணிகளிலும் சீனாவின் பங்கு அதிகமாயிற்று. இலங்கையில், கொழும்பு கன்டெய்னர் துறைமுகமும், அம்பந்தோட்டை துறைமுகமும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளன. தற்போது, இலங்கை அதிபர், கோட்டாபய ராஜபக்ச ஆட்சியிலும், சீன ஆதிக்கம் எவ்வளவு வளர்கிறது என்பதை இந்தியா தொடர்ந்து கவனித்து வருகிறது.

மாலத்தீவிலும் இந்தியாவின் செல்வாக்கை குறைக்க சீனா எடுத்துள்ள முயற்சிகள் ஓரளவு வெற்றி கண்டுள்ளன. இந்தியா -- பசிபிக் கடற்பகுதிகளில் இதுவரை ஆதிக்கம் செய்து வந்த அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளைத் தவிர இந்தியாவுக்கும், சீனாவின் பெருகி வரும் படைப்பலம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, அவை ,'குவாட்' என்று அழைக்கப்படும் நான்முக பாதுகாப்பு வட்டத்தை அமைத்துள்ளன. அதில் பங்கு பெறும் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்து பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்தி வருகின்றன. குவாட் அமைப்பில், இந்தியாவுக்கு முக்கியமான பங்கு உள்ளது. அதற்கு காரணம், வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள, 572 தீவுகளை கொண்ட அந்தமான் நிகோபார் தீவுப்பகுதி, பர்மாவிலிருந்து, 22 கடல் மைல் துாரத்திலும், தெற்கில், இந்தோனேஷியா, 90 கடல் மைல் துாரத்திலும் உள்ளதாகும்.

உலகின், 60 விழுக்காடு வணிக கப்பல்கள், மலாக்கா ஜலசந்தி வழியே கிழக்காசிய நாடுகளையும், சீனா, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளையும் அடைய இந்த நீர்வழியை பயன்படுத்துகின்றன. ஆகவே தான், அந்தமான் நிகோபார் தீவுகளை இந்தியாவின் மூழ்கடிக்க முடியாத விமானம் தாங்கி கப்பல் என்று கடற்போர் நிபுணர்கள் கூறுகின்றனர். கண்காணிப்பில் இருந்து தப்ப முடியாதுஆகவே, அந்தமான் தீவுகளில் உள்ள நம் முப்படைதளம், சீன கப்பல்கள் இந்திய பெருங்கடலில் உபயோகிக்கும் நுழைவுவாயிலான மலாக்கா ஜலசந்தியையும், இந்தோனேஷியாவில் உள்ள ஜலசந்திகளையும் தொடர்ந்து கண்காணிக்க முடிகிறது. இதற்காகவே, இந்தியா, அமெரிக்காவின், பி - -81 அதிநவீன கண்காணிப்பு விமானங்களை வாங்கியுள்ளது. ஆகவே, இந்தியாவை அணுகும் சீன கப்பல்கள் எளிதில் நம் கண்காணிப்பில் இருந்து தப்ப முடியாது.

சீனாவின் தற்போதைய கடற்படை, 1949 ஏப்ரலில், சொற்பமான சிறு கப்பல்களுடன் உருவாயிற்று. அதுவரை உருப்படியான கடற்படை கிடையாது. அதன் பிறகு, 20 ஆண்டுகளில் சோவியத் யூனியன் உதவியுடன், சீன கடற்படை புதுமை பெற்றது. சோவியத் நாடு அதற்கான போர் கப்பல்களையும், படையினர் பயிற்சியையும் அளித்தது.கடந்த, 2008 வரை சீனாவின் குறிக்கோள் தன் உரிமையாக கருதும் தைவான் நாட்டை கைப்பற்றுவதாகும். ஆகவே, அதற்கேற்றது போல் கடற்படை உருவாக்கப்பட்டிருந்தது.சீனாவின் பொருளாதாரம் மற்றும் வணிக வளர்ச்சி உலக அளவில் பெரும் தாக்கம் ஏற்படுத்தவே, 2012-ல், சீனாவின் தலைமையை, அதிபர் ஷி ஜின்பிங் ஏற்ற பிறகு அந்த நாட்டின் ஆசை உலக அளவில் சீனாவை முன்னளவில் நிறுத்துவதாக மாறியது.

கடல் வலிமையில் இரண்டாம் இடம்

ஆகவே, கடற்படை பெருமளவில் விரிவுபடுத்தப்பட்டு, தற்போது சீனா உலகளவில் கடல் வலிமையில் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது என்று கூறலாம். சீன கடற்படை பலம் பெருக, தென் சீனக்கடலை தன் முழு ஆதிக்கத்தில் கொண்டு வரும் முயற்சியில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஜப்பான், தைவான் மற்றும் சிறிய அண்டை நாடுகளான வியட்நாம், பிலிபைன்ஸ், புரூனை, ஆகியவற்றுக்கு சொந்தமான கடல் பகுதிகளை, சீனா, சொந்தம் கொண்டாடி அவ்வப்போது சீன போர் கப்பல்கள் பயமுறுத்தி வருகின்றன. தென் சீன கடலில் சர்ச்சைக்குரிய குட்டித்தீவுகளை ஆக்கிரமித்து அவற்றை விரிவாக்கம் செய்துள்ளது. 'குளோபல் பயர் பவர்' என்ற, நாடுகளின் ராணுவத்திறன் மதிப்பீட்டு நிறுவனத்தின்படி தற்போது, சீன கடற்படை,777 கப்பல்களையும், 594 விமானங்களையும் கொண்ட படையாகும்.

ஆனால், அவற்றில் கடல் போருக்கு தகுதியானவை இரண்டு விமானம் தாங்கி கப்பல்கள், 36 நாசகாரிகள், 52 போர்கப்பல்கள் மற்றும் 50 சிறிய, 'கார்வெட்' ரக போர் கப்பல்கள், 220 எல்லை பாதுகாப்பு படகுகள், 74 நீர்மூழ்கிகள் அடங்கும். அத்துடன், இந்திய கடற்படையை ஒப்பிட்டால் அது சீன கடற்படையின், நாலில் ஒரு பகுதியே. ஏனெனில், அது தெற்காசியாவில் இந்திய பெருங்கடலின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது. நம் கடற்படையிடம், மொத்தம், 295 கப்பல்கள் உள்ளன; அவற்றில் ஒன்று, விமானந்தாங்கி கப்பல், 10 நாசகாரிகள், 13 போர்கப்பல்கள், 17 நீர்முழ்கிகள், 19 கார்வேட் ரக சிறிய கப்பல்கள், 139 எல்லைப் பாதுகாப்பு படகுகள் அடங்கும். சீனாவுடன் ஒப்பிட்டால், இது சிறியதாகவே தோன்றும்.

ஆனால், சீன கடற்படைக்கு தென்சீன கடலில் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, தைவான் ஆகிய நாடுகளின் அதிநவீன வலிமையான படைகளை ஈடுகட்ட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகவே, இந்தியப் பெருங்கடலில் ஒரே நேரத்தில் சீனா ஈடுபடுத்தக் கூடிய போர் கப்பல்கள் குறைவாகவே இருக்கும். மேலும், சீன கடற்படையின் குறைபாடு, அதன் மிகவும் குறைந்த கடற்போர் அனுபவமாகும். அதனிடம், இரண்டு விமானந்தாங்கி கப்பல்கள் இருந்தாலும் அவற்றுக்கு போர் பயிற்சி அனுபவம் கிடையாது.

ஆனால், இந்தியா, 50 ஆண்டுகளுக்கு மேலாக, விமானந்தாங்கி மற்றும் நாசகாரி போர்க் கப்பல்களை இயக்கி வருகிறது. அவை, 1965 மற்றும், 1971 போரில் நம் வெற்றிக்கு மகத்தான சேவை புரிந்தன. 1971-ல், நம் கடற்படை சாகசமாக நடத்திய, கராச்சி துறைமுக தாக்குதல், பாக்., கடற்படையை தடுமாற வைத்தது. அந்தப்போரில், மொத்தமாக, பாக்., கடற்படையின், இரண்டு நாசகாரிகள், 1 நீர்மூழ்கி கப்பல், 3 ரோந்து படகுகள் மற்றும் 7 சிறிய போர் கப்பல்களை நம் கடற்படை அழித்தது. ஆகவே, இந்திய பெருங்கடலில் ஊடுருவும் ஒவ்வொரு சீன போர்கப்பலும் இந்திய கடற்படையின் கண்ணில் படாமல் தப்ப வேண்டும் என்ற குறிக்கோளுடன் தான் செயல்படும்!




No comments: